'காஞ்சி மகானின்' ''சபலம்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

'காஞ்சி மகானின்' ''சபலம்!''

 'குமுதம்' வார இதழ்  கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டது. ஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம், இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும்?

'காஞ்சி மகான்' புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும்? ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் புகழ் அற்புதங்களை, 'அற்புதமாகக்' கற்பனைப்படுத்தி சரடு சரடாக அள்ளி விடுவதுதான் அதன் பிழைப்பு.

ஒரு கதையைக் கேளுங்கள்:

''பரமாச்சாரியார் பட்டினியாய் இருந்தது ஏன்?'' என்பது தலைப்பு. ('குமுதம்', 30.3.2022, பக்கம் 96-98) திடுதிப்பென சங்கராச்சாரியார் உபவாசம் இருக்க ஆரம்பித்தாராம். இரண்டு, மூன்று நாட்களாய் உபவாசம் தொடர்ந்ததாம்.

காஞ்சிமடப் பக்தர்கள் படபடத்தார்களாம்.

பெரியவர் இப்படி சாப்பிடாம இருக்கிறப்போ சிறீமடத்துல உள்ள நாம வேளை தவறாம சாப்பிடுறதை நினைச்சா மனமே கலங்குது'' - இப்படி ஆளாளுக்கு ஒன்றைப் பேசி மனம் கலங்கி குழம்பி வருந்தினார்களாம். (ஆனால், பக்தர்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது முக்கியம்).

''பெரியவா, எங்களில் யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னியுங்கள். பிட்சை (உணவு) எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பக்தர்கள் கெஞ்சினார்களாம்.

காஞ்சியார் என்ன பதில் சொன்னார்?

''தினமும் சந்திர மவுலீஸ்வர பூஜையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யற சமயத்துல அந்தப் பிரசாதத்தோட பேரைச் சொல்றது பூஜா விதி. போன வாரத்துல ஒரு நாள் அப்படி நைவேத்யம் செய்தப்போ அந்தப் பட்சணத்தின் பெயரைச் சொன்னபோது, எதிர்பாராத விதமா அதன் ருசியை நினைச்சி என் நாக்கில் ஜலம் வந்திடுத்து! அந்த நொடியே,ஒரு சன்யாசி இப்படி நாவடக்கம் இல்லாமல் இருக்கலாமா? அந்தத் தவறுக்குத்தான் இந்த உபவாசம்!'' என்றாராம்.

ஆக, காஞ்சி மகான் ஜெகத்குரு சபலத்திற்கும், நாவடக்கம் இன்மைக்கும் உரியவர்தான். இதில் என்ன பெரிய மகான் - ஜெகத்குரு - வெங்காயம்!

மயிலாடன்

No comments:

Post a Comment