பா.ஜ.க.வுக்கு எதிராக "ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது" எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அவசர அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

பா.ஜ.க.வுக்கு எதிராக "ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது" எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அவசர அழைப்பு

கொல்கத்தா,மார்ச்30- "நாட்டிலுள்ள அனைத்து முற் போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை சக்திக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முன்னெடுக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர்கள், பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மம்தா கூறியிருப்பதாவது: 

"நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பல முறை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, அமலாக்க இயக்குநரகம், சிபிஅய், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள் ளிட்ட ஒன்றிய அமைப்பு களைத் தவ றான முறையில் பயன்படுத்தி வருகிறது.

இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய நேரம் இது. 

நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனை வரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும்.

நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயம் எல்லாம் அமலாக்க இயக்குனரகம், சிபிஅய், மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வருமான வரித்துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகளை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். 

பாஜக ஆளும் மாநிலங்கள் ஒன்றிய அமைப்பின் நடவடிக்கை களில் இருந்து தப்பித்து விடுகின்றன.

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத் தில் வெளிநடப்பு செய்திருந்தபோது பாஜக கொண்டு வந்த சட்டங்கள் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஅய் தலை வர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க  ஒன்றிய அரசுக்கு உதவியுள்ளது.

நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற் போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக் காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகங்கள், பொது மக்கள் ஆகியவை நமது ஜனநாயகத் தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப் பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும்.

அரசாங்கம் சரியாக செயல் படுவதை உறுதி செய்வதும், எதிப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர் கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment