கொழும்பு, மார்ச் 30 இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் புதிய மின் திட்டத்தை அமைக்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா ஆதரவுடன் செயல்படுத்தப்பட இருந்த மின் திட்டத்தை மாற்றி இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த வெளிநாட்டுச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட சீனா வங்கிகளிடம் வாங்கிய கடனும் காரணம் என சொல்லப்படுகிறது. கடனுக்காக பல திட்டங்களுக்கு சீனாவிடம் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும் செய்து வருகிறது. இந்தநிலையில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியா அளிக்கவுள்ள உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் ஒருபகுதியாக சீனாவுக்கு வழங்கப்பட்ட மின்சார உற்பத்தி திட்டங்களை இந்தியாவுக்கு மாற்றி வழங்க இலங்கை முன் வந்துள்ளது.
ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாகாணத்தில் 3ஆவது முக்கிய மின் திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. முன்னதாக சீன நிறுவனமான சினோசோர்-எடெக்வினுக்கு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை வழங்க முடிவு செய்தது. தமிழ்நாட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்க் விரிகுடாவில் சீனத் திட்டம் வருவதற்கு இலங்கையிடம் இந்தியா உடனடியாக கவலை தெரிவித்தது.
இதுமட்டுமின்றி இந்தியாவும் இலங்கையும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மய்யத்தை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் 6 மில்லியன் டாலர்கள் இந்திய மானியத்துடன் திட்டத்தை செயல்படுத்த இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, வடமாகாணத்தில் பருத்தித்துறை, பேசாலை, குருநகர், தலைநகர் கொழும்பிற்கு தெற்கே உள்ள பலப்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், தென் காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை வழங்குவதற்கும் இந்தியா உதவும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment