இந்தியாவில் மதச் சுதந்திரம் சந்தி சிரிக்கிறது இந்தியா குறித்து அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

இந்தியாவில் மதச் சுதந்திரம் சந்தி சிரிக்கிறது இந்தியா குறித்து அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு அறிக்கை

 

நியூயார்க், ஏப். 30 - மோடி தலைமையிலான பாஜக அரசின் ஹிந்துத்துவ வாதப் போக்கால் 2021-ஆம் ஆண்டும், இந்தியாவில் மதச் சுதந்திரம் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக, அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதச் சுதந்திர விஷயத்தில் கவலையளிக்கும் 11 நாடுகளின் பட்டியலில், இந்தியா உள்ளதாகவும் அமெரிக்க ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு மதச் சுதந்திரத்துக் கான ஆணையம் (ஹிஷிசிமிஸிதி), உலக நாடுகளில் நிலவும் மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்துவதோடு, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசுக்கு அதுகுறித்து பரிந்துரைகளை வழங்கி வருகிறது.  அந்த வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை அந்த ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

அதில், “இந்திய அரசு மதச் சுதந்திரத்தில் நிறுவன ரீதியாக, தொடர்ந்து, அருவருப்பான மனித உரிமை மீறல்களைச் செய்து வருகிறது. மதவாத வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பாதுகாத்தும் வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது. 

“கடந்த 2021ஆம் ஆண்டு, மோடி அரசு தன்னுடைய கொள்கைகளின் மூலமாக, ஹிந்துத்துவ கருத்தியலை முன்வைத்திருப்பதோடு, அது இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களை மாற்றுவது, புதிய சட்டங்களை அமல்படுத்துவது, நாட்டின் மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் விதமான சூழலை உருவாக்குவது முதலான வடிவங்களின் மூலமாக இந்திய அரசு தங்கள் கருத்தியலான இந்து நாட்டை உருவாக்குவதற்கான பணிகளை நிறுவன ரீதியாக தேசிய, மாநில அளவுகளில் மேற்கொண்டு வருகிறது. 

2021-ஆம் ஆண்டில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி  ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 2021-இல் மரணம் அடைந்தார். ஜம்மு - காஷ் மீரில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த  முஸ்லிம் மனித உரிமை வழக்குரைஞர் குர்ரம் பர்வேஸ் உள்ளிட்ட பலர் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர்.  

திரிபுராவில் மசூதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து  சமூகவலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது கூட ‘உபா’ சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்தியாவில் ‘உபா’ சட்டம் ஏவி விடப் பட்டிருப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதமே அய்நா. மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. 

எப்.சி.ஆர்.ஏ.  (Foreign Contribution (Regulation) Act  சட்டத்தின் கீழ் தன்னார்வ நிறுவனங்களை இந்திய ஒன்றிய பாஜக அரசு ஒடுக்கி வருகிறது. ஆக்ஸ்பாம் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ நிறு வனங்களின் உரிமங்களை இந்த பிரிவின் கீழ் இந்திய அரசு புதுப்பிக்காமல் இருந்து வருகிறது. மதமாற்றத் தடுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 

கருநாடகத்தில் மதமாற்ற தடுப்பு நடவடிக்கைகளின் பெயரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மதமாற்றத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப்பிரதேச  மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார்” என்று பன்னாட்டு மதச் சுதந்திரங்களுக்கான அமெரிக்க ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஆணையத்தின் தலைவரான அனுரிமா பார்கவா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக ஆற்றியிருக்கும் உரையிலும், ‘‘இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதரீதியி லான துன்புறுத்தல்களை அந்நாட்டு அதிகாரிகள் சகித்துக் கொண்டு வருகின்றனர். அங்கு கும்பல் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன’’ என்று பேசியுள்ளார்.

மதச் சுதந்திர விஷயத்தில் கவலையளிக்கக் கூடிய மற்றும் அமெரிக்க அரசு குறிப்பிட்டு அக்கறை செலுத்த  வேண்டிய நாடுகள் பட்டியலில் இந்தியா-வை சேர்த்தாக  வேண்டும் என்றும், பன்னாட்டு மதச் சுதந்திரங்களுக்கான ஆணையம் அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு, தொடர்ந்து  மூன்றாவது ஆண்டாக தனது பரிந்துரையையும் அளித்துள்ளது. மதச் சுதந்திரம் இல்லாத நாடுகள் என்ற அமெரிக்க அரசின் தடைப் பட்டியலில் ஏற்கெனவே சீனா, எரிட்ரியா, மியான்மர், ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் முதலான நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளை இந்தியாவில் ஹிந்துத்துவவாதிகள் கொண்டாடுகின்றனர்.

வன்முறைகளை கொண்டாடும் ஹிந்துத்துவவாதிகள்

“இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான  வன்முறையை ஹிந்துத்துவவாதிகள் பெருமையாக நினைத்து கொண்டாடுவது கவலை அளிக் கிறது” என இந்திய அமெரிக்க மேனாள் மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஹிந்துக்களே ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஹிந்துக்களுக்கு இந்தியாவிலோ அல்லது வேறு நாட்டிலோ அச்சுறுத்தல் இல்லை. உண்மையான ஆன்மீகம் எந்த வகையிலும் வெறுப்பை விதைப்பதற்கு இடமளிக்காது. இந்த பழைமையான,  பரந்த நிலத்தில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ வேண்டும்.

ஆனால், பரவலான முஸ்லிம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை உருவாக்கு கின்றன. மக்களின் மனதை விஷமாக்குகின்றன. இந்த பிரச்சாரம் ஆபத்தானது, மோசமானது. உங்களை விட ஒருவர் குறைவானவர் என்று நீங்கள் கருதினால், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் நீங்களும் பங்கேற்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார். டில்லி ஜஹாங்கீர் புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து  ‘தி கார்டியன்’ மற்றும்’ லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ போன்ற பன்னாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரைகள் ஆகியவற்றையும் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பத்மா லட்சுமி மேற்கோள் காட்டியுள்ளார்.

மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது?

ஜெர்மனி அணியின் மேனாள் நட்சத்திர கால்பந்து வீரரான மெசுத் ஓசில் ட்விட்டரில் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது, "இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக லைலத்துல் கத்ர் புனித இரவில் பிரார்த்தனை செய்வோம். இந்த வெட்கக்கேடான சூழ்நிலை தொடர்பாக விழிப்புணர்வை பரப்புவோம்! உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் நாட்டில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது? அமைதியை காப்போம்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி அமைதியிழக்க செய்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனமான மத சுதந்திரங்களுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. இல்ஹான் உமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவாத வன்முறைகள் குறித்து அமெரிக்க அரசு பேச வேண்டும் என வலியுறுத்தினார்

இனப்படுகொலைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனோசைட் வாட்ச் என்ற நிறுவனம் இனப்படுகொலைகள் நடப்பதற்கான 10 கட்டங்களில் 8 கட்டங்களை இந்தியா தாண்டிவிட்டதாக தெரிவித்து உள்ளது. இந்தியாவில் அரங்கேறி வரும் வகுப்புவாத வன்முறைகள் மற்றும் கவலைகள் பன்னாட்டு அளவில் தற்போது கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றன.

No comments:

Post a Comment