உச்சநீதிமன்றத் தீர்ப்பை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில் இருந்ததினால் கிடைத்த வெற்றி இந்தத் தீர்ப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கமாக விவரமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்

கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி உரை

சென்னை, பிப்.15   தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில் இருந்ததினால் கிடைத்த வெற்றி இந்தத் தீர்ப்பு. உச்சநீதிமன்றத் தீர்ப்பை பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குக் காணிக்கை யாக்குகிறேன் என்றார் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள். இதுகுறித்து நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கமாக விவரமாக நமக்கு சொல்ல விருக்கின்றார் என்றார்   திராவிடர் கழக வெளியுறவு துறை செயலாளர் கோ.கருணாநிதி  அவர்கள்.

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு

கடந்த 1.2.2022 அன்று மாலை  உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி  தொடக்கவுரையாற்றினார்.

அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சங்கரநாராயணன் அவர்கள், தன்னுடைய  வாதத்தில் என்ன குறிப்பிட்டார் என்று சொன்னால்,

''பொதுநலம் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் சுணக்கம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, ஓபிசி ஒதுக்கீடு கோரும் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றுதான் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, தாங்கள்தான் அந்த சமூகநீதிக்காகப் போராடினோம் என்று ஒரு சிலர், குறிப்பாக ஒன்றிய அரசில், ஆளுங்கட்சியில் அந்தக் குரல் கேட்கின்றது என்று சொன்னால், அவர்களுடைய நிலைப்பாடு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் இந்த ஆதாரப்பூர்வமான தகவலை இந்த மன்றத்திலே நாங்கள் வைக்க விரும்புகின்றோம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு

அனைத்து வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் .கே.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள், 27.7.2020 அன்று அளித்த தீர்ப்பில் என்ன சொன்னார்கள் என்றால்,

''ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு கொள் கையை சட்டமாக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு அதிகாரங்களைப் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கப்படவில்லை.

அதேபோல, பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு, மருத்துவப் படிப்புகளிலேயே மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில், ஓபிசி பிரி வினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டமும் அல்லது அரசமைப்புச் சட்டமும் தடையாக இல்லை'' என்பதாக அந்தத் தீர்ப்பிலே நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை யிலே - திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், செப்டம்பர் 23, 2020 அன்று இதே பிரச்சினையை அங்கு எழுப்பினார்.

உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்கின்ற எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை

அப்பொழுது அதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் துபே அளித்த பதிலில்,

''சலோனி குமாரி வழக்கில், அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அந்தந்த மாநிலத்தில் உள்ள அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை அளிப்போம்'' என்கின்ற அந்தத் தகவலைத்தான் சொன்னாரே தவிர, உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்கின்ற எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.

மீண்டும் அந்தப் பிரச்சினையை மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகியோர் எழுப்பினர்.

அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதினார்.

அனைத்திற்குமே ஒன்றிய அரசின் சார்பில், நாங்கள் இத்தனை சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்போம்  அல்லது மாநில வாரியான இட ஒதுக்கீட்டை நிறை வேற்றுவோம் என்பதான பதில் இல்லாமல், அதனை ஒட்டுமொத்தமாக நாங்கள் பரிசீலிக்கின்றோம்  என் கின்ற அளவிலேதான் அரசினுடைய கருத்து இருந்தது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில்...

இந்த நிலையில்தான், 8.10.2020 அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய சுகாதார செயலாளருக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் ஒரு உத்தரவிட்டது.

அதில், நீங்கள் வரும் கல்வியாண்டிலே ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

ஆனால், அதுகுறித்தும் ஒன்றிய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, அக்டோபர் 16, 2020 அன்று, உச்சநீதி மன்றத்தில், ஒன்றிய அரசின் சார்பில், என்ன அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது என்று சொன்னால்,

''மருத்துவப் படிப்பிற்கு, அகில இந்திய தொகுப்பில், ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு சாத்தியமில்லை'' என்றுதான் பதிலளிக்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீட்டிக்க முடியாது: ஒன்றிய அரசு தகவல்

அதுமட்டுமல்ல, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, மாநில அரசு வழங்குகின்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களில்,  இட ஒதுக்கீடு 2020 - இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு நீட்டிக்க முடியாது என்று   நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையின் அமர்வு முன் ஒன்றிய அரசு தெரிவித்தது.

அதற்குப் பின்பு பிப்ரவரி 23, 2021 அன்று  முதுநிலை படிப்பிற்கான நீட் அறிவிப்பினை ஒன்றிய அரசு வெளியிட்டது.

தி.மு.. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அதில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அதன் பிறகுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மார்ச் 2, 2021 ஆம் தேதியன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத் தார்கள்.

அந்த வழக்கின் அடிப்படையில், ஜூலை 20, 2021 ஆம் தேதியன்று இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய அரசினுடைய கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்து,  சென்ற ஜூலை 21, 2020 அன்று நாங்கள் அளித்த தீர்ப்பினை நீங்கள் மதிக்கவில்லை; அதனை அவமதித்தீர்கள் என்று கண்டனம் செய்தார்கள்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் வாசகம்!

அந்த வாசகங்களை இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன்.

"The Union government's attempt to not implement the OBC reservation quota in respect of the All India Quota (AIQ) seats for admission to medical courses in the state in the academic year 2021-22 appears to be contumacious, inderogation of the order dated July 27, 2020, passed by this court and contrary to the representation made before the Supreme Court." 

contumacious  என்ற கடுமையான வார்த் தையைப் பயன்படுத்தினார்கள்.  contumacious    என்று சொன்னால், திட்டமிட்டே கீழ்ப்படியாமை  இருப்பது என்பதுதான் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, எங்களுடைய ஆணையை ஒன்றிய அரசு அவமதிக்கின்றது என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், கலந்தாய்வினை நடத்த முடியாது

அந்த வழக்கின் தீர்ப்பில் மேலும் அவர்கள் சொன்னது, ''நீங்கள், வருகின்ற இந்த ஆண்டிலே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், கலந்தாய்வினை நடத்த முடி யாது என்று சொல்லிவிட்டார்கள்.

அதனால்தான், உடனடியாக ஒன்றிய அரசினுடைய தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா 26.7.2021 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து, ஒன்றிய அரசு இதுகுறித்து விரைவான முடிவை எடுத்திருக்கிறது; அதனை ஓரிரு நாளில் அறிவிக்கும்'' என்றார்.

உயர்ஜாதி  அரிய வகை ஏழைகளுக்கும் தருவோம் என்பதை இணைத்து அந்த ஆணையை வெளியிட்டது ஒன்றிய அரசு

அதனைத் தொடர்ந்துதான், ஜூலை 29, 2021  அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்புக் கண்டனத்தைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மருத்துவப் படிப்பில், அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதான ஆணையை  -அத்தோடு யாரும் கேட்காமல், எந்தப் போராட்டமும் இல்லாமல், எந்தக் கோரிக்கையும் இல்லாமல், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி  அரிய வகை ஏழைகளுக்கும் தருவோம் என்பதை இணைத்து அந்த ஆணையை வெளியிட்டது ஒன்றிய அரசு.

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

நாக்பூர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணையைப் பெற்றனர்

இதேபோன்ற ஒரு வழக்கு, நாக்பூர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த வழக்கில், 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அகில இந்திய தொகுப்பு இடங்களில் தரவேண்டும்  என்று ஒன்றிய அரசுக்கு 31.7.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான ஒன்றிய அரசினுடைய வழக்குரைஞர், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது - ஆகவே, ஒரு நாள் நீங்கள் காத்திருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, மறுநாளே, 1.8.2018 அன்று உச்சநீதிமன்றம் சென்று, நாக்பூர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணையைப் பெற்றனர்.

இதுதான் வரலாறு.

இதுபோன்ற நிலைமையில்தான், ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வந்தது. இறுதியாக, 29.7.2021 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு - கண்டனத்திற்கு எதிரொலியாகத்தான் ஒன்றிய அரசு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளிக்கக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளானது என்கின்ற செய்தியை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அந்த அளவிலேதான், உச்சநீதிமன்றத்தின்  29.7.2021 அன்று கொடுத்த ஆணைக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தில் ஒரு வழக்கு வந்தது - அந்த ஆணை செல்லாதது என்று அறிவிக்கவேண்டும் என்று. முக்கியமாக, உயர்ஜாதி ஏழைகளுக்கு எதிராகத்தான் வழக்கு. ஆனால், அது மட்டும் எடுக்கப்பட்டு இருந்தால், நிச்சய மாக அதற்குத் தடை கூட கிடைத்திருக்கும்.  ஆனால், அவ்வாறு தீர்ப்பு வந்துவிடும் என்கின்ற எண்ணத் தினால்தான், ஒன்றிய அரசு, 27 சதவிகித இட ஒதுக் கீட்டையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டதோ  என்கின்ற சந்தேகம் இன்றைக்குப் பலருக்கும் இருக் கிறது.

உயர்ஜாதி அரிய வகை ஏழைகளைப்பற்றித்தான் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்!

ஆனால்,  அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் 27 சதவிகித இட ஒதுக்கீட்டைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை.

மாறாக, உயர்ஜாதி அரிய வகை ஏழைகளைப் பற்றித் தான் தொடர்ச்சியாகக் கேள்விகளை வைத்தார்கள்.

அந்த 10 சதவிகிதத்திற்கு உங்களிடத்திலே தரவுகள் இருக்கின்றனவா?

8 லட்சம் ரூபாய் வருமான வரம்பை எதனடிப் படையில் வைத்தீர்கள்? என்கின்ற இரண்டு  கேள்வி களுக்கும் ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

மாறாக, ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான், நாங்கள் அதனை நியாயப்படுத்துகின்றோம் என்ற அடிப்படை யில்தான், 8 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என்பதாக, ஒரு குழுவினுடைய அறிக்கையை வைத்தார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு

ஆனால், இந்த ஆண்டு, அதனை தடை செய்யக் கூடாது என்கின்ற நிலையிலேதான், 7.1.2022 அன்று, மாண்புமிகு நீதிபதிகள் டாக்டர் சந்திரசூட், போபண்ணா ஆகியோர், 27 சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்கின்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினைக் கொடுத்து,

EWS தொடர்பாக வழக்கினை மார்ச் மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்தி வைத்து, இந்த ஆண்டு இதனைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வரலாற்று தொகுப்பை இங்கே பதிவு செய்ததற்குக் காரணம், இன்றைக்குப் பலரும், இந்த வெற்றிக்கு, இந்த சரித்திரம் வாய்ந்த தீர்ப்பிற்கு, தாங்கள்தான் போராடினோம், தாங்கள் தான் கோரிக்கை வைத்து வென்றோம் என்று  சிலர் சொல்லிக் கொள்கிறார்களே,  அதற்காக. உண்மை யாகப் போராடியது திராவிட இயக்கம், தமிழ் நாட்டில் தொடங்கிய இயக்கத்தின் காரணமாகத் தான் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை நாம் பெற்றிருக்கின்றோம் என்று உணர்த்துவதற்காகத்தான் அந்தக் கருத்துகளை இங்கே சொல்லியிருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும்

ஒரே உணர்வில்...

அந்த வகையிலேதான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில், இந்த சமூக நீதிப்  போராட்டத்தினை நடத்தினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சமூகநீதிக் கான சரித்தரி நாயகர் - சட்டப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்தி, இந்த சாதனையைப் படைத்திருக் கின்றார். அவருக்கு நம்முடைய வாழ்த்துகள்!

அதேபோன்று நீதிமன்றத்தில் மிகச் சிறப்பான முறையிலே வாதாடி, திறன்பட வாதங்களை எடுத்து வைத்த மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி., அவர்களுக்கு நம்முடைய பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறிய இரண்டு செய்திகள் மிக மிகச் சிறப்பான செய்திகளாகும்!

தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன்

ஒன்று, அந்தத் தீர்ப்பு வந்த நேரத்தில், அவர் சொன்ன கருத்து என்னவென்று சொன்னால்,

இந்தத் தீர்ப்பை நான் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று சொன்னார்.

அதேபோல, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு..விற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. சமூகநீதி வர லாற்றில் முக்கியமான மைல்கல் என்று சொன்னார்.

நம்முடைய தமிழர் தலைவர்அவர்களும், அதே கருத்தை வலியுறுத்துகின்ற வகையில்தான் அறிக்கை வெளியிட்டார்கள்.

நூறு விழுக்காடு இடத்தையும் நிரப்பிக் கொள்ள நடைமுறையும் வரவேண்டும்

அதுமட்டுமல்ல, முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையில் மேலும் இரண்டு செய்திகளை கூறினார்.

அந்த வாசகங்களை நான் இங்கே சொல்ல விரும்பு கின்றேன்.

''அண்மைக்காலத்தில், எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டு, அந்த மாநில மாணவர்கள், தங்கள் மாநிலத் திலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்திய தொகுப்பு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும், அதன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, நூறு விழுக் காடு இடத்தையும் நிரப்பிக் கொள்ள நடைமுறையும் வரவேண்டும் என்பதுதான் தி.மு..வின் நிலை.

இரண்டு, அதை நோக்கிப் போராடுவதோடு,  தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும் எதிர்காலத்தில் முயற்சிகளைத் தொடருவோம்'' என தி.மு.. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு..ஸ்டாலின் அவர்கள் கூறிய கருத்துகள் நிச்சயமாக பாராட்டத்தக்க ஓர் அறிவிப்பாக நாம் பார்க்கவேண்டும்.

நீதிபதிகளுக்குப் பாராட்டு!

இந்த நேரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு - பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்த நீதிபதிகள் டாக்டர் சந்திரசூட், போபண்ணா ஆகியோருக்கு நம்முடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகுதி, திறமை, மதிப்பீடு குறித்து அவர்கள் அளித்திருக்கின்ற விளக்கமானது மிகமிக சிறப்பானது.

இதுநாள் வரை நம்முடைய திராவிட இயக்கம், தந்தை பெரியார் தொடங்கி, சமூகநீதி ஆர்வலர்கள் கூறி வந்த தகுதி திறமை குறித்து அரசமைப்புச் சட்டம் 15(4), 15(5) ஆகியவை குறித்த விளக்கமும், நமது அடுத்தகட்ட சமூகநீதி குறித்து பெரும் கேடயமாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இங்கே விரிவாக, விளக்கமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்கள்

ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக இருக்கிறது. அந்தத் தீர்ப்பினுடைய விளக்கங்கள் மிகமிக ஆழமானவை; மிகமிக சிறப் பானவை என்பதை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இங்கே விரிவாக, விளக்கமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்கள்.

அவருடைய கருத்தினை நாம் அனைவரும் கேட்போம்.

வாய்ப்புக்கு நன்றி!

வணக்கம்!

இவ்வாறு  திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment