கோவை சுந்தராபுரம், மேட்டுப்பாளையத்தில் தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

கோவை சுந்தராபுரம், மேட்டுப்பாளையத்தில் தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும்பயணம்

 ஏப்.30இல் ஹிந்தி அழிப்புப் போராட்டம்: தமிழர் தலைவர் அறிவிப்பு

பெரியார் வைத்திருந்த தார்ச்சட்டியும், பிரஸ்சும் இன்னமும் அப்படியே இருக்கின்றன!

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்தை தார்பூசி அழிப்போம்!!

கோவை,ஏப்.18- பெரியார் வைத்திருந்த தார்ச் சட்டியும், பிரஸ்சும் இன்னமும் அப்படியே இருக்கின்றன! எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏப்.30இல் - ஹிந்தி எழுத்தைத் தார்பூசி அழிப் போம்!! என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தின் பொதுக் கூட்டம் நேற்று (17.4.2022)  கோவை சுந்தராபுரத்திலும், மேட்டுப் பாளையத்திலும் எழுச்சியுடன் நடைபெற்றது.

கட்சிகள், அரசியல் என்றாலே தேர்தல், பதவி யைத் தேடுவது என்று எண்ணிக்கொண்டிருப்போர் மத்தியில் அரசியலைக்கடந்த ஓர் அமைப்பை, பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார் கண்ட இயக்கத்தை அவர்தம் வழியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையேற்று மக்களின் தன்மானத்திற்காகவும், மக்களின் கல்வி, சமூக நீதி உரிமைகளுக்காகவும் தொண்டாற்றி பீடு நடைபோட்டு வருவதை  காணும் எதிரிகளும் வியக்கிறார்கள். இப்படியும் ஓர் அமைப்பா? ஓர் இயக்கமா? பதவி தேடாத தொண்டர்களா, தலை வர்களா? என்று வாயைப் பிளக்கிறார்கள். இந்த இயக்கம்தான் தங்களின் உரிமைப்போரை முழங்கி வருகிறது என்றும் நெகிழ்ச்சி அடைகிறார்கள். வரவேற்று, வாழ்த்தி, பேராதரவினை வழங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தின் சிறப்பு

பதவியைத் தேடாதவர்களாக, தந்தை பெரியார் கண்ட இயக்கத்தின் கட்டுப்பாடு மிக்க தொண்டர் களாக பகுத்தறிவு நெறி பரப்புபவர்களாக  தன்னல மறுப்பாளர்களாக தங்களை ஒப்படைத்துக் கொண்டு, தலைவர் அறிவித்தால் சிறைபுகத் தயாராக போர்க்குணத்துடன் உள்ளனர். இதுதான் இந்த இயக்கத்தின் சிறப்பு.

 நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணத்தை கழகத் தலைமை அறிவித்தவுடன் அதுகுறித்து மக்களிடையே தொடர் பரப்புரை செய்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை பெரும் பயணம்குறித்து மூலை முடுக்குகளில் கொண்டு சேர்த்தார்கள்.

பரப்புரை தெருமுனைக்கூட்டங்கள், சுவரெ ழுத்துகள்மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழர் தலைவர் வருகை தகவல் கொண்டு செல்லப் பட்டது.

பரப்புரைப் பெரும் பயணம் வெகு சிறப்பாக அமைந்திட, கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளை யாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் .சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

தமிழர் தலைவர் பயணப்பொதுக்கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை கேட்க கட்சி, மதம், ஜாதி பேதங்களைக் கடந்து தமிழர்களாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப் பினரும் ஒன்றிணைந்து திரள்கிறார்கள்.

தமிழர் தலைவர் வருகைமுதல் அவர் தங்குமிடம் அறிந்து வரவேற்று, நன்கொடைகளை வழங்கி ஆதரவளித்து வருகின்றனர். நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பெரும்பயண விளக்க வெளியீட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து ஏராளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

கோவை சுந்தராபுரம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம்  கோவை சுந்தராபுரம் சங்கம் வீதியில்  மாவட்ட தலைவர் .சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தி..செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வம், மாநகர தலைவர் புலியகுளம் வீரமணி, தொழிலா ளரணி அமைப்பாளர் வெங்கடாசலம், மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாநகர செயலாளர் பிரபு, மண்டல இளைஞரணி செய லாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியில் உரையாற்றினார் தமிழர் தலைவர் அவர்கள்.

அவரது உரை வருமாறு:

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார். அடுத்த தேர்தல் வந்தால் தான் குறையும்; தேர்தல் முடிந்ததும் சேர்த்து வச்சு விலை ஏறிடும். ''சாய்வாலா'' என்று சொன்னவர் ஆட்சியில் தேநீர் கூட 15 ரூபாய். அதுதாங்க மோடி ஆட்சியின் சாதனை என்று சொல்லிவிட்டு, ''நீட் எதிர்ப்பு புத்தகத்தை தூக்கி காட்டியபடி, “நாங்க போட்ட புத்தகம் தாங்க 10 ரூபாய்க்கு கிடைக்கிறதுஎன்று சிரித்தவாறே கூறியதும், மக்களும் சிரித்தபடியே கைதட்டினர்.

தொடர்ந்து நீட் ஒழிப்புக்கு தமிழ்நாடு அரசு உளப்பூர்மாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படு கிறது என்பதை, மேனாள் நீதியரசர் .கே.ராஜன் கொடுத்துள்ள அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையில் உள்ள சில முக்கியமான புள்ளிவிபரங்களை படித்துக் காட்டினார். அரசு மாணவர்களுக்கு 7.5 விழுக்காட்டில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார்.

அந்த வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்றதை எடுத்துரைத்து, “இதுதாங்க திராவிட மாடல்! படி, படி! என்று சொல்வதுதான் திராவிட மாடல்!” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். அரியலூர் அனிதாவின் கலைந்து போன மருத்துவ கனவைப் பற்றி உருக்கமாக விவரித்தார். ”நீட் தேர்வே கூடாது என்று நாம் போராடிக் கொண் டிருக்கும் போது, கியூட் தேர்வுன்னு கொண்டு வர்றாங்கஎன்று ஒன்றிய அரசின் கொடுமையை மக்களுக்கு புரிய வைத்தார்.

5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் கண்ணிவெடியை அம்பலப்படுத்தி, “5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு என்ன பெரிய அய்..எஸ். தேர்வா? பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதே பெரிதுஎன்று சொல்லிவிட்டு, எதையெடுத்தாலும் ''ஒரே, ஒரே'' என்று எல்லாவற்றுக்கும் ஒரே என்று சொல்கிற வர்கள் நாங்கள் கேட்கிற, ஒரே ஜாதின்னு ஏன் என்று சொல்லக்கூடாது என்ற கேள்விக்கு, இன் னமும் பதிலே சொல்லவில்லையே?” என்று கூறியதும் மக்கள் பலமாக கைதட்டினர். ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும்நேசனல் எஜுகேசன் பாலிசிஎன்பதுநோ எஜூகேசன் பாலிசிஎன்று கடுமையாக விமர்சித்துவிட்டு, ”படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு கல்விக் கொள்கையா?” என்று மோடி அரசை கடுமையாகக் கண்டித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தானே

அரசியல் சட்டப்படிதானே நடந்துகொள்ள வேண்டும்?” என்று கேள்விகளை அடுக்கி, ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்வதை மக்களுக்குப் புரியவைத்தார்.

ஒன்றிய அரசுக்கு திராவிட ஆட்சி மீது பொறாமை இருப்பதை கோடிட்டுக் காட்டி, அதற்காக இதுபோன்ற  குறுக்குச்சால் ஓட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஹிந்தி திணிப்பு மீண்டும் நடைபெறுமானால், அன்றைக்கு எடுத்த தார் சட்டியும், பிரஸ்ஸும் இன்னமும் அப்படியே இருக்கிறதுஎன்று கூறி, மேயர், துணை மேயர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரை வாழ்த்தி, மக்களே விழிப்புணர்வு பெறுங்கள். இல்லையென்றால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு போகும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து கோவை சுந்தராபுரத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி தனது பிரச்சாரப் படையுடன் புறப்பட்டார்.

 பங்கேற்றோர்

இப்பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், கோவை கிழக்கு மாவட்ட தி.மு..பொறுப்பாளர் சேனாதிபதி, கோவை மாநகர துணை மேயர் வெற்றிச்செல்வன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் காதர், குறிச்சி தெற்கு பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலெட்சுமி, 96 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குணசேகரன், 85 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் கா.சு.நாகராசன், மதி.மு.. மாவட்ட செயலாளர் மோகன்குமார், சி.பி.அய். தெற்கு மண்டல குழு செயலாளர் சுப்பிரமணியம், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொறுப்பாளர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டல செயலாளர் சிற்றரசு நிகழ்வை தொகுத்து வழங்கினார்.முடிவில்  குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் தமிழ்முரசு நன்றி கூறினார்.

மேட்டுப்பாளையம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம்  மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநில ..துணைத்தலைவர் தரும.வீரமணி மாவட்ட கழக காப்பாளர்   சாலை வேம்பு சுப்பையன், நகர தலைவர் ஆர்.பழனிச்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம், ..பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

மேட்டுப்பாளையத்தில் இறுதியாக தமிழர் தலைவர் உரையாற்றினார். நீண்ட நாளைக்குப் பிறகு மேட்டுப்பாளையம் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று தொடங்கினார். மேட்டுப்பாளையத்தின் தூயவன், ரசாக் ஆகியோர் போட்ட அடித்தளத்தில்தான் இந்த மேடை இருப்பதாக பழைய தோழர்களை நினைவுகூர்ந்து பேசினர்.

எதிர்ப்புக்குரல்களும் இங்கு வரும். அப்போதுதான் நமது தோழர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள்என்று திராவிடர் கழகத்தின் இயல்பை சுட்டிக்காட்டினார்.

பெரியாரின் வெற்றிக் கனிகள்!

தொடர்ந்து, மேடையில் அமர்ந்திருந்த மேயர், துணை மேயர் ஆகியோரை சுட்டிக்காட்டி, “நாங்கள் பேசுவதை விட இதோ இங்கே அமர்ந்திருக்கிறார்கள் அல்லவா பெண்கள் மேயராகவும், துணை மேயராகவும் அமர்ந்திருக்கிறார்களே இதுதான் திராவிடர் இயக்கம்! இதுதான் திராவிட மாடல்! பெரியாரின் வெற்றிக்கனிகள்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.

மேலும், “சிறப்புக்கு சிறப்பு என்னவென்றால், பெண்கள், அதுவும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்கள்! இந்த மாநிலத்தை தவிர மேறு மாநிலத்தில் தலையில் துணியோடு இருக்க முடியாது. நாம் என்ன மொழியில் பேசுவது, உண்பது, உடுத்துவது போன்றவற்றை டில்லியில் இருந்து முடிவு செய்கிறார்கள்என்றதும் மேயர் உள்பட அனைவரும் உணர்ந்து கைதட்டினர்.

பிறகு, மற்றவர்கள் சொன்ன வெற்றிடம், தான் சொன்ன கற்றிடம் ஆகியவற்றை குறிப்பிட்டு, திராவிட மாடலைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் பதிய வைத்தார். அதற்கு, ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலைஎன்ற திருக்குறளை உதாராணமாக்கினார். தொடர்ந்து இதற்கு எதிரான பண்பாடான ஆரியப் பண்பாட்டை, மனுதர்மத்தின் கொடுமையை எடுத்து வைத்தார்.

அதை திராவிட இயக்கம் எப்படி எதிர்கொண்டது என்பதை, “நீதிக்கட்சிக்காலத்தில் படிக்க வாய்ப்பில்லாத தாழ்த்தப்பட்ட சகோதரர்களை படிக்க வைக்க தனி பள்ளிக்கூடம் அமைத்து, அவர்களின் ஜாதியை நினைவுபடுத்தும் அடையாளமின்றி, ’லேபர் ஸ்கூல்என்று வைத்த வரலாற்றை விவரித்தார்.

ஹிந்தி திணிப்பு பற்றி பேச்சு வந்தபோது, “கலைஞர்தான் எம்மொழியை செம்மொழி ஆக்கினார்.” என்று கூறிவிட்டு, “அதற்குப்பிறகுதான் அதுவரை சமஸ்கிருதம் செம்மொழி ஆகவில்லை என்று தெரிந்தது. கலைஞர் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காததால், சமஸ்கிருதம் செம்மொழி ஆயிற்று. அவ்வளவுதான். என்று கூறி, “நெல்லுக்குப் பாய்ந்த நீர் ஆங்கே தர்ப்பைப் புல்லுக்கும் பொசிந்ததுஎன்று நிறுத்தினார். கொஞ்சம் இடைவெளி விட்டு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

நீட் தேர்வின் தீய விளைவுகள் சிலவற்றை புத்தகத்திலிருந்து படித்துக் காட்டினார். கல்வியும், மருத்துவமும் மனிதனுக்கு மிக முக்கியமானது. அதில் தமிழ்நாடு திராவிட மாடல் காரணமாக நன்கு வளர்ந்திருக்கிறது. அதை சிதைக்கவே ஒன்றிய அரசு இதையெல்லாம் கொண்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார். இதனால் பாதிப்புக்குள்ளாகும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் நாங்கள் பாடுபடுகிறோம்.” என்றார்.

ஹிந்தியை திணித்த ராஜாஜியையே, Ôஹிந்தி நெவர் இங்கிலீஷ் எவர்Õ என்று சொல்ல வைத்த இயக்கம் இந்த இயக்கம்!” என்று அமித்ஷாவுக்கு எச்சரிக்கை செய்தார்.

ஏப்.30இல் போராட்டம்

 மீண்டும் ஹிந்தி வருமானால், அன்றைக்கு எடுத்த தார்ச்சட்டியும், பிரஸ்ஸும் இன்னமும் இருக்கிறதுஎன்று வெளிப்படையாகவும் ஹிந்தியைக் கண்டித்தார். தொடர்ந்து, ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, எழும்பூரில் ஹிந்தி எழுத்தை தார் பூசி அழிப்போம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே 30 ஆம் தேதி போராட்டம் நடைபெறும்என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவிப்புச் செய்து உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அடுத்த நாள் நிகழ்வுக்காக குன்னூர் புறப்பட்டுச்சென்றார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.. செயலாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன்,  நகர் மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, .தி.மு.. தலைமை தணிக்கை குழு உறுப்பினர் அரங்கசாமி, தி.மு..நகர செயலாளர் முனுசாமி, தி.மு..மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசரப் அலி, சி.பி.அய். நகர செயலாளர் பழனிச்சாமி, சி.பி.எம்.தாலுகா செயலாளர் சிராஜூதின், வி.சி.. ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment