-பேராசிரியர் மா.செல்வராசன்
ஆரிய மாயையினை
அடியோடு வேரறுத்துப்
பேரிகை கொட்டிய
பெரியார்க்குப் பின் இயக்கம்
வேரின்றிப் போய்விடும்
விழுதின்றிக் காய்ந்துவிடும்
நீரின்றித் தீய்ந்துவிடும்
நிகழாமல் ஓய்ந்துவிடும்
கார்நிறப் புகையாகிக்
காற்றோடு கலந்திடுமென்று
ஊர்உழைப்பில் வாழுவோர்
உழைக்காமல் உயருவோர்
மார்தட்டிப் பார்த்தவர்
மரபுநூல் அணிந்தவர்
நார்நினைப்பு முற்றுமே
நசுங்கிட நைந்திடப்
போர்முனை இயக்கத்தைப்
போற்றியே காத்தவர்
போரணி பூண்டவர்
போராடி வென்றவர்
சீரணி யாகவே
திராவிடர் கழகந்தான்
நேரணி,எப்போதும்
நிலையணி என்றிங்குப்
பேரணி செய்திடப்
பேராற்றல் விளைத்திடக்
காரணர் எப்போதும்
கருஞ்சட்டை அணிகின்ற
வீரமணி என்கின்ற
வெற்றிமணி அல்லரோ!
வீரமணி பெரியார்காண்
விடுதலையின் ஆசிரியர்
பேரதுவே விளங்குபவர்
பெரியாரின் விளக்கவர்!
சீராகக் கற்றவர்
செந்தமிழ்ப் பற்றினர்
கூரான அறிவினர்
கொள்கையின் செறிவினர்
நேரான நெறியினர்
நெகிழாத உரிமையர்
ஊரவர் அறியாமை
ஒழிக்கவே எரிபவர்
யாரெவர் போனாலும்
யாசகர் ஆனாலும்
வேர்அவர்! எந்தவொரு
வெள்ளமும் தடுத்தவர்!
தாரவர்க்கு அணிந்தாலும்
தழற்சிறை அடைத்தாலும்
தேரவர்க்குக் கிடைத்தாலும்
சிறுமைகள் பாய்ந்தாலும்
போரவர்க்கு விளையாட்டு
போராட்டம் விசையூட்டு!
ஈரவர்க்கு ஈரமவர்
ஈழத்தார் புரப்பவர்
வீரர்க்கு வீரரவர்
வீழாத சூரரவர்
பாரதிரும் பெரியாரின்
படையணி மறவரவர்!
வீரமணி சிறுவனாய்
விளங்கிய வேளையில்
நாராக ஆத்திகம்
நறுக்கிடும் நசுக்கிடும்
காரமணிப் பேச்சிலே
கனல்பறத்தல் கேட்டதும்
பேரறிஞர் அண்ணாதான்
பெருவியப்பில் மனமாரப்
பாராட்டிப் புகன்றனர்
பாருங்கள் இங்குநம்
திராவிட இயக்கத்துத்
திருஞான சம்பந்தர்!
பராவிடும் எழுச்சியில்
பகுத்தறிவு தன்மானம்
விராவிட எங்கெங்கும்
வெடிப்புயல் கிளப்பிடும்
ஒரேயொரு வீரமணி
ஒலித்திடக் கிளர்ந்திடும்!
இருகுழல்ஓர் துப்பாக்கி
இவ்விரண்டு இயக்கமெனப்
பெருமிதமாய்க் குறிப்பிட்ட
பேரறிஞர் அண்ணாவின்
ஒருவழியே நடந்திட்ட
ஓய்வறியாக் கலைஞர்தாம்
கருஞ்சட்டைப் பெரியாரின்
கருத்துக்கு வடிவமாய்
அருஞ்செயல்கள் ஆற்றினார்!
அறியாமை சமமின்மை
இருளான ஜாதிமதம்
இழிவுகள் ஒழிக்கின்ற
செருவிலே வெல்கின்ற
செம்மாந்த தோழனாய்
உருவிய வாளாக
உடனிருந்தே கடன்புரிந்தார்
கருவிய சமூகக்
கருவேல முட்கூட்டம்
கருக்கிடத் தழல்விரித்தார்!
கரிகாலத் தளபதிதான்
பெருந்திறனாய் ஆள்வதற்குப்
பேருரம் தருகின்றார்!
வருங்கொடுமை எதுவெனினும்
வந்தவழி ஓட்டுகின்ற
அருஞ்சமர் புரியவே
அணியமாய் இருக்கின்றார்!
ஆதியிலே இல்லாத
ஆரியந்தான்
புகுத்திவிட்ட
பாதியிலே வந்தின்று
படுகொடுமை செய்கின்ற
ஜாதிமதக் கடவுளெனும்
சழக்குகளைச் சாற்றுகின்ற
வேதியரும் அவர்வழியே
விழுப்பமென விழுந்தவரும்
சேதியெனக் கட்டுகின்ற
செப்படி வித்தையாய்
ஓதுபவை எல்லாமே
உண்மைக்கு ஒல்லாவே!
தீதெனப் பெரியாரும்
சிறுமையென
அண்ணாவும்
நோதலெனக் கலைஞரும்
நுவல்பேரா சிரியரும்
வாதிட்டு வென்றிருந்த
வழியிலே தளபதியும்
சோதியாய் எழுகின்றார்!
சுடரொளியில் வீரமணி
நீதியென நிற்கின்றார்;
நெடுஞ்சமரும் புரிகின்றார்!
சூதினைப் புகல்கின்றார்;
சூழ்ச்சியை எதிர்க்கின்றார்!
ஏதிதுபோல் இங்கொருவர்
இறுதிவரை உறுதியாய்ச்
சாதிப்போர்? திராவிடச்
சமூகப்போர் வெல்கவே!
சரியான வீதியாம்
சமூக நீதியைப்
பரிசாகத் தமிழர்க்குப்
பயந்தளித்த பெரியாரின்
உரிமைப்போர் இன்றுவரை
ஓயாமல் நிகழ்வதற்கு
வரிசையை ஒதுக்காமல்
வாய்ப்பினைப் பெறுவதற்கு
எரிகனலாய் விரிபுயலாய்
எப்போதும் எழுகின்ற
ஒருவர்தாம் வீரமணி
உரிமைகொள் தமிழரின்
பெருந்தகையர்; மொழிஇனம்
பீடுபெறப் போராடும்
அருந்திறல் தலைவரவர்
ஆர்த்தெழும் பிறந்தநாள்
பெரும்புகழ் பெறுகவே!
பெருகியே மேன்மேலும்
ஒருநூறாண்டு ஆகியே
உலகெலாம் வாழ்கவே!
No comments:
Post a Comment