புதுடில்லி,மே25- காங்கிரஸ் கட்சி சார்பில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் விவகாரக் குழு மற்றும் சிறப்பு பணிக் குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று (24.5.2022) அறிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ‘நவ் சங்கல்ப்’ என்ற சிந்தனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் விவகாரக் குழு மற்றும் சிறப்பு பணிக் குழுவை சோனியா அமைத்துள்ளார். அதன்படி, அரசியல் விவகாரக் குழுவில், மாநிலங்களவை மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மேனாள் தேர்தல் வியூகர் சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு முடிவெடுக்கும் அமைப்பாக இருக்காது என்றும் தனக்கு உதவும் அமைப்பாக இருக்கும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பணிக்குழுவுக்கு மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், ஜிதேந்திரா சிங், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், பிரியங்கா காந்தி, அஜய் மாகென், ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் இடம் பெற்றுள் ளனர். மேனாள் தேர்தல் வியூகர் சுனில் கனுகோலு, இந்தக் குழுவிலும் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் பரப்புரை பயணத்திற்கு, 9 உறுப்பினர் அடங்கிய ஒன்றிய திட்டக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment