பிப்.17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 16, 2022

பிப்.17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை..!

சென்னை, பிப்.16 பிப்.17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கி செலுத்தாதவரின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விட  அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, பிப்.16 கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதால் வாடகை பாக்கியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதுடன் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அந்த சொத்துகளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையில் வாடகை பாக்கியைபெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வாடகை செலுத்தாதவர் களுக்கு தாக்கீது வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம், வாடகை பாக்கி நிலுவை விரைவாக வசூல் செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண் பாதிப்புள்ள மாணவர்கள் கைப்பேசி தவிர்க்க  அறிவுரை

சென்னை, பிப்.16 பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் காணொலி  வாயிலாக நேற்று  (15.2.2022) பேசியதாவது:

பள்ளிகளில் கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்களுக்கு கவனச் சிதறல், கல்வியில் பின்தங்கிய நிலை ஏற்பட பார்வை குறைபாடு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, பார்வையை சரியாக பராமரிக்க, கண்ணொளி காக்கும் திட்டத்தில் ஆண்டுதோறும் 16 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 25 லட்சம் மாணவர்களுக்கு பரிசேதிக்கப்படுகிறது.

இதில் கண் பார்வை பாதிப்புள்ள 1.2 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கண்ணாடிகளை தெடர்ந்து அணிந்தால் தான் பார்வை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு கண் பிரச்சனை உள்ள மாணவர்கள் கைப்பேசிகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், சரிவிகித உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு எடுத்தால், பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment