"அறிவு விருந்து" தொடர்-2 - ஊன்றிப்படித்து உள் வாங்குங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

"அறிவு விருந்து" தொடர்-2 - ஊன்றிப்படித்து உள் வாங்குங்கள்!

பெரியாரின் பன்முக ஆளுமை கலையும்-பெரியாரும்!  பேரா.மு.இராமசாமி

சில நாட்களுக்கு முன் பெரியார் திடலில் மே பதினேழு இயக்க நிறுவனர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் என்னைச் சந்தித்து, நீட் தேர்வு ஒழிப்பு, மத்திய கல்விக் கொள்கை, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவை பற்றி தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்றியமையா பரப்புரைப் பயணம் பற்றி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்ததோடு, அவ்வியக்கத்தின் சார்பில்நிமிர்வெளியீட்டகம் - புத்தகங்களை பரப்பும் அமைப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி, அதனைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன் வெளியீடுகளாக தந்தை பெரியாரின் 142ஆவது ஆண்டு பிறந்தநாளை ஒட்டி பல அறிஞர் பெருமக்களது உரைகள் தனித்தனி சிறு வெளியீடாக நேர்த்தியாக அச்சிப்பட்ட, மலிவுவிலை நூல்களை தந்தார். சில நாள்களில் பெரிதும் படித்தேன் - சுவைத்தேன்.

தந்தை பெரியார் பற்றி, பல்துறை அறிஞர்கள் பல தலைப்புகளில் பேசியவர்களின் நூல்கள் மிகப்பெரிய அறிவு வரைவுகளாக மிளிர்கின்றன.

கலகக்காரர் பெரியார்என்ற நாடகம் நடத்தி, பெரியாரின் சிந்தனைகளை ஒரு சிறப்பான புத்தாக்கமாக காட்டிய பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் ஆற்றிய அற்புதமான 29 பக்க  உரை புது வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது.

அதனை நமது வாசகப் பெருமக்கள் ஆழ்ந்து படித்து கற்கவேண்டும் என்ற அவாவுடன் அதனை இந்தப் பகுதியில் ஒரு அறிவு விருந்துத் தொடர் என்ற புதிய பகுதியாக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

பெரியார் தமிழுக்கு செய்த, கலைக்குச் செய்த அருந்தொண்டுகளை சிந்தனைச் செல்வர், பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் அருமையாக ஆவணப்படுத்தி உள்ளார்.

- கி.வீரமணி  (ஆசிரியர்)

நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதைக்கு அடியார்க்கு நல்லார் உரையெழுதுகையில், நாடகத்தை, ‘நாடகம், பிரகரணம், பிரகரணப் பிரகணம், அங்கம்என்று நான்கு வகை யாகப் பகுத்து, நாடகம் எனும் பிரிவு அந்தணர்களுக்கானது; அறம், பொருள், இன்பம், வீடு- நான்கும் தரக்கூடியது! பிரகரணம், அரசருக்கானது; அறம், பொருள், இன்பம் - மூன்றும் தரக்கூடியது! வீடு இவர்கள் கணக்கில் கழிக்கப்பட்டிருக்கிறது! பிரகரணப் பிரகரணம் வைசியருக்கானது; அறம், பொருள் இரண்டும் தரக்கூடியது! இன்பமும் வீடும் அவர்களுக்கானதில்லை! அங்கம் சூத்திரர்களுக்கானது; அறம் மட்டுமே இவர்களுக்கானது! பொருளும் கிடையாது; இன்பமும் கிடையாது; வீடு கிடையவே கிடையாது! என்னே மனிதத்துவம்? எழுத்துகளைப் பாகுபடுத்தி, இன்னின்ன வருணத்தினருக்கென்று எழுத்துகளையே பேதப்படுத்தி வைத்திருப்பதுபோல், கலை வடிவத்திற்குள்ளேயும் சமநீதி இல்லாமல்தான் - ஜாதிய பேதத்தை முன்னிறுத்திய தீண்டாமையேதான் இருந்திருக்கிறது! இப்பொழுது, இதையெல்லாம் யாருமே நடைமுறையில் பார்ப்பதில்லை என்பதெல்லாம் அறியாமைப் பேச்சு! வேறுவேறு வடிவில், மனு தன்னுருவை மாற்றிக் கொண்டேயிருப்பதுதான் வரலாறு! என்னவொரு ஏற்றத் தாழ்வு! சூத்திரனுக்கானது, ‘திருடாதே, பொய் சொல்லாதே, பிறன்மனை நோக்காதே, கள்ளுண்ணாதேஎன்கிற சமூக அறம் மட்டுமேதான்! இப்படியிருந்தால்தான், அது மற்றைய மூன்று வருணங் களுக்கும் பாதுகாப்பு!

நாம் எவரிடம் போய்த்தான் முறையிடுவது?

இருவகைக் கூத்தின் இலக்கணமறிந்துஎன்பதற்கு உரை எழுதுகையில், சாந்திக் கூத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு, அடுத்து விநோதக்கூத்தை விளக்குகிறார் அடியார்க்கு நல்லார்! விநோதக் கூத்தும் அவைதாம் என்னை? ‘குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, இத்துடன் விதூடகக் கூத்தையும் சேர்த்து ஏழென்பாரும் உளர்என்கிறார். ‘என்பாரும் உளர்என்பதால் வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்று என்பதாக நம் மனதில் கட்டமைக்கப்படுகிறது! ‘இவ் வெழுவகைக் கூத்தும் இழிகுலத்தோர் ஆடவகுத்தனன் அகத்தியன் தானேஎன்றுஅகத்தியனைச் சாட்சிக்கிழுத்து முடிகிறது அந்த உரை! இது, இழிகுலத்தோருக்கானது என்றால், ‘சாந்திக்கூத்து’, உயர்த்திக் கொண்டிருப்போருக்கானது என்பதாகவில்லையா? அகத்தியனே சொன்னான் என்றால், நாம் எவரிடம் போய்த்தான் முறையிடுவது? ஜாதி தானே இங்கேயும் இலக்கியம் வழியாக - கலைவடிவங்களின் வழியாக மண்டைக்குள் புகுத்தப்படுகிறது! உரையாசிரியர் சொன்னதுதானே என்று, அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிடவும் முடியாது. ‘மாமுது பார்ப்பான் மறைவலம் காட்டிட, தீ வலஞ் செய்து, மாநகர்க் கீந்தமணம் என்பதாய்க் கண்ணகி-கோவலன் திருமணம், மூலபாடமாய் இருக்கிறதே, அது, சுயமரியாதைத் திருமணமில்லையே என்பதல்ல நம் வினா!

திராவிட இழிவிற்கு எதிரான பெரியாரின் கலகக் குரல்!

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத் திறத்தார் பக்கமே சேர்கஎன்று கண்ணகி மதுரையை எரிப்பதை எப்படிப் பொருள் கொள்வது? பார்ப்பார் இருக்கட்டும், நமக்கிருக்கிற மனிதாபிமான அடிப்படையில்கூட அதை விட்டுவிடலாம். ஆனால், மற்றைய ஜாதியினர் ஏன் பலிவாங்கப்பட்டனர் என்பதற்கு, இட்டுக்கட்டல் வியாக்கியானமின்றி, ஏதாவது விவரணை இருக்கிறதா? நாமாவது யோசித்திருக்கிறோமா? அடைக்கலம் கொடுத்த புறஞ்சேரி மக்கள் என்னவானார்கள்? இந்தப் பிரதியின் நோக்கம், உயர்நீதியை, நால்வருணத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டும் ஒதுக்குவதன் மூலம், வழிவழியாய் அவர்களைப் பற்றி, நமக்கு மனச் சலவை செய்ய உதவுகிறதன்றி வேறென்ன? சமவுரிமை பேசுகிற, இனவுரிமை பேசுகிற, அதை நடைமுறைப்படு த்துவதில் வேகம் கொண்டிருக்கிற ஒரு இயக்கம், அதை எப்படிப் போகிற போக்கில் கடந்து சென் றுவிட முடியும்? இதற்கெல்லாமான சான்றாகத்தான், வடக்கிலிருந்து இறக்கி, இங்குத் தெய்வமாக நிறுவுகிற இராமாயணப் புனிதப் பிரதியை, வடவர்-தென்னவர் (ஆரியர்-திராவிடர்) போர் என்பதாக வாசித்துச் சொற்பொழிவுகளாகவும் நாடகமாகவும், இராவண லீலை களாகவும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு, பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் இருந்திருந்தது. அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட்ட சமூகப் பணிக்கு, இலக்கியத்தின் பேத - பாகுபாட்டு அரசியல் தடையாக இருந்ததால், அதை எதிர்க்கும் கலக இலக்கிய அரசியலை அவர் மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது! இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, நீஒஸ்தியாகக் கருதுகிற உன் இலக்கியங்கள் எல்லாவற்றுக்குள்ளும், மனுநீதிப் பார்ப்பான் ஒருவன் உட்கார்ந்திருக்கிறானே; பாகுபடுத்தும் மதம் ஒன்று உட்கார்ந்திருக்கிறதேஎன்பதாய், துணைக்கு யாருமற்ற பொட்டல் வெளியில், ஒற்றைக் குரலாய்த் தனித்து நின்று, நெருப்பைக் கக்கியிருந்தது, திராவிட இழிவிற்கு எதிரான பெரியாரின் கலகக் குரல்! இதுதான், கலை இலக்கியம் பற்றிய பெரியாரின் கலகப் பார்வையின் ஒரு சிறு துளி!

திராவிட இயக்கம்மக்கள் இயக்கமாகி...

பண்பாட்டுப் பெருவெளியில், தன் செயல் திட்டத்தை முன்மொழிந்திருந்த திராவிட இயக்கம், மக்கள் இயக்கமாகி யிருந்த பேச்சை, எழுத்தை, சுவரெழுத்தை, இதழியலை, இசையை, நாடகத்தை, திரையைத் தன் பக்கம் நகர்த்தும் வேலைத் திட்டத்தைத் தன் இயக்க அமைப்புப் பணிகளில் ஒன்றாகவே வடிவமைத்திருந்தது என்பது, முக்கிய மானது. திராவிட இயக்கப் படையணியின் ஒவ்வொரு முன்னணியினருமே, அதில் சூரர்களாய் அவர் பின்னால் அணிவகுத்து நின்றனர். மக்களையும், காலத்தின் எழுச்சியாய் அது சிந்திக்க வைத்தது; அதன்பால் அவர்கள் ஈர்க்கப்பட்டும் இருந்தனர்.

பேச்சையும் எழுத்தையும் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஓவியக் கலை, சிற்பக் கலைகளைப் பொறுத்தவரை,

கோவில்களைக் குற்றம் சொல்லி, அதில் உள்ள விக்கிரங்களின் ஆபாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால், ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு,  அவைகள்  அவசியம் இருக்க வேண்டும்என்றும்அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்என்றும்சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் கப்பாற்றுவதில்லைஎன்றும்ஓவியக் கலை அறிவிற்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்என்றும் சொல்லு கிறார்கள்

என்பதாக 26-04-1931 குடிஅரசு இதழில் பெரியார் எழுதியிருக்கிறார். மற்றபடி, கருத்துப் போருக்கான இயக்கமாக ஓவியம், சிற்பத்தைக் கொண்டு செலுத்திய தடயங்கள், பெரும் கவனத்துடன் கொள்கையானதாகத் தெரியவில்லை. ஆயின், பத்திரிகை மற்றும் சுவரெழுத்துக் கருத்துப் படங்களின் மூலம், ஊர்வலங்களில் கொண்டு செல்லும் பதாகைகளின் மூலம், தங்களின் ஓவியப் பசியை ஆரியத்திற்கெதிராகத் தீர்த்துக் கொண்டிருந்தனர். அவற்றின் கோடுகள்- கட்டமைப்புகளில், புனிதங்கள் கட்டுடைக்கப்பட்டிருந்தன.

கடவுளர், வடவர், பார்ப்பனர்கள் கேலிச் சித்திரங் களாக்கப்பட்டிருந்தனர்; சாமானியர்-விளிம்புநிலை மக்கள்-சூத்திரர் எனும் அபுனிதங்கள் கட்டமைப்பின் மய்ய வெளிக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர். பார்ப்பனர்கள்-பணமுதலைகள் தொப்பையும் நீண்ட குடுமியுமாக, மதக் குறியீடு போர்த்தியவர்களாய்க் காட்டப்பட்டிருந்தனர். இப்படித்தான் திராவிடச் சிந்தனைகள் ஓவியங்களாய்த் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. நாட்டார் ஓவிய மரபு, இதற்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

இறந்தவர்களுக்கும், தெய்வத்திற்கும்தாம் சிலை வைக்க வேண்டும் என்கிற புனிதத்தைக் கட்டுடைத்தவர் பெரியார்!

சிற்பத்தைப் பொறுத்தவரையும், ஆரியத்திற்கு எதிரான- பார்ப்பனீயத்திற்கு எதிரான போட்டி இயக்கமாக எதுவும், பெரிதாக உருப்பெற்றிருக்கவில்லை. சிற்பிகளுக்கும் இதனால் பொதுவெளியில் பெரிய வாய்ப்புகள் இருந்திருக்க வில்லை. புனிதம் நிரம்பியதாய்க் கருதப்பட்ட,  கடவுளர்  சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட, கோயில்களைச் சார்ந்தே-பெரும் நிறுவனங்களைச் சார்ந்தே,சிற்பிகளும் தொழிற்பட்டு வந்திருந்தனர். மிகுந்த பொருள் செலவாகும் பணியாகவும் சிற்பக்கலை இருந்தது. இதைக் கருத்தியல் நிலையில் எப்படி எதிர்கொள்வது என்பதற்குப் பெரியார்-திராவிட இயக்கம் கண்டுபிடித்திருந்த சூட்சமம் வியப்பைத் தரவல்லது. கோயில் கட்டுமானத்தினுள்ளே, புனிதம் போர்த்திய சிலைகளால் நிரம்பிய கோயில்களுக்கு வெளியே, திறந்தவெளியில் தன்னுடைய அபுனித உருவத்தைச் சிலையாக நிறுவுகிற-அறிவைத் தனக்கான குறியீடாய் உயர்த்திப் பிடிக்கும் விளக்காய் நிறுவுகிற-ஒரு நுண்ணரசியலாய்ப் பெரியாரின் சனாதன எதிர்ப்பு, சிலைகளாக வெளிப் பட்டிருக்கிறது. தனக்கும் புனிதத்தை ஏற்றிவிடக் கூடாதென்பதற்காக அதன் பீடத்தில், நிறுவப்பட்டிருக்கிற கடவுள் என்கிற புனிதத்திற்கு எதிரான, தன் அரசியலாய், அபுனிதமான முரண் முழக்கமான, ‘கடவுள் இல்லை இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டிஎன்பதாய் எழுதி நிறுவி, ஆகமக் கோயிலின் எதிரே ஒரு பண்பாட்டுப் போர் நிகழ்த்தியிருக்கிறார். தன் சிலையைத் தானே திறந்து வைத்து, இறந்தவர்களுக்கும், தெய்வத்திற்கும்தாம் சிலை வைக்க வேண்டும் என்கிற புனிதத்தைக் கட்டுடைத்தவர் பெரியார்! அதைப் பார்ப்பனப்  பத்திரிகைகள் கேலி பேசிய காலத்தில்,

நான் அழகன்ங்றதுக்காக என் சிலையை ஊரூரா நான் வைக்கலெ. ‘கோயில் இல்லா ஊர்லெ  குடியிருக்க வேண்டாம்னு அவன் சொல்றான். அவன்

கோயிலுக்குப் போய்ட்டு வெளியே வந்தா, கடவுளே இல்லேன்னு சொன்ன ஒரு கெழவனும் கல்லுப்போல இங்கே இருந்திருக்காங்ற அறிவைப் பரப்புறதுக்காக எதிர்- நுண் அரசியலாய்ச் சிலை வச்சிருக்கிறேன்.”

என்று சொன்னவர், அறிவாளிக் கருத்தாளி பெரியார்! அவரின் சிலையைத் திறந்து வைக்கிற திறன் கொண்ட முக்கியஸ்தர்களாய்த் திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வரும்போதே தலைவர்கள் வருகின்றனர் என்பது சமூக இயங்கியல்! அதனாலேயே, மதவெறி அரசியலின் கோபம் பெரியாரின் சிலைகளைக் குறிவைப்பதும் வரலாற்றில் இன்றுவரையும் நிகழ்ந்திருக்கிறது. கலை இலக்கியப் பண்பாட்டுப் பெரு நிழலில் புழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆரிய-திராவிட ஜாதிப் போர் அனைத் தையும், ‘பார்ப்பனியம்’, ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாமைஎனும் கருத்து நிழலில் நின்றே பெரியார் உறுதியுடன் எதிர்க்கிறார். பகுத்தறிவுதான்-அறிவுதான், அதன் குணரீதியான பலன்தான்- கலையுணர்வூட்டும் அழகியலின் நற்குணமாயும் அவருக்கு இன்பமூட்டுகிறது!

குடி அரசுஇதழில்...

இசையைப் பொறுத்தவரையில், பெரியார் 19.02.1928- இல்குடி அரசுஇதழில்சங்கீதமும் பார்ப்பனியமும்எனும் தலைப்பில்,

“...பார்ப்பனரல்லாத வித்துவான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்துவான்கள் என்பவர்கள், எவ்வளவு குறைவு படுத்தினாலும் லட்சியம் செய்யாமல், ‘சுவாமிகளேஎன்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள்பின் தொடர்கிறார்களேயொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே, ஒவ்வொரு ஊரிலும்பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம்ஏற்பட வேண்டுமென்று, பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே, கோவையிலும் முதன்முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கிறார்கள். மற்ற இடங்களிலும் இதைக் கவனித்து நடக்குமா

என்று ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இக்குறிப்பிற்கு முன்பிருந்தே, பார்ப்பனரல்லாத சங்கீத வித்துவான்களின் அமைப்பை உருவாக்கப் பெரியார் குரல் கொடுத்து வந்திருப்பது தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக,1930 ஏப்ரல் 20 நாளிட்டகுடி அரசுஇதழில், ‘வாய்ப்பாட்டு-36, புல்லாங்குழல்-10, பிடில்-19, மிருதங்கம்-36, கஞ்சிரா-10, ஜலதரங்கம்-4, கெதை-15, கடம்-1, டோலக்-1, நாகசுரம்-16, கொன்னக்கோல்-1, வீணை-3 என்று, பிராமணரல்லாத சங்கீத வித்துவான்களின் பெயர், முகவரிகளைப் பட்டிய லிட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. அதைத் தொடர்ந்து, அதற்கு அவர் கூறும் காரணம்,

சங்கீத மகா நாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது, மிக்க மேன்மையானதென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு, அது மிக்க இன்றியமையானதென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அநேகவிதமான உணர்ச்சித் தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர, இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத் துவம் கிடையாதென்பதே நமதபிப்ராயம்... நம்மைப் பொறுத்தவரை, நாம் இம்மகாநாட்டில் கலந்து  கொள்வதானது,  அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்னவெனில், சங்கீதத் துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்குச்  சுயமரியாதை  உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதற்காகவேதான், சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்தவேண்டுமென்று கருதி, நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு, தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து, அதன்முலம், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை.”

என்பதாய்த் தெளிவுபடுத்துகிறார்.

ஈரோட்டில் 12-05-1930-இல் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில், பிற்பகல் இரண்டு மணிக்கு, ‘முதலாவது தமிழ் மாகாண சங்கீத மாகாநாடுநிகழ்ந்திருக்கிறது. மே 10-ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘தென்னாட்டுச் சங்கீதமும் பார்ப்பனரல்லாத வித்துவான்களும்என்ற கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. சுயமரியாதை சமதர்ம இயக்கம், தன் திராவிட இனத்திற்கான அடையாளமாய், இசைக் கலைஞர்களைப் பார்த்த பார்வை இது! இலக்கியத்தைப் போலவே, இசைக் கலையிலும் அவரின் பார்வை, மானிட இழிவான உயர்வு-தாழ்வு, மேல்-கீழ் என்கிற வெளிப்படைப் பாகுபாட்டை உடைத்தெறிகிற ஒரு முயற்சியேயாகும்!

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி!’

காணாடு காத்தான் என்கிற செட்டிநாட்டு ஊரில், ஒரு திருமண ஊர்வலத்தில் மதுரை சிவக்கொழுந்து என்கிற நாகசுர இசைக் கலைஞர், ஒரு மூன்று முழத் துண்டைத் தன் தோளின் மீது போட்டுக் கொண்டு நாகசுரம் வாசித்து வந்து கொண்டிருக்கையில், தோளில் போட்டிருக்கிற துண்டை எடுத்து, இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்கச் சொல்லிக் கூட்டத்தில் ஒருவர் வற்புறுத்துகிறார். ‘வியர்வையினைத் துடைத்துக் கொள்ளவே தோளில் துண்டு. இடுப்பில் கட்டினால் முடியாதேஎன்கிறார் பணிவாக திரு சிவக்கொழுந்து! பிரச்சினையாகிறது அங்கு! அவ் ஊர்வலத்தில் இசை மழையில் நனைந்தவாறிருந்த, அஞ்சாநெஞ்சர் பட்டுக்கோட்டை அழகிரி, உடன் குறுக்கிட்டு, ‘துண்டை இடுப்பில் கட்ட வேண்டாம். அப்படியே இருக்கட்டும்என்கிறார். ஊர்வலம் நிற்கிறது. அங்கு பக்கத்தில், அய்யா தங்கியிருக்கிற இடத்திற்கு விரைந்து போய், அய்யாவிடம் இசைவு பெற்றுவிட்டு வருகிறார் அழகிரி! ‘என்ன வந்தாலும் நானிருக்கிறேன்: தோளிலிருந்து துண்டை எடுக்கக் கூடாதுஎன்கிறார் அழகிரி! வழக்கு அய்யாவிடம் போகிறது. அய்யாவின் தீர்ப்பு எப்படியிருக்கும்? இறுதியில் சிவக்கொழுந்து தோளில் துண்டணிந்தவாறே பெருமிதமும் ஆர்வமும் ஓங்க இசை விளையாடல் புரிந்துவர, அழகிரி ஒரு பெரிய விசிறியால் அவருக்கு விசிறிக் கொண்டே வர, ஊர்வலம் நடந்தேறுகிறது

(செ. திவான், ‘அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி’, டிசம்பர் 2008, பாளையங்கோட்டை).

இனி, நாடகத்திற்கு வருவோம்! நாடகத்தின் தோற்றம் பற்றி, நாடகத்தின் தொன்மை இலக்கண நூலான பரதமுனி யின்நாட்டிய சாஸ்திரம்சொல்லுகிற கதையும், மத நம்பிக்கையில்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அது, இப்படிச் செல்கிறது:-

முன் காலத்தில் ரிஷிகள் பரதமுனியைச் சந்தித்து, ‘பிராமணரே! தாங்கள் எவ்விதம் வேதத்திற்கு இணையான நாட்டிய வேதத்தை உருவாக்கினீர்கள்? யாருக்காக உருவாக்கினீர்கள்? எத்தனைப் பாடல்கள்? இதை எப்படி நடைமுறைப்படுத்துவது?’ எளிமைப்படுத்திச் சொல்வதாயிருந்தால், ‘எவ்விதம் உருவாக்கினீர்கள்? யாருக்காக உருவாக்கினீர்கள்? இந்த உருவாக்கத்தை எப்படிப் பிரயோகிப்பது?’ என்பதாகும். இதற்குப் பரதமுனி சொல்கிற பதில், ஸ்வயம்புவாமனுவின் கிருதயுகம் (பொற்காலம்) முடிந்து வைவாஸ்வதாமனுவின் த்ரேதாயுதக் (வெள்ளிக் காலம்) காலத்தில் மக்கள் உடலியல் இன்பத்திற்கு ஆட்பட்டிருந்தனர். ஆசை, பேராசை, கோபம், மகிழ்ச்சி, துன்பம் என்று வாழ்ந்திருந்தனர். இதைக் கண்ட கடவுளர்கள் அவர்கள் தலைவன் இந்திரனிடம் முறையிட, இந்திரன் இதை பிரும்மாவின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார். அங்குதான், ரிக், யஸூர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் கேட்கக் கூடாதவராயிருக்கிற பிரிவினரின் மனதை மாற்றவும், நான்கு வருணத்தாருக்குமானதுமான ஒரு புதிய வேதத்தை உருவாக்குவதாக முடிவு செய்யப்படுகிறது. பிரும்மா, நான்கு வேதங்களையும் தன் யோக நித்திரையில் ஓடவிடுகிறார். ‘அமிர்த மதன நாடகம்என்பதாகப் பாற்கடல் கடையும் இதிகாசக் கதையைக் கொண்டு, ரிக் வேதத்திலிருந்து பாடும் முறையையும், சாம வேதத்திலிருந்து இசையையும், யஸூர் வேதத்திலிருந்து அபிநயங்களையும், அதர்வண வேதத்திலிருந்து சுவையையும் எடுத்துப் புதிய அய்ந்தாவது வேதமாக நாட்டிய வேதத்தைப் படைக்கிறார் பிரும்மா! நாடகத்தின் தோற்றம் பிரும்மாவிடமிருந்து தொடங்குகிறது. கடவுளர்களுக்கு நடிக்கிற பக்குவம் போதாது என்பதால், அந்தத் திட்டம் பரதமுனியின் கைக்கு மாறி, அவர் தன் நூறு சீடர்களைக் கொண்டு, போதாக்குறைக்கு  பிரும்மனால் உருவாக்கப்பெற்ற அப்சரஸ்களைக் கொண்டும் அந்த நாடகம் உருவாக்கப் பெற்றது

என்பதுதான், நாடகத்தின் தோற்றமாகச் சொல்லப்பட்டிருக்கிறது நாட்டிய சாஸ்திரத்தில்!

(தொடரும்)

No comments:

Post a Comment