பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களால் கரோனா அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களால் கரோனா அதிகரிப்பு

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

சிம்லா, ஜன.18 இமாசலபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கரோனா அதிகரித்ததற்கு பிரதமர் மோடி நடத்திய பொதுக்கூட்டங்களே காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றம் சாட்டின.

இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் தீபக்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும்போது பா.ஜனதா தலைவர்கள், குறிப்பாக பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் மக்கள் பாதிக்க ப்படுகின்றனர். சமீபத்தில், மண்டியில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தால்தான் இமாசலபிரதேசத்தில் கரோனா அதிகரித்துள்ளது.

மாநில பா.ஜனதா அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் அவையெல்லாம் பா.ஜனதா தலைவர்களுக்கு பொருந்தாது போலிருக்கிறது. தான் விதித்த கட்டுப்பாடுகளை மாநில அரசே மீறி வருகிறது.

மாநில அரசே பின்பற்றாதபோது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜனதா நடத்தும் பொதுக்கூட்டங்களை பொதுமக்கள் புறக்கணித்து, தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மாநில அரசு, பொது நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு, காணொலி மூலம் நடத்த வேண்டும். குடியரசு தின கொண்டாட்டத்தையும் காணொலியில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோல், பா.ஜனதா ஆளும் திரிபுராவிலும் கரோனா அதிகரிப்புக்கு பிரதமர் மோடியே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திரா கூறியதாவது:-

ஒன்றிய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கடந்த 4-ஆம் தேதி பிரதமர் மோடி திரிபுராவில் பொதுக்கூட்டம் நடத்தினார். அதனால்தான் திரிபுராவில் கரோனா அதிகரித்தது.

மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கரோனா பரிசோதனை மய்யங்களை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment