சட்டமன்றச் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

சட்டமன்றச் செய்திகள்

பெரியார் சிந்தனைகள் 
மொழி பெயர்க்கப்படுவதற்கு 
முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபால் முதலமைச்சருக்கு பாராட்டு

சென்னை, மார்ச் 23 -  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை பாராட்டி பேசிய முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபால் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததுடன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (22.3.2022) 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான 2ஆவது நாள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அவினாசி ப.தனபால் (அதிமுக) பேசியதாவது: 

இந்த சட்டப்பேரவைக்கு நான் 7ஆவது முறையாக தேர்வு பெற்றுள்ளேன். தமிழை வளர்க்கும் நோக்கத்தில், அகரமுதலி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை நான் வரவேற்கிறேன். 

பெரியார் சிந்தனை தொகுப்பு 21 மொழிகளில், மொழி பெயர்க்கப்படும் என்று அறிவிப்பை பாராட்டுகிறேன். நிதிநிலை அறிக்கையில் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நான் வரவேற்கிறேன். ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வூதிய தொகை ரூ.1,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 

மேகதாதுவில் புதிய அணை கட்ட கருநாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். கருநாடக அரசுக்கு எதிராக நேற்று சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நான் வரவேற்கிறேன். 

நிதிநிலை அறிக்கையில், பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிதலமடைந்த பள்ளி கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த திட்டத்தின் கால அளவு 2 ஆண்டுகள் தான். கடந்த ஆண்டே பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால், சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. அதை உடனே நிறைவேற்ற வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை மின்வாரிய கட்டணம், சிலிண்டருக்கு மானியம், முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்வி கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபால், பல்வேறு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்களை பாராட்டி பேசியதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

உறுப்பினர் ப.தனபால்: எனது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியதற்காக முதலமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தகுதியுள்ள அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

 தகுதியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க அரசு தயாராக உள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (22.3.2022) பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு: 

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): திமுக அளித்த தேர்தல்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக 5 பவுனுக்குகுறைவாக கூட்டுறவு வங்கியில் நகைகள் அடகு வைத்தவர்களுக்கு அந்த கடன் தள்ளுபடிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தள்ளுபடி வழங்கப்படவில்லை.

அமைச்சர் அய்.பெரியசாமி: கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைகள் அடகு வைத்த 13.40 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதையடுத்து நகைக்கடன் தெடர்பாக ஆய்வு செய்ததில், போலி நகைகளை வைத்தும், வெறுமனே ஏட்டளவில் பதிவு செய்தும் நகைக் கடன் வாங்கி, அதே வங்கியில் நிரந்தர வைப்புத்தெகை வைத்திருந்தது, ஒரு குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியிருப்பது உட்பட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை மட்டும் 97 ஆயிரம் பேருக்கு ரூ.375 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 31-ம் தேதிக்குள் தகுதியான அனைவரது நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரவருக்கு நகைகள் திருப்பிவழங்கப்படும். 13.40 லட்சம் பேர் தள்ளுபடி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 14.60 லட்சம் பேர் நகைக் கடன் தள்ளுபடி பெறப் போகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கூட்டுறவு வங்கிகளில் 48 லட்சம் பேர் 5 பவுனுக்கும் குறைவான நகைகளை அடமானம் வைத்துள்ளனர். ஆனால், 13 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறீர்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் கூறுவது 100-க்கு 100 உண்மை. அதை ஏற்றுக் கெள்கிறேன். நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் விரிவாக செல்லியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்துவிடும். நாமும் நகைக் கடன் தள்ளுபடி பெற வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தோடு நகைக்கடன் பெற்றுள்ளனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியான யாருக்காவது நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காவிட்டால் அதுபற்றி செல்லுங்கள். அவருக்கு உடனடியாக தள்ளுபடி வழங்க இந்த அரசு தயாராக இருக்கிறது. முறைகேடுகள் செய்து நகைக் கடன் பெற்றவருக்கு தள்ளுபடி தர வேண்டுமா?

அமைச்சர் பெரியசாமி: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்றுமத்திய அரசு அறிவித்த திட்டத்தின்கீழ் பயன்பெற 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து இப்போது மத்திய அரசு வசூலித்துக் கெண்டிருக்கிறது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதால்தான் நாங்கள் நகைக்கடன் பற்றி ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கியுள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முறைகேடுகள் செய்து நகைக் கடன் பெற்றவருக்கு தள்ளுபடி தர வேண்டுமா என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 
மீண்டும் வேலைவாய்ப்பு:   
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

நீதிமன்றத்தின் முடிவு வெளிவந்த பிறகு  மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் நிச்சயமாக மீண்டும் வேலை வாய்ப்பை வழங்குவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்(அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.4.85 லட்சம் கோடி கடன் விட்டு சென்றார்கள். ஆனால், தற்போது நீங்கள் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளீர்கள்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நிதிநிலை அறிக்கை முடிந்த அன்று எதிர்கட்சி தலைவர் வெளியே சென்று ஒரு தவறான கருத்தை கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு காரணங்களுக்காக கடன் பெறப்படுகிறது. செலவுக்காக பெறுவது, பழைய கடனையை திருப்பி செலுத்துவதற்காக கடன் பெறுவது. கடனை திருப்பி கட்டவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எதிர்கட்சி தலைவர் கூறிய 1 லட்சம் கோடி எல்லாம் கடன் எடுக்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்: நீர்நிலை, குளங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் 75 ஆயிரம் சாலை பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள். 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என கூறினீர்கள். தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவித்தீர்கள்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: திருக்கோயில் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக தேர்தல் அறிக்கையில் 25 ஆயிரம் பணியாளர்கள் நியமிப்பதாக கூறினோம். முதல்கட்டமாக 2,500 காவலர்களை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 2,500 பேரையும் முதற்கட்டமாக பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்: மக்கள் நலப்பணியாளர்களாக 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என தெரிவித்தீர்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: ஆண்டுக்காண்டு நிதிநிலை அறிக்கை மன்றத்தில் வைக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதில் 50 சதவீதம் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். எஞ்சியுள்ள 50 சதவீத வாக்குறுதிகளை 4 ஆண்டுகளில் 100 சதவீதமும் செய்துமுடித்துவிட்டு தான் முதலமைச்சர் தேர்தலை சந்திப்பார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் பேசும்போது மக்கள் நலப்பணியாளர்களின் நிலை என்ன என்பது பற்றி கேள்வி கேட்டுள்ளார். முதன் முதலில் மக்கள் நலப்பணியாளர்களை நியமித்ததே கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சியில் தான். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அத்தனை பேரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள். அதற்கு பிறகு அவர்கள் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதை எதிர்த்து அதிமுக ஆட்சி உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. அந்தநிலை தான் இன்றைக்கு இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்த பிறகு நிச்சயமாக அவர்கள் அத்தனை பேருக்கும் அந்த வேலை வாய்ப்பை வழங்குவோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன். இவ்வாறு கூறினார்.

விண்ணப்பித்த 15 நாட்களில் 
குடும்ப அட்டை வழங்கப்படுகிறது: 
எழும்பூர் பரந்தாமன் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சட்டப்பேரவையில் நேற்று (22.3.2022) கேள்வி நேரத்தின்போது, 

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் (திமுக): 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை, வழங்கிய குடும்ப அட்டைகள் எத்தனை? அமைச்சர் சக்கரபாணி: திமுக அரசு பொறுப்பேற்றால், குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன், 2021 மே மாதம் முதல் கடந்த 14ஆம் தேதி வரை 10  மாதங்களில் 15,74,543 விண்ணப்பங்கள் குடும்ப அட்டை வழங்க கோரி பெறப்பட்டது. இது பரிசீலிக்கப்பட்டு பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10,92,064  பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்திருக்கிறது.

பரந்தாமன்: எழும்பூர் பெரியமேடு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் முதியோர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க பிஓஎஸ்-அய் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர் சக்கரபாணி: பிராக்சி முறைக்கு சென்று பொருட்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்படும். மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், அவர்தம் பிரதிநிதிகள் வாயிலாக இன்றியமையா பண்டங்களை நியாய விலை கடைகளில் இருந்து பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் (குடிமை பொருள் வழங்கல்) ஆகியோர் மூலமாக அங்கீகார சான்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள்  குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்பட்டேர் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். விரல் ரேகை தேய்மானம் காரணமாக விரல் ரேகை சரிபார்ப்பு முறையை செயல்படுத்த இயலாத நேர்வில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி இன்றியமையா பண்டங்கள் விநியோகிக்க உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

* ஓய்வூதியத் தொகை வாங்குகிற வர்களுக்கு குடும்ப அட்டை ரத்தாகுமா?

பேரவையில் கேள்வி நேரத்தின்போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் (திமுக) பேசுகையில், முதியோர் ஓய்வூதியத்தொகை (ஓஏபி) வாங்குகிறவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி,அப்படி எல்லாம் இல்லை. அவர்களுக்கும் அரசாங்கத்தின் மூலமாக பொருட்கள், 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

* அமைச்சர் அய்.பெரியசாமி தகவல் 1.3 லட்சம் பேருக்கு ஒரே நாளில் நகை வழங்கப்பட்டது

ஒரே நாளில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 1.3 லட்சம் பேருக்கு நகை வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அய்.பெரியசாமி கூறினார்.

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசியதாவது: 

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து உரிமையாளர்களுக்கும் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவேல மரங்களை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் அய்.பெரியசாமி: நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு நகை வழங்கப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டு ரூ.823 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு விவாதம் நடந்தது.

விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம்
அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். 

சட்டப்பேரவையில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு களின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

முதற்கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய 3 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. முதலமைச்சரின் ஆணைப்படி கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். 

இவ்வாறு  விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment