பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு - தமிழ் படிக்காத வெளிமாநிலத்தவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 5, 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு - தமிழ் படிக்காத வெளிமாநிலத்தவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது

.தி.மு.. ஆட்சியின் ஆணை ரத்து செய்யப்படவேண்டும்

நடக்க இருக்கும் தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பை வெளியிடுக!

தமிழ் படிக்காத - -& தமிழ் மொழி தெரியாத வர்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணி அமர்த்துவது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குப் பாதக மானது. கற்பித்தலிலும் பிரச்சினை ஏற்படும். எனவே, வரும் 8-&ஆம் தேதி முதல் நடக்கும் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து, தமிழ் படித்தவர்களுக்கே விரிவுரையாளர் வாய்ப்பு என்கின்ற ரீதியில் புதிய அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 2017 இல், தமிழ்நாட்டிலுள்ள அரசு பல் தொழில் நுட்பக்  கல்லூரிகளில் காலியாக இருந்த விரி வுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வில், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றனர். இதனை அப்போதே கண்டித்து (11.11.2017) அறிக்கை  வெளியிட்டோம்.

அத் தேர்வுத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்த தாகக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்தி வைக்கப் பட்டதோடு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 200-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி நடந்திருக்கவேண்டிய தமிழ்நாட்டி லுள்ள அரசு பல்தொழில்நுட்பக்  கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு, கரோனா தொற்றின் காரணமாகத் தள்ளிப் போடப் பட்டுவரும்  டிசம்பர் 8, 9,10,11 மற்றும் 12  ஆகிய நாள்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் துள்ளது.

தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களால்...

இத்தேர்வில், தமிழ் அறியாத வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் அறி யாதவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், தமிழ்நாட்டில் படித்துத் தேர்வாகியுள்ள மாணவர்களின் வேலை வாய்ப்புப் பறிபோகும் ஆபத்து உள்ளது.

தமிழ் தெரியாதவராயினும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாட்டுப் பணிகளுக்குத் தேர்வெழுத லாம் என்றும், தேர்வானால் அடுத்த இரண்டாண்டு களுக்குள் அவர்கள் தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  The Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 சட்டத்தின் விளைவாகத் தான் இந் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிற மாநிலங்களைப் பாரீர்!

வேலைவாய்ப்பு என்ற அளவில் மட்டுமல்ல, கல்வியிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமே! கிராமப்புறங் களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ்நாடு மாணவர்களுக்குப் பிற மொழியினரால் தமிழில் விளக்கம் சொல்லி பாடம் நடத்த முடியுமா? பல்வேறு மாநிலங்களில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசுத்தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் கடந்த அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட இந்த நிலையை உடனடியாக மாற்றவேண்டியது அவசியமாகிறது.

தி.மு.. அரசும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு கொள்ளை போகக் கூடாது என்பதில் மிகவும் அக் கறையோடு செயல்பட்டுவருகிறது. 01.12.2021 அன்றைய அரசாணையும் அதன் அடிப்படையிலேயே வெளியிடப் பட்டுள்ளது. அதை நாம் பெரிதும் வரவேற்றுள்ளோம்.

அவ்வகையில், இந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடமும் முக்கியமானதாகும். அதிலும் தமிழ் தெரிந்தோர் மட்டுமே தேர்வு  எழுதிடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும.

தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பை வெளியிடுக!

எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, டிசம்பர் 8 முதல் நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நிறுத்தி, புதிய அறிவிக்கையை (Notification)  வெளியிட்டு, 01.12.2021 அன்று வெளியிடப்பட்ட மனித வள மேலாண்மைத் (எம்) துறை, அரசாணை (நிலை) எண்: 133 இல் வகுக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி தேர்வு நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.

தமிழ்நாடு அரசு இதில் உரிய கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

 கி.வீரமணி

 தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

5.12.2021            

No comments:

Post a Comment