குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா?

தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில்

ஜனவரி 26 அன்று கட்சி அலுவலகங்கள் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம், வாரீர்! வாரீர்!!

ஜனவரி 26 ஆம் தேதியன்று புதுடில்லியில் நடக்கவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார   ஊர்திக்கு அனுமதி மறுத்துள்ளதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள், சமூக அமைப்புகளின் அலுவலக வாயிலில் அணிவகுத்து நின்று தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியா சுதந்திரம் அடைந்த பவள விழாவையொட்டி (75 ஆண்டுகள்) வரும் குடியரசு நாளான ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் நடைபெறவிருக்கும் அலங்கார அணிவகுப் பில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடம் அளிக்காமல் புறக்கணித்துள்ள இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

22 மாநிலங்கள் கொண்ட இந்திய ஒன்றியத்தில், குடியரசு நாள் அணிவகுப்பில் அத்தனை மாநிலங் களுக்கும் பங்களிப்பு அளிக்கப்படுவதுதான் இந்திய ஒருமைப்பாடு என்பதற்கான நியாயமான செயல்பாடாக இருக்க முடியும்.

பரிகசிக்கத் தகுந்ததே!

தேசியத்தையும், ஒருமைப்பாட்டையும் ஒரு பக் கத்தில் ஓங்கிப் பேசிக்கொண்டு, வற்புறுத்திக் கொண்டு இன்னொரு பக்கத்தில் பிரிவினை மனப்பான்மையோடு ஒன்றிய அரசே நடந்துகொள்ளும் முரண்பாடும் - வினோதமும் - பரிகசிக்கத் தகுந்ததே!

குடியரசு நாள் அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்த வகையான அம்சங் களும், அடையாளங்களும், தகவல்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றவையே!

தமிழ்நாட்டின்மீதான அவமதிப்பு என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த எண்ணம்

இதில் ஒன்றிய அரசு தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது - நியாயமும் கிடையாது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான அலங்கார அணி வகுப்பில், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், செக்கிழுத்த செம்மல் ..சி., பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.

இவை இடம்பெறும் தமிழ்நாட்டிற்கான அலங்கார ஊர்தி அணிவகுப்பை - ஒன்றிய அரசு நியமித்த 10 பேர் கொண்ட குழு நிராகரித்துள்ளது.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, விளக்கங்கள் சொன்ன நிலையிலும், இந்தப் புறக்கணிப்பு, தமிழ் நாட்டின்மீதான அவமதிப்பு என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த எண்ணம் என்பதில் அய்யமே இல்லை.

பா... ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள்  புறக்கணிப்பு

இதற்கான காரணங்கள், விளக்கங்கள் பொருத்த மின்றிச் சொல்லப்பட்டாலும், பா... ஆட்சிப் பொறுப் பில் இல்லாத மாநிலங்கள்  புறக்கணிப்பு என்பதுதான் மய்யப் புள்ளியாக உள்ளது.

கரோனா காரணமாக அலங்கார ஊர்திகளின் எண் ணிக்கை குறைக்கப்பட்டதாக ஒரு விளக்கம்; 12 ஊர்திகள் வந்தால் கரோனா தொற்றாது; 22 ஊர்திகள் வந்தால்தான் தொற்றும் என்பதெல்லாம் நகைப்புக்குரியதாகும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் பேசும் கொள்கையுடைய ஒன்றிய பா... அரசின் கொள்கைக் கோட்பாட்டின் தாக்கமே இதற்குள் தந்திரமாக, வஞ்சகமாகப் பதுங்கியுள்ளது.

அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கண்டனக் குரலை எழுப்பும் அமைதி ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் உள்பட தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை ஒலிக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் அணிவகுக்கும் அந்தக் குடியரசு நாளன்று (26.1.2022) தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி அலுவலகங்களின் வாயிலிலும், வீடுகளின் முன்பாகவும் தனி நபர் இடைவெளி விட்டு, அணிவகுத்து நின்று தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியைத் தெரி விக்கும் வகையில் கண்டனக் குரலை எழுப்பும் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள சமூக அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும்கூட இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழ்நாட்டின் ஒத்தக் குரலை எழுப்புமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நாடு அல்ல; பன்முகக் கலாச்சாரங்களை, மொழி, நாகரிகம், பண்பாட்டை உள்ளடக்கிய நாடு என்பதை  வெளிப் படுத்த இதுவே சரியான தருணமாகும்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

19.1.2022

No comments:

Post a Comment