நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம் - போர் முரசு ஒலிக்கட்டும்!
அரியலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முழக்கம்!
அரியலூர், ஏப்.18 ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரப் பெரும் பயணத்திற்கு உறுதுணையாக இருப்போம்! நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம் - போர் முரசு ஒலிக்கட்டும்! என்றார் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள்.
அரியலூரில் பிரச்சாரப் பெரும்பயணக் கூட்டம்
கடந்த 15.4.2022 அன்று இரவு அரியலூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமைகள் மீட்புப் பரப்புரை பயணப் பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற கருத்தாக்கத்தில், நாகர்கோவில்முதல் சென்னை வரை நடைபெறுகின்ற பெரும் பயண நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக் கின்ற திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மானமிகு அண்ணன் நீலமேகம் அவர்களே, வரவேற்புரையாற்றி இருக்கின்ற அன்புச் சகோதரர் சிந்தனைச்செல்வன் அவர்களே,
நிகழ்ச்சியின் இறுதியாக எழுச்சிப் பேருரை நிகழ்த் தவிருக்கின்ற தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் உள்ளிட்ட மேடையில் வீற்றிருக் கின்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளே மற்றும் வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே, தாய்மார் களே உங்கள் அத்துணை பேருக்கும் அன்பு கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1200 மதிப்பெண்ணுக்கு1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை!
அய்யா நீலமேகம் அவர்கள் குறிப்பிட்டார்கள் - இந்த மேடைக்குப் பின்புறமாகத்தான் அந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது - அதுவும் திராவிடர் கழக ஆர்ப்பாட்டம்தான் - 'நீட்'டை ஒழிக்க நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனிதாவினுடைய சகோதரர் மணிரத்தினம்- அவரை அழைத்து வந்து என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
1200 மதிப்பெண்ணுக்கு1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த அனிதாவால், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் இருக்கிறது என்கிற தகவலை அப்பொழுதுதான் அவர் தெரிவித்தார்.
பிளஸ்டூ வகுப்பில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு பெண்ணால், நீட் தேர்வில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற கேள்வி அதன்பிறகுதான் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் எழுந்தது.
நீட் தேர்வினால், கிராமப்புற பகுதிகளில் உள்ள நம்முடைய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் இடம்பெற இயலவில்லை.
அனிதாவினுடைய வருகைக்குப் பிறகுதான் வெளியுலகத்திற்குத் தெரிந்தது
கிராமப்புறத்தில், பிளஸ் டூ வகுப்பில் எந்தவித உதவியுமில்லாமல், தங்களுடைய சொந்த அறிவால் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற நம்முடைய பிள்ளைகள், குறுகிய கால கோச்சிங் வகுப்பில் சேர்ந்து மூன்று, நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத காரணத்தினால், நீட் தேர்வில் தோல்வி அடைந்தார் கள் என்ற செய்தி, அனிதாவினுடைய வருகைக்குப் பிறகுதான் வெளியுலகத்திற்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான், தமிழ்நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய இயக்கமாக வலுப்பெற்று, அனிதா சென்னைக்குச் சென்று, மாணவர் அமைப்பு கள்மூலமாக, பத்திரிகைகளின் வாயிலாக இந்திய அளவிற்குச் சென்று சேர்ந்தார்.
அனிதா மூட்டிய தீ தமிழ்நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது
அனைத்துக் கட்சித் தலைவர்களை சந் தித்தார்; ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித் தார்; அதற்குப் பிறகு நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் அவருடைய உரிமையை மறுத்ததின் காரணமாகத்தான், மனமுடைந்து போய் தன் னுடைய வாழ்வை முடித்துக்கொண்டார்.
அந்த நீட் தேர்விற்கு எதிராக அனிதா மூட்டிய அந்தத் தீ தான், இன்றைக்கு மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வை எதிர்த் துக் கொண்டிருக்கின்றோம்.
முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை!
நீட் தேர்வு வந்தபொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அத் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை.
அதற்குப் பிறகு மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதுகூட, அந்த நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை.
அதன் பிறகு, அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைந்த பிறகுதான், இந்த நீட் தேர்வு, பாரதீய ஜனதா கட்சியால், தமிழ்நாட்டின்மீது திணிக்கப்பட்டது.
அதன் காரணமாகத்தான் அய்ந்தாண்டுகளுக்கு முன்பாக, அனிதா என்ற அந்த அன்புச் செல்வத்தை நாம் இழந்தோம். இன்றைக்கு நீட் தேர்வினால்
20-க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் பலி கொடுத் திருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது என்பதற் காகத்தான் - நம்முடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்தப் பெரும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார்கள்.
''வீரமணி வென்றிடுக!
வெற்றிமணி ஒலித்திடுக!''
பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நான், அய்யா ஆசிரியர் அவர்கள் குறித்து, தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையை ஒரு நூலாக வெளியிட்டேன். நூலின் தலைப்பு, ''வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!'' என்பதுதான்.
அந்த நூலில் உள்ள உரை, தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றியது 1985 ஆம் ஆண்டு. இந்தி எதிர்ப்பு அய்ந்தாம் கட்டப் போராட்டத்திற்கு, ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில் பெரும்படை புறப்பட்ட நேரத்தில், அவரை வாழ்த்தி வழியனுப்புகின்ற கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரைதான் அது.
1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆசிரியர் அய்யா அவர்கள் நீட் தேர்விற்கு எதிராக ஒரு பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
சென்னையில் பிரச்சார நிறைவுக் கூட்டம்
தளபதி தலைமையில்....!
அன்றைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் வழியனுப்பி வைத்தார். இன்றைக்கு நடைபெறும் இந்தப் பெரும் பயண பிரச்சார நிறைவுக் கூட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
தொடர்ந்து இந்த மண்ணிற்கு எதிராக எது எதெல்லாம் முளைத்து வருகிறதோ, அவற்றை யெல்லாம் எதிர்த்து நிற்கின்றவராக, எதிர்குரல் கொடுக்கின்றவராக, பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கின்றவராக இன்றைக்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
தந்தை பெரியாரின் நோக்கத்தோடுதான் ஆசிரியர் அய்யா அவர்களும் இப்பணியை மேற்கொண்டிருக்கிறார்!
அய்யா பெரியார் அவர்கள், எதற்காக தன்னுடைய வாழ்நாள் எல்லாம் உழைத்தாரோ, இந்த மண்ணில் இருக்கின்றவர்கள் அறிவும், மானமும் பெறவேண்டும் என்பதற்கு உழைத்தாரோ, அதே நோக்கத்தோடுதான் ஆசிரியர் அய்யா அவர்களும் இன்றைக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
இந்த நீட் தேர்வு என்பது, ஏதோ மருத்துவப் படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மட்டும் எதிரானது என்ற ஒரு பொதுக் கருத்து இருக்கின்றது. அதையும்தாண்டி, நாம் அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்போமேயானால், அதுகுறித்த பாதிப்பு முழுமையாகத் தெரியும்.
இங்கே தலைப்பே இருக்கிறது - மாநில உரிமைக்கு நீட் எதிரானது என்று.
கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கவேண்டியது.
அது ஒன்றிய அரசின் பட்டியலில் இல்லை.
கல்வியை ஒன்றிய அரசின் பட்டியலுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்
ஆனால், இன்றைக்கு இருக்கின்ற ஒன்றிய அரசை நடத்துகின்ற பாசிச பா.ஜ.க.வின் தலைவராக இருக் கின்ற, ஒன்றிய அரசின் தலைவராக இருக்கின்ற மோடி, கல்வியை ஒன்றிய அரசின் பட்டியலுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள் கின்றார். நம்முடைய உரிமைகளை அபகரிப்பதற்கு முயற்சிக்கின்றார். அதனுடைய ஒருபடிதான் நீட் தேர்வு. அதற்கு அடுத்தபடிதான் புதிய கல்விக் கொள்கை; அதற்கு அடுத்தபடிதான், மத்திய பல் கலைக் கழகங்களில் க்யூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தற்பொழுது அறிவித்திருப்பது.
இவற்றை எதிர்த்துத் தொடர்ந்து போராடவேண்டிய இடத்தில் நாம் இருக்கின்றோம்.
மாநில உரிமைகளுக்கு மட்டும் எதிரானதல்ல; கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது!
இது மாநில உரிமைகளுக்கு மட்டும் எதிரானதல்ல; கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானதாகும். அனிதா போன்ற கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள், 12 ஆண்டுகளாகப் படித்து பெற்ற அறிவின் காரணமாக எடுக்கின்ற மதிப்பெண்ணை நீட் தேர்வு முறித்துப் போடுகின்றது.
12 ஆம் வகுப்பு தேர்வு எப்படி நடைபெறுகிறது?
அத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளும் இருக்கிறது; மூன்று மதிப்பெண் கேள்விகளும் இருக்கின்றன; 12 மதிப்பெண் உள்ள கேள்விகளும் இருக்கின்றன.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை எழுத வேண்டும் என்றால், அந்தப் புத்தகத்தை முழுவது மாகப் படித்து, ஆழ்ந்த அறிவு பெற்றால்தான் எழுத முடியும். அல்லது அதற்கான நோட்சை வைத்துப் படித்திருந்தால்கூட, அந்தக் கேள்விகளுக்கான பதில்களை எழுத முடியும்.
ஆனால், நீட் தேர்வு என்பது ஒத்தையா? இரட் டையா? போடுவது போன்றதாகும்.
அந்தத் தேர்வுத் தாளில் கேள்விக்கப்படும் கேள்விகளுக்கான பதில், நான்கு இருக்கும். அதில் எது சரியான பதில் என்பதை டிக் செய்யவேண்டும் அவ்வளவுதான்.
அந்தக் கேள்விக்கான சரியான பதிலா என்று முழுமையாகத் தெரியாமல், அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவு இல்லாமல் டிக் செய்துவிட்டு வந்தால்கூட, தோராயமாக தேர்வாகக்கூடிய வாய்ப் பும் இருக்கிறது; இன்னும் சொல்லப்போனால், அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
பிராய்லர் கோழி போன்று வளர்க்கப்படும் பயிற்சி வகுப்பு மாணவர்கள்
நீட் தேர்விற்காகப் பயிற்சி வகுப்பின்போது, எந்தக் கேள்வி வரும் - அந்தக் கேள்விக்கான பதிலை மட்டும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து - ஒரு மாதம், இரண்டு மாதம் வளர்க்கப்படும் - பிராய்லர் கோழி போன்று வளர்க்கப்படும் பயிற்சி வகுப்பு மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பை படிக்கின்றபொழுது, முழுமையாக அந்தப் பாடத்தைப் படித்து, தன்னுடைய அறிவை கிரகித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பில்லாமல், தோல்வியடையக் கூடிய நிலையைத்தான் இன்றைக்குக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், கிராமப்புற மாணவர்களுக்கு, ஏழை, எளிய மாண வர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிக் கட்டணத்தைக் கொடுத்துப் படித்து, வெற்றிபெறுகின்ற வாய்ப்பும் இல்லை.
65 சதவிகித இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள்
அதையும் தாண்டி இன்னொரு கோணமும் இருக்கிறது- நீட் தேர்விற்கு வருவதற்கு முன்பாக, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மருத்துவப் படிப்பிற்கு 97 சதவிகிதம் சேர்ந்தார்கள். சி.பி.எஸ்.இ. என்ற மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 3 சதவிகிதம் சேர்ந்தார்கள்.
ஆனால், இப்பொழுதைய நிலை என்னவென்றால், சி.பி.எஸ்.இ., என்கிற மத்திய பாடத் திட்டத்தின்மூலம் படித்த மாணவர்கள், 65 சதவிகித இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அதிகமாக எங்கே இருக் கின்றன?
சென்னை போன்ற பெருநகரங்களில், திருச்சி, கோயம்புத்தூரில் மாத்திரம் இருக்கின்றன.
ஆகவே, பெருநகரங்களில் இருக்கின்ற மாண வர்கள், பகல் நேரம் முழுவதும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, மாலையில் பயிற்சி வகுப்பில் படிக் கிறார்கள். அதனால், அவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, நம்முடைய கிராமப்புற பிள்ளைகள் பெறவேண்டிய மருத்துவப் படிப்பிற்கான இடங்களை - அவர்கள் திருடுகின்ற காட்சிதான் நடைபெற்று வருகின்றது.
சமூகநீதி, இட ஒதுக்கீட்டிற்கு
நீட் தேர்வு எதிரானதாகும்
எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு எதிரானதாகும்.
அதையும் தாண்டி, சமூகநீதி, இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதாகும்.
நீட் தேர்வு என்று வந்த பிறகு, ஒன்றிய அரசு, இன்றைக்கு உயர்நிலைக் கல்வியில் 50 சதவிகித இடத்தினை கைப்பற்றிக் கொண்டது.
அவர்கள் கைப்பற்றிய 50 சதவிகித இடத்தில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல், வஞ்சித்துக் கொண்டு வந்தனர்.
27 சதவிகித இட ஒதுக்கீட்டினை உறுதி செய்திருக்கிறார் நீதிமன்றத்தின் மூலமாக!
இப்பொழுதுதான் நம்முடைய மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள், ஒரு வழக்குத் தொடுத்து, 27 சதவிகித இட ஒதுக்கீட் டினை உறுதி செய்திருக்கிறார் நீதிமன்றத்தின் மூலமாக.
அந்த வழக்கினை தி.மு.கழகத் தலைவர் அவர்கள் தொடுத்திருக்காவிட்டால், அங்கே சமூகநீதி முற் றிலுமாக மறுக்கப்பட்டு இருக்கும்.
எதிர்காலத்தில், இதேபோன்ற இளங்கலை படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) உரிய இடங்களில், 50 சத விகித இடங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளு மேயானால், நம்மால் என்ன செய்ய முடியும்?
நம்முடைய மாநில வரிப் பணத்தில் கட்டமைத்த கல்லூரிகளில், வட இந்தியன் படித்துப் போகின்ற நிலை வரும்!
நீட் தேர்வை நுழைக்கும்பொழுதே, அதைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அதற்கான அதிகாரம் நமக்கு இல்லாவிட்டால், நம்முடைய அரசு கல்லூரி களில், தமிழ்நாடு அரசின் கல்லூரிகளில், 50 சதவிகித இடங்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று ஒன்றிய அரசு சொன்னால், அப்பொழுதும் நாம் பதில் சொல்ல முடியாத இடத்தில், கேள்விக் கேட்க முடியாத இடத்தில் இருந்தால், நம்முடைய அரசு, நம்முடைய வரிப் பணத்தில், நம்முடைய மாநில வரிப் பணத்தில் கட்டமைத்த கல்லூரிகளில், எவனோ வந்து, வட இந்தியன் வந்து படித்துப் போகின்ற நிலையைப் பார்க்கின்ற சூழல் வரும்.
இப்படி இந்த நீட் தேர்வு என்பது, மாநில உரிமைக்கு எதிரானது; கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது; ஏழை மாணவர்களுக்கு எதிரானது - இதையும் தாண்டி சொல்லவேண்டும் என்றால், கிராமத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக் களுக்கு இலவச மருத்துவத்தை இன்றைக்குத் தமிழ் நாடு அரசு கொடுக்கின்றதே, அதற்கும் எதிரானதுதான்.
அது எப்படி என்கிற கேள்வி உங்களுக்கு எழும்.
நான் சொன்னதுபடி, சி.பி.எஸ்.பி. பாடத் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்கள், சென்னை, திருச்சி, கோயம் புத்தூரில் இருக்கின்ற மாணவர்கள் 65 சதவிகித இடத்தைப் பெற்று விட்டார்கள்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப்
பணிபுரிய வரமாட்டார்கள்!
பெரும்பாலும் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து டாக்டர்களாக வருவார்கள்; நகர்புறத்தைச் சேர்ந்த டாக்டர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குக் கிராமப்புறங்களில் இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் அங்கே பணி புரிய வரமாட்டார்கள்.
நகர்ப்புறத்தில் பிறந்து சொகுசாக வாழ்ந்து, வளர்ந்த அந்த மாணவர், அரியலூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தள்ளியிருக்கின்ற கிராமத்திற்கோ அல்லது அரியலூரிலிருந்து உள்கிராமத்திற்குப் போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கின்ற பகுதிகளில் பணியாற்று வதற்கு வரமாட்டார்கள்.
இதுவே நம்முடைய மாவட்டத்தைச் சார்ந்த, கிராமப்புறத்து மாணவர்களாக இருந்தால், கிராமப் புறத்து சூழலில் வாழ்ந்தவர்களாக இருந்தால், அவர் மருத்துவம் படித்து வந்தால், இந்தக் கிராமப்புறத்தில் இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவதற்கு ஆர்வமாக முன்வருவார்கள்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இழுத்து மூடப்படக்கூடிய
நிலை வரும்!
ஆனால், கிராமப்புறத்தில் இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய மருத்துவர்கள் வராவிட்டால், என்ன நிலைமை ஏற்படும்?
கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள், இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கு கின்ற சிகிச்சையைப் பெறுகின்ற வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்படும்.
இன்னும் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் போனால், கிராமப்புறங்களில் பணிபுரிய மருத் துவர்கள் இல்லாமல், அவற்றையெல்லாம் இழுத்துமூடக் கூடிய நிலைகூட வரும்.
ஆகவேதான், தலைவர் கலைஞர் அவர்கள், நீட் தேர்வு அறிவிக்கப்பட்டவுடன், மிக நுண் ணியமாக சிந்தித்து, இந்தத் தேர்வை எதிர்த்தார். இந்தியாவில் வேறு யாரும் எதிர்க்கவில்லை; தலைவர் கலைஞர் மட்டும்தான் முதலில் எதிர்த்தார்.
அப்படிப்பட்ட இந்தக் கொடூரமான நீட் தேர்வு நீடித்தால், நமக்கு ஆபத்து. கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களை இழுத்து மூடிவிட்டால், கிராமப்புறங் களில் உள்ளவர்கள் வைத்தியம் பார்த்துக் கொள்ள எங்கே செல்ல முடியும்? நகர்ப்புறங் களுக்குத்தான் வரவேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசால் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன!
இப்பொழுது மோடி அவர்கள், இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இண்டியா விமான நிறுவனத்தை டாடாவிற்கு விற்றுவிட்டார்; இந்திய அரசுக்குச் சொந் தமான ரயில்வே துறையை விற்பதற்கு முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார். துறைமுகத்தை, அதா னிக்கு விற்றுவிட்டார்.
இப்படி பொது நிறுவனங்களையெல்லாம் விற்ப தைப்போல, எதிர்காலத்தில் மருத்துவத் துறைகள் எல்லாம் - அம்பானியினுடைய, ரிலையன்ஸ் மருத் துவமனைகளாக மாறுவதற்கு அனுமதித்து, ஒவ் வொரு நகரத்திற்கும், ரிலையன்ஸ், அம்பானி மருத்துவமனைகள்தான் இருக்கும். அதனுள் செல் வதற்கே ரூ.500 டோக்கன் கட்டணமாக செலுத்தி விட்டுத்தான் செல்ல முடியும். அதற்குப் பிறகு மருத்துவரைப் பார்ப்பதற்கான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்; அதற்குப் பிறகு மருத்துவம் பார்க்க தனியாகக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.
ஆக, இப்பொழுது இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று, எந்தவிதமான கட்டணமும் இல்லாமல், மருத்துவம் பார்க்கக்கூடிய வசதி ஏழை, எளியவர்களுக்கு மறுக்கப்பட்டால், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு திண்டாட்டத்திற்குச் செல்ல நேரிடும் என்பதை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நீட் தேர்வை எதிர்த்துப் போராடவேண்டியது
நமது கடமையாகும்
எனவே, நீட் தேர்வு என்பது எல்லாவிதத்திலும் நம்முடைய ஏழை மக்களுக்கு எதிரானதாகும். ஆகவே, அதனை எதிர்த்துப் போராடவேண்டியது நமது கடமையாகும்.
அதனால்தான் கழகத் தலைவர் தளபதி அவர்கள், இந்த அதிகாரம் பலம் பொருந்திய ஒன்றிய அரசை எதிர்த்து, நெஞ்சுரத்தோடு நின்று போராடுகிறார்.
நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகக் கொண்டு வந்த தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தபொழுதும்,
இரண்டாவது முறையாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, ஒன்றிய அரசின் ஏஜெண்டாக இருக்கின்ற ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தோம்!
அந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஆளுநர் அவர்களைக் கண்டித்து நேற்று அவர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்துகொள்ளமாட்டோம் என்று மறுத்து, தமிழ்நாடு அரசு புறக்கணித்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என்று நம்முடைய கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கின்றன.
இந்திய அளவில் இதை எல்லோரும் திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு, ஆளுநரின் தேநீர் விருந்தின் புறக்கணிப்பின்மூலமாக நம்முடைய தலைவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்றால், அந்த நீட் தேர்வு அவ்வளவு ஆபத்தானது என்பதால்தான்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதுகூட - திராவிடர் கழகம் நீட் தேர்வை எதிர்த்துப் போராடியது!
அதனால்தான், அந்த ஆபத்தை எடுத்துரைக்கும் விதமாக, தொடர்ந்து நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அய்ந்தாண்டுகளுக்கு முன்பாக, எப்படி ஜல்லிக்கட்டுப் போராட்டம் அப்பொழுது வீரியமாக இருந்தபொழுதுகூட, நீட் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.
ஆசிரியர் அய்யாவிற்கு
நாம் உறுதுணையாக இருப்போம்!
அதே உணர்வோடுதான், அய்ந்தாண்டுகள் கழித்தும் இந்த நீட் தேர்விற்கு முடிவு கட்டவேண்டும் என்ற உணர்வோடு, ஆசிரியர் அய்யா அவர்கள், இந்தப் பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம் -
போர் முரசு ஒலிக்கட்டும்!
இந்த நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம்; அதற்காக நாம் பாடுபடவேண்டும்; இந்தப் போர் முரசு ஒலிக்கட்டும் என்று கூறி, வாய்ப்பிற்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:
Post a Comment