1947 'சுதந்திரத்திற்குப் பின்பு' முதன்முதலாக மேட்டூர் அணை மே மாதம் திறப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

1947 'சுதந்திரத்திற்குப் பின்பு' முதன்முதலாக மேட்டூர் அணை மே மாதம் திறப்பு!

தனிப்பட்ட பெருமுதலாளிகள் குடோன்கள்மூலம் லாபம் சம்பாதிக்கும் நிலையை மாற்றி

 அரசே விவசாயிகளுடன் இணைந்து செய்தால் அரசுக்கும் - விவசாயிகளுக்கும் லாபம்!

1947 சுதந்திரத்திற்குப் பின்பு முதன்முதலாக மேட்டூர் அணை 

மே மாதம் திறப்பு! தனிப்பட்ட பெருமுதலாளிகள் குடோன்கள்மூலம் லாபம் சம்பாதிக்கும் நிலையை மாற்றி,  அரசே விவசாயிகளுடன் இணைந்து அதனை செய்தால் அரசுக்கும் - விவசாயிகளுக்கும் லாபம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு வேளாண் துறையின் சாதனை சரித்திரத்தில் மேலும் ஓர் அற்புதத்தை - அரிய சாதனையை - இயற்கையோடு இணைந்த கூர்த்த ஆளுமையினரான தி.மு.க. தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' செய்து காட்டியுள்ளார்!

சேலம், திருச்சி,  காரைக்கால் போன்ற பகுதி களான காவிரி டெல்டா விவசாயிகளின் மனங்கள் குளிர்ந்து மகிழ்ச்சியில் மிதக்கின்றன.

சுமார் 80 ஆண்டுகளுக்கு - ‘சுதந்திரத்திற்கு முன்பு' 1942, 1943 -களில் நடந்த ஒன்று மீண்டும் இப்போது நிகழ்ந்துள்ளது.

மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12 இல் அல்லது அதற்குப் பிறகுதான் - பருவ மழை தவறிய காலங்களில் திறக்கப்பட்டு, டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்வது உண்டு.

ஆனந்தக் கண்ணீரில் 

விவசாயிகள்! 

இவ்வாண்டு முன்கூட்டியே மழை பெய்த தால் இந்த அரசு அதற்கு முன்பே வாய்க்கால்கள் மற்ற பகுதிகளில் போதிய அளவு தூர் வாரும் பணிகளை அதிகாரிகளை வைத்து கண் காணித்ததோடு, முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சரியாகக் கண்காணிப்பு செய்து, நீர் வரத்தினை - எந்த நேரத்திலும் ஏற்கும் ஆயத்த உழவாரத்திற்கான உதவி முன்னோட்டப் பணிகளையும் செய்து முடித்தார் நம் முதலமைச்சர். 117 கன அடியாக மேட்டூர் அணை நீர் இருப்பு இருந்ததை வைத்து, நேற்று (24.5.2022) தண்ணீர் திறந்து வைத்து டெல்டா விவசாயிகளை ஆனந்தக் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளார்.

அப்பகுதியில் (டெல்டா) பிறந்து விவசா யியாக இருந்தாலும், அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுபெரும் பெரியாரிஸ்ட் பேராசிரியர் சிகாகோ சோம.வேலாயுதம் அவர்கள் (எண்பது அகவையைத் தாண்டியவர்) மகிழ்ச்சியோடு நமக்கு எழுதிய கடிதத்தை ‘ஆசிரியருக்குக் கடிதம்' பகுதியில் - பெட்டிச் செய்தியாக - 2 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்  - காண்க.

முதலமைச்சரின் இந்த விவேகமான, வேகமான முடிவின் காரணமாக -

உழவர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி!

டெல்டா பாசனத்தால் தற்போது நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட் டங்களில் உள்ள 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது வேளாண்மையில் ஈடுபட்ட பல்லாயிரம் உழவர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.

முன்கூட்டியே இப்படி திறக்கும் இந்த நல்வாய்ப்பின் காரணமாக, அறுவடை செய்யும் நெல் மழையில் நனைந்து, விற்பனையில் அரசுக்கும் சரி, விவசாயிகளுக்கும் சரி இக்கட்டான நிதிச் சுமையையும், விலை வீழ்ச்சிமூலம் வேதனையையும் ஏற்படுத்தாமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.

இதைத்தான் சிகாகோவிலிருந்து முதல மைச்சரைப் பாராட்டி எழுதியுள்ள கடிதம்மூலம் தெளிவுபடுத்துகிறார் பாரம்பரிய வேளாண் குடும்ப விவசாயப் பெருமகனார்!

முப்போகம் கூட செய்யும் வாய்ப்பும் இதன்மூலம் ஏற்படவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

முந்தைய ஆட்சியில் - தூர்வாரும் பணிகள் எப்படி, எப்போது, எத்தகைய அவசர கோலத்தில் ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெற்ற அலங்கோலங்கள்மூலம்  நிறைவேற்றப்பட்ட அசல் பகற்கொள்ளைகள் - கணக்கில் எழுதிக் காட்டப்பட்ட மக்கள் வரிப் பண சூறைதான் நடந்தது.

இப்போது அதற்கு இடமில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் அறுவடை முடிந்து, அந்தந்த பகுதி விவசாயிகளின் கருத்தறிந்து தூர் வாருதல் போன்ற மராமத்துப் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் - அவர்கள் எக்கட்சியினராயினும் இணைந்து, நிலத்தின் வளத்தைப் பெருக்க உதவிடும் வகையில் செய்தல் அவசியம்.

முதலமைச்சரின் மகுடத்தில் 

நாளும் பதிக்கப்படும் ஒளிமுத்துக்கள்!

வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், விவசா யிகளுக்குரிய பிரச்சினைகளை அவ்வப்போது கவனித்துப் பரிகாரம் தேடல், கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்ற பல சாதனைகள் தி.மு.க. ஆட்சியில், குறிப்பாக மு.க.ஸ்டாலின் என்ற முதலமைச்சரின் மகுடத்தில் நாளும் பதிக் கப்படும் ஒளிமுத்துக்களாகும்!

டெல்டா பகுதியில் நெல் மூட்டைகளை வைக்க- விற்பனையை ஒழுங்குபடுத்த குடோன் களை ஏராளம் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் பரிசீலிக்கவேண்டும்.

நிதி பற்றாக்குறையைப் போக்க, விவசாயி களைப் பங்குதாரர்களாக்கி, கூட்டுறவு அமைப் பாகவே வாய்ப்புத் தந்தால், முதலீடு கிடைக்கும் - அவர்களும் பொறுப்புடன் ஆங்காங்கு பராமரிப்பு, கண்காணிப்புகளை செய்ய வாய்ப்பு ஏற்படும்.

‘திராவிட மாடல்' 

திட்டம்

தனிப்பட்ட பெருமுதலாளிகள் பெருங் குடோன்களை கட்டி லாபத்தை அவர்கள் அடைவதற்குப் பதிலாக, அனைத்தும் விவ சாயிகளுக்கே லாபமாக, பொறுப்பாக ஆக்கி னால், அது ஒரு முன்மாதிரி ‘திராவிட மாடல்' திட்டமாகவும் ஆகக்கூடும்.

இடம் அரசின் இடம் - கட்டுமானம், கூட்டுறவுத் துறையில் பங்கு முதலீடுமூலம் அங்கம் - அதனை மக்களாட்சித் தத்துவப்படி, விவசாயிகளையும், அதிகாரிகளையும் இணைத்து செய்தால், நட்டம் ஏற்படாது! பராமரிப்பும் சரியாக அமையும்; நெல் மூட்டைகள் இல்லாதபோது, அந்தக் கிடங்கு களை மற்ற பொது உபயோகத்திற்கும்கூட (Multi-purpose) விட்டு வாடகை பெற்று, பராமரிக்க உதவிடும் வாய்ப்புப்பற்றியும் நிர்வாக முறையில் அரசு யோசிக்கலாம் - திடீர் மழை வந்தாலும் விவசாயிகளின் நெல் மூட்டைகளின் உலர்தன்மை வாய்ப்பும் பாதிக்கப்படாது செய்ய யோசிக்கலாம்.

இந்த ஆட்சி மக்களாட்சி - விவசாயி களுக்கான ஆட்சி!

உழவர் பெருமக்களோடு நாமும் இணைந்து வாழ்த்துவோம்!

‘விவசாயம் பாவகரமானது' என்ற மனுதர்மத்திற்கு எதிராக ‘உழுவோர் உலகத் தோர்க்கு அச்சாணி' என்ற திராவிட (திருக்குறள்) மாடல் ஆட்சி இதிலும் வரலாறு படைக்கட்டும்!

முதலமைச்சரை வாழ்த்தும் உழவர் பெரு மக்களோடு நாமும் இணைந்து வாழ்த்துவோம்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment