2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 17, 2022

2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு

சென்னை, பிப்.17  தமிழ்நாட்டில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 

 இந்தியாவில் கரோனா தொற்று பரவல்   காரணமாக கடந்த 2020 மார்ச் 14-ஆம் தேதி தேசிய பேரிடராக இந்தியா அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2020 மார்ச் 16-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 17-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டது. (அன்று முதல்   15.2.2022 வரை நர்சரி பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது).

பின்னர், 2020 மார்ச் 22-ஆம் தேதி, முதன்முதலாக 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து மார்ச் 24-ஆம் தேதி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அன்று முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. பின்னர், கரோனா தொற்று பரவல் குறைய, குறைய பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில், கடந்த 12-ஆம் தேதி முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மழலையர் பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் 16-ஆம் தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை சுமார் 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மழலை ச்செல்வங்கள் தாங்கள் பள்ளிக்கு செல்வதை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று புத்தாடை சகி தம் புத்தகப்பையுடன் பள்ளிக்கு மிகவும் ஆர்வமாக மழலை செல்வங்கள் வந்தன.

பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மழலைகளை ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு  பருகுவதற்கு தண்ணீர் கொடுத்தும், முகத்தில் முககவசத்தை ஒழுங்காக அணிவித்தும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment