உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!!

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் - அவசரத் தேவையாகும்!

 தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது - வரவேற்கத்தக்கது!

உலகப் போராக மாறும் பேரபாயம் உண்டு என்பதால், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லா தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் என்பது அவசரத் தேவையாகும்! உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்குரிய பணிகளை மின்னல் வேகத்தில் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரின் பணி வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். ரஷ்யாவும், அந்நாடும் ஒரே கூட்டமைப்பில் இருந்தவைதான்.

எல்லா தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் அவசரத் தேவையாகும்!

இப்போது அந்த இரண்டு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளும், கொள்கை மாறுபாடுகளும் ஏற்பட்டதன் காரணமாக, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா நேற்று (24.2.2022) போர் தொடுத்திருப்பது, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாகும்.

போருக்குப் பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய சூழலில் இரு நாடுகளிடையே போர் என்றாலும்கூட அடுத்தகட்டமாக  உலகப் போராக' மாறும் பேரபாயம் உண்டு என்பதால், உடடினயாக அப்போரை நிறுத்த, எல்லா தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள்  அவசரத் தேவையாகும்!

‘‘புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட

போரிடும் உலகுதனை வேரோடு சாய்ப்போம்!''

என்ற புரட்சிக்கவிஞரின் வைர வரிகளை எந்த நாடு மறந்து, போரில் ஈடுபட்டாலும், அந்தந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி, மற்ற நாட்டவர்களுக்கும் அதன் பாதிப்புகள் பாரதூரமானவை - தவிர்க்க முடியாதவை.

எடுத்துக்காட்டாக ஒன்று -

பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலிய மூலப் பொருள் (குரூடாயில்) பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலரி லிருந்து 105 டாலராக உயர்ந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

அதனால், மற்ற நாட்டுப் பெருமக்களும்கூட பாதிக் கப்படுகிறார்கள்; நமது இந்திய நாட்டில் பண மதிப்பு மேலும் கீழிறக்கத்திற்குச் சென்று விலைவாசி உயர்வைச் சந்திக்கவேண்டிய நிலை வேகமாக உருவாகிறது.

மாணவர்களின் நிலையை

நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது!

உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு முதல் மற்ற படிப்புப் படிக்கச் சேர்ந்த நமது மாணவர்களும், பணியாளர்களும் ஏராளம் (30 ஆயிரம் பேர் இந்திய அளவில்; தமிழ்நாட்டிலிருந்து 5,000 மாணவர்கள்). அம்மாணவர்களின் நிலையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது! அவர்களைப் பாதுகாப்புடன், படிப்புப் போனாலும் பரவாயில்லை; உயிருடன் பத்திரமாகப் பாதுகாத்து மீட்கவேண்டும் என்ற கவலை பெற்றோருக்கு, தமிழ்நாடு மற்ற ஒன்றிய அரசுக்கும் ஏற்பட்டு, தீவிர முயற்சியில் இறங்கவேண்டிய திடீர் நெருக்கடி ஏற்பட்டு விட்டது!

அம்மாணவர்களின் அபயக்குரல் - ‘‘எங்களைக் காப்பாற்றிட, ஊருக்குத் திரும்ப உரிய ஏற்பாடுகளை காலதாமதமின்றி செய்யுங்கள்'' என்ற ‘‘எஸ்..எஸ். (SOS)''அழுகுரல் கேட்க - நமது இதயங்கள் வேதனை யால் வெந்து தவிக்கிறது!

நமது முதலமைச்சரின் மின்னல் வேக செயல்பாடு!

நமது தமிழ்நாடு முதலமைச்சர் நொடியும் காலதாமத மின்றி, மின்னல் வேகத்தில் அயலகத் துறையின்மூலம் மூத்த அதிகாரியைப் பொறுப்பாக்கி, டில்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் மூத்த அய்..எஸ். அதிகாரியை ஒருங்கிணைப்பாளராக - ஒன்றிய, மாநில அரசு நடவடிக் கைகளுக்கான முயற்சியை முடுக்கிவிட் டிருப்பது அவரது செயல் வேகத்தினைக் காட்டுவதும், தவிக்கும் பெற்றோருக்கு நம்பிக்கையையும்,  ஆறுதலையும் தந்துள்ளது.

நமது முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்கள் குறித்து தகவல் களை சேகரிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களை மீட்டுவர ஆகும் செலவை அரசே ஏற்கும் என்பது வரவேற்கத்தக்கது!

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 5 ஆயிரம் தமிழ் நாட்டு மாணவர்களை மீட்டு வர ஆகும் செலவினை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று இன்று (25.2.2022) முதலமைச்சர் அவர்கள், அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.

போர் தொடராமல் உடனடியாக நிறுத்தப்பட மற்ற அனைவரும்- தீயை அணைக்கத் தீவிரமாக எப்படி தீயணைப்பு வீரர்கள் முன்னின்று செயல்படுவார்களோ, அப்படி நடந்துகொள்ளவேண்டியது - அனைத்து நாடுகளின் அவசர அவசியமாகும்!

பிரதமர் மோடி, 'ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்துங்கள்' என்று கேட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நமது முதலமைச்சர், ஒன்றிய அரசினையும், பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும், விரைந்து இந்திய மாணவர்கள், பணியாளர்கள் திரும்பிட, விமானப் போக்குவரத்தை மீட்புக்கான விரைவு முயற்சியாக, விட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, அண்டை நாட்டு எல்லைப் பகுதி விமான நிலையங்கள் மூலமாவது அவர்கள் நாடு திரும்ப உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது இந்நேரத்தில் மிக முக்கியமானதாகும்!

மனித உயிர்கள் முக்கியம்!

உலக நாடுகள் - ''அய்.நா. சபை'' என்ற ஒன்று இருக்கிறதா? எதற்கு இருக்கிறது? அமெரிக்காவிற்குத் தலையாட்டவா? நேட்டோவா - ரஷ்யாவா என்பதா முக்கியம்? மனித உயிர்கள்தான் முக்கியம் - எந்நாட்ட வர்கள் என்றாலும், அவர்கள் காப்பாற்றப்படவேண்டும்.

அமைதி உலகு திரும்பவேண்டாமா? பொது முயற்சிகள் வெற்றி பெறட்டும்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

25.2.2022            

No comments:

Post a Comment