ஒற்றைப் பத்தி கீதையும் - பைபிளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

ஒற்றைப் பத்தி கீதையும் - பைபிளும்!

கேள்வி: ‘பகவத் கீதை புனித நூலை, பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்' என்று கருநாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியது சரியா?

பதில்: பகவத் கீதையையும், பைபிளையும் ஒப்பிடாதீர்கள் என்று கருநாடக அமைச்சர் பேசியதில், கீதை உயர்ந்தது என்ற தொனி தெரிகிறது. இது தவறு. இதை நாம் ஏற்கவில்லை.

- ‘துக்ளக்', 18.5.2022, பக்கம் 13

என்னே தளுக்கு!

சர்வ மதத்தையும் ஏற்பது போன்ற சங்கீத பரிவர்த்தனம் வார்த்தை ஜாலம்!

கீதை என்ன சொல்லுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்(Born out of womb of Sin).

இவ்வளவுக் கேவலமான ஊத்தை நாற்றம் எடுக்கும் இழிவான சொற்களால், மனிதத் தன்மைக்கு எந்த வகையிலும் உகந்ததல்லாத - நாகரிகமற்ற ஒன்றைக் கூறியவன் பகவான் கிருஷ்ணனாம்.

இதிலிருந்து இந்தக் கூட்டம் கூறும் பகவானின் யோக்கியதை என்னவென்று தெரியவில்லையா!

அது என்ன பாவ யோனி! பார்ப்பான் பிறந்தது எந்த யோனி? என்ற கேள்விகள் எழாதா?

மக்களை எல்லாம் கடவுள்தான் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் தன்னால் படைக்கப்பட்ட மக்களை இவ்வளவு கேவலமாகப் பேதப்படுத்துவதா?

இந்தக் கேவலத்தை எடுத்துச் சொன்னால் உடனே ‘ஹிந்துத் துவேஷம் - ஹிந்துத் துவேஷம்!' என்ற ஒப்பாரி ஒரு கேடா?

ஒருமுறை மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் திருவாளர் இராம.கோபாலன், முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து பகவத் கீதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர்  கலைஞர், ஈரோட்டுக் குருகுலத்தில் முறையாகப் படித்தவர் ஆயிற்றே! என்ன செய்தார்?

 இன்னொரு நூலை இராம.கோபாலனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்! அது வேறு நூல் அல்ல - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட  ‘‘கீதையின் மறுபக்கம்'' என்பதுதான் அந்த நூல். அந்த நூலின் ஒரே ஒரு வரிக்குக்கூட இதுவரை பதில் உண்டா?  

மயிலாடன்


No comments:

Post a Comment