சென்னை, பிப் 15 நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு அரசைப் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி மேனாள் தலைவர் சுகதேயோ தோரட் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசியக்கல்வி கொள்கை குறித்து விமர்சித்ததுடன், அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை ஒன்றிய அரசு செயல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் சமூக-பொருளாதார சமத்துவத்திற்கான சங்கம் (ASEE) ஏற்பாடு செய்திருந்த இணையதள நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய சுகதேயா தோராட் கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!
இவ்இணையதள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘ ‘ நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக்கொள்கை ஆகிய இரண்டும் ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் இந்த கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது'' என்று குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் நிலையில், அதுதொடர்பான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நீட் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்களுக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, ஆதரவு கோரியுள்ளார். நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநில அரசுகளும் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும்
இந்த நிலையில், அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை ஒன்றிய அரசு அமல்படுத்தலாம் என்று கூறியுள்ள பல்கலைக்கழக மானியக் குழு மேனாள் தலைவர் சுகதேயோ தோரட், அதனைத் தடுக்க நீட் விவகாரத்தில் மற்ற மாநில அரசுகளும் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
‘நீட்' மூலம் கிடைத்த பாடம்
சமூகப் பொருளாதாரீதியாக பின் தங்கியவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதில் நுழைவுத்தேர்வின் தாக்கம் குறித்து பேசிய அவர்,தேசியக் கல்விக் கொள்கையானது அனைத்துப் படிப்பு களுக்கும் மய்யப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வரும் வகையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார், அத்தகைய தேர்வுகளின் மூலம், எளியோருக்கு கிடைக் கும் கல்வியை தடைசெய்யும் என்றார். பயிற்சி வகுப்புகளைத் தேர்வு செய்ய பணம், நேரம் மற்றும் பிற வளங்களைச் செல வழிக்கக்கூடியவர்கள் மட்டுமே கல்விக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள், இதை நீட் மூலம் கிடைத்த பாடம் சுட்டிக் காட்டுகிறது என்றும் சுகதேயோ தோரட் கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபு, தேசிய உயர்கல்வித் தகுதிக்கான வரைவுக் கட்டமைப்பை சமீபத்தில் யுஜிசி வெளியிட்டதுடன், தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராகப் போராடுவது குடிமக்களின் கடமையாகும். .திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் சட்டமன்றத் தேர்தலில் மாநில உரிமைகளை மீட்பதில் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து பல்வேறு அமைப்புகளுடன் பேசி தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்படாது என்று உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தவர், நீட் மற்றும் தேசிய கல்விக்கொள்கையை ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் என்றார்.
சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டபேரவைக்குத் திருப்பி அனுப்பியதை சுட்டிக்காட்டிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை இருந்தது என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆய்வாளரும் ஆர்வலருமான சயானிகா ஷா, நுழைவுத் தேர்வுகள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பேசினார்.
No comments:
Post a Comment