இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (8) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 25, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (8)

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (8)

மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகள் - குறிப்பாக பெண் குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்து வாழ இயலாத குழந்தைகள் - இப்படிப்பட்டவர்களுக்கென்று திருச்சியில் 63 ஆண்டுகளுக்கு முன்பு அன்னை நாகம்மை இல்லத்தை  அம்மாவும், அய்யாவும் துவக்கியதோடு அந்தக் குழந்தைகளை தாங்கள் பெறாத பிள்ளைகளாகவே வளர்த்து  ஆளாக்குவதில், பாசத்தோடு கல்வி மற்றும் பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்தனர். அய்யா, அம்மா காலந்தொட்டு தொடங்கி இன்றளவும் சிறப்பாக நடைபெற்று வருவது அவர்களின் தூய தொண்டறத்திற்குரிய சரியான எடுத்துக்காட்டு.

மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளை அரசின் சமூக நலத்துறையிட மிருந்து பெற்று அம்மா வளர்த்ததுடன் அப்பெண் குழந்தைகளுக்கு முன்னொட்டு (Initial) - E.V.R.M. '.வெ.ரா..' என்பதுடன் பெயர் வைத்து அழைத்து கருணை மழை பொழிந்தனர்.

அப்பிள்ளைகளுடன் மற்ற பிள்ளைகளும் எல்லாம் ஒருவிதமான பேதமும் இல்லாமல் வளர்ந்தனர். படிக்க வைக்கப்பட்டனர்.

பொதுவாக அரசு சட்டப்படி 18 வயது வந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் உதவிபெற சட்டப்படி வாய்ப்பில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படாமல், நமது மேல் நிலைப்பள்ளி - ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளில் சேர்த்தனர். பிறகு தஞ்சை வல்லம் - பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புகளில் சிலர்  சேர்ந்து படித்து - இன்று ஒருவர் Ph.D.,  பட்டமும் பெற்று பேராசிரியையாகப் பணி புரிவது எத்துணை அருமையான செய்தி! அப்படி அய்யா - அம்மா வளர்த்த நாகம்மை குழந்தைகள் இல்லத்துப் பெண் குழந்தைகள் 32 பேருக்கு வாழ்க்கை இணையும் தேடி, இணையேற்பு விழாவையும் நடத்தி வைத்துள்ளனர். ஆண் பிள்ளைகள் இருவருக்கும் அப்படியே செய்து அவர்களும் சிறப்பான பணிகளில் இருக்கின்றனர்!

அப்படி திருமணமான நாகம்மை இல்ல நம் பெண்களின் வாரிசுகள் பொறியாளர்களாகவும், டாக்டர்களாகவும் படித்து இன்று நல்ல வாழ்வாதாரமும் பெற்றிருக்கிறார்கள்!

அனாதை இல்லம் (Orphanage) என்ற சொல்லை நான் பொறுப்பேற்றபோது நீக்கி, "நாகம்மை குழந்தைகள் இல்லம்" என்று மட்டுமே அழைக்கச் செய்தேன். நாம் இருக்கும்போது - நம் தோழர்கள், ஆதரவாளர்கள் இருக்கும் போது - அவர்கள் எப்படி 'அனாதை'கள் ஆவர்கள்?  என்ற கேள்வி எங்களை உறுத்திக் கொண்டிருந்ததினால் அந்த ஏற்பாடு!

அய்யாவுக்கு வரும் பல அன்பளிப்புப் பொருள்கள், பண்டங்கள் எல்லாம் அம்மா வழியாக இல்லத்துக் குழந்தைகளுக்கு வழங்கப் படும். சத்துணவு தந்து அவர்களை கண்டிப்புடன் வளர்ப்பார் நம் அன்னையார் அவர்கள்!

அந்த EVRM  இனிஷியல் குழந்தைகள் மற்றும் சில பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கூட அய்யாவும், அம்மாவும் கவலையுடன் சிந்தித்து - 10, 15 ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் திருமணம் முடிந்து அவர்களுக்கு தரவென்று - R.D. (Recurring Deposit) தொகையாக தலைக்கு 5,000 ரூபாய் போட்டிருந்தனர். பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன  (PSRPI)  செயலாளரைக் கார்டியனாக்கி திருத்துறைப்பூண்டி கோஆபரேடிவ் வங்கியில் போட்டிருந்தார் அய்யா. காரணம் அதன் செயலாளர் பகுத்தறிவாளர், நம் இயக்கக் கொள்கையாளர். (திரு. கணபதி  B.A.  அவர்கள்).

அம்மா மறைவுக்குப் பிறகு அதுபற்றி அதிமுக நாளேடு ஒன்றில் அப்போது, நான் பினாமியாக அந்த தொகையை போட்டு வைத்திருப்பதாக அவதூறுச் செய்தியும் வெளியிட்டு மகிழ்ந்தது!

அந்தப் பிள்ளைகள் திருமணம் - மற்ற வாழ்வாதார நிகழ்வுகள் நன்று.

அப்படி ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கழித்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சாந்தா ஷீலா நாயர் அய்..எஸ். அவர்கள் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடந்த ஒரு ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் கையால் கொடுக்கச் செய்தோம் - வட்டித் தொகையுடன். அவர் ஏன் 5 ஆண்டுகள் கழித்து தருகிறீர்கள் என்று கேட்டார். அது அய்யா, அம்மா கட்டளை - திருமணமாகி அவர்கள் வாழ்வு இணக்கமான பிறகு தருவதே உசிதம் - இல்லையென்றால் பணத்திற்காக திருமணம் செய்வது, பிறகு ஓடிப் போய் விடக் கூடாது. என்று அறிவுறுத்தியுள்ளதால் இந்த ஏற்பாடு என்று சொன்னதைக் கேட்டு அவர் வியந்தார்.

அம்மா உடல் நிலை மோசமாகி, சென்னை  அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிக்சை பெற்று வந்தபோது குழந்தைகள் இல்லத்தில் அவர் வேதனையுறும்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment