திராவிட ஆட்சிக்கு காவல் அரணாய் திராவிடர் கழகம் என்றும் திகழும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

திராவிட ஆட்சிக்கு காவல் அரணாய் திராவிடர் கழகம் என்றும் திகழும்!

ஜாதி ஒழிப்பின் அடுத்த கட்டத்தை -  அரசமைப்புச் சட்டத்தில்  திருத்தம் செய்திடுவதே எமது அடுத்த பணி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் செய்தி

திராவிட ஆட்சிக்கு காவல் அரணாய் திராவிடர் கழகம் என்றும் திகழும்; ஜாதி ஒழிப்பின் அடுத்த கட்டத்தை - அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திடுவதே - எமது அடுத்த பணி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

நாளை (2.12.2021) எனக்கு 89 ஆம் ஆண்டு பிறக்கிறது.

இடையிலான எனது வாழ்வு பெரும்பகுதி பொது வாழ்வே!

காரணம், என்னை நான் எனது அறிவு ஆசானிடம் ஒப்படைத்துக் கொண்டதால் கிடைத்த நல்வாழ்வு.

பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்ட வீரமணியை வீண்செயல் எதுவும் வீழ்த்திடவில்லை' என்பது செம்மைப்படுத்தக் கிட்டிய நல்வாய்ப்பு.

எனது இளமைக்காலம்

நான் பிறந்த ஓராண்டுக்குள்ளே தாயை இழந்து, தந்தை, சகோதரர்கள், பின்னாளில் சிறிய தாயார் பராமரிப்பில் வளர்ந்தவன்!

எனக்குக் கிட்டிய பெரும் வாய்ப்பு எனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் .திராவிடமணி, எனக்குத் தாய்ப்பாலுக்குப் பதில் பகுத்தறிவுப் பாலூட்டி, பெரியார் என்ற பேராசானின் பள்ளியூருக்கு அனுப்பி, பெரியார் இயக்கம் என்ற கொல்லர் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி பக்குவப்படுத்திய ஒரு பயனுறு கருவியாக வடிவெடுக்கும் வாய்ப்பு கிட்டியது.

அதன் காரணமாக பெரியார் என்ற பேராசானின் வாழ்நாள் மாணவனாக என்னை நான் ஒப்படைத்துக் கொண்டு, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற சுயமரியாதை பாடத்தைக் கற்றுத் தெளிந்தேன் - பெற்று மகிழ்ந்தேன்.

அச்சமற்ற பொறுப்புள்ள சுயமரியாதை வாழ்வுக்குச் சொந்தக் காரனாகும் வாய்ப்பினைப் பெற்று மகிழ்கிறேன்.

கருப்புச் சட்டை அணியும் இராணுவ சிப்பாய்!

பதவி, பட்டங்கள், பெருமை, புகழ் வேட்டையில் சிறிதும் நாட்ட மில்லாது, சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கிய, பேதமற்ற வாழ்வே பெருவாழ்வு என்பதை இலக்காக வைத்து, அதற்கான - ஜாதி ஒழிப்புக்கான அறிவுப் போரில்- அறப்போரில் - அமைதிப் புரட்சிக்கான போரில், என்னை ஒரு இராணுவ வீரனாக்கிக் கொண்டு, கருப் புடையுடன் களத்தில் நிற்பதைக் கடமையாக்கி, குறையில்லாமனிதனாக' வாழ்கிறேன்!

எனது ஆசான் தந்தை பெரியார் எனக்கு அமைத்துத் தந்த மணவாழ்வின்மூலம் என் இணையர் எனக்கு உற்ற துணையாக களத்தில் நிற்பதற்கும், விழுப்புண்களை விடாது ஏற்பதற்கும் பெரிதும் துணை நிற்பவராக கடந்த 63 ஆண்டுகளாக இருக்கிறார்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரின் தேர்வு ஒருபோதும்சோடை'யாகாது என்பதற்கு எங்கள் வாழ்வே சுயமரியாதை சுகவாழ்வுக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு ஆகும்.

எனக்குச் சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே போதும்' என்று நான் சொல்வது அலங்காரத்துக்காக அல்ல; அனுபவ அறிவின் பயன் காரணமாகவே ஆகும்.

அதனால் அடைந்த, அடையும் எண்ணற்ற லாபங்களும், நன்மைகளும் அநேகம்!

பேராசான் பெரியார் பாடம் கற்றேன்!

வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுப் பயனடையும்  வகையில், எமது பேராசானின் பாடத்தைக் கற்றேன் - கற்றோம்.

‘‘தன்னைப் பெரிதாகவும், தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள்.''

‘‘என்னை, நான் சின்னவன் என்றும், குறைந்த செலவில் வாழ்வதற்குத் தகுதி உடையவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்ற காரணத்தால், என் யோக்கியதைக்கு மீறின பெருமை உடையவனாகவும், தாராள செலவு செய்பவனாகவும் கருதிக் கொண்டிருக்கிறேன்.''

‘‘தவிர, மூட்டைத் தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒருபோதும் கஷ்டப்பட்டதே இல்லை'' என்ற அய்யாவின் பாடம் என்னை அந்தத் தடத்திலிருந்து மாறாது பாதுகாக்கிறது!

சுயமரியாதை இயக்கம் என்னைத் தாலாட்டிய தொட்டில்

சுயமரியாதை இயக்கம் என்னைத் தாலாட்டிய இயக்கம் ஆயிற்றே! அதனைப்பற்றிய ஆசானின் விளக்கம் எத்தகைய வியத்தகு பாடம் தெரியுமா?

‘‘மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுத்துவதற்காகவே சுயமரியாதை இயக்கம்'' ஏற்பட்டதாகும்.

இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்படவேண்டியதே ஒழிய,

சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்கு அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும்.

அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர, வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாக ஞாபகத்தில் வையுங்கள்.''

இந்தப் பாடங்களைக் கற்ற காரணத்தினால்தால்தான் எமது வாழ்க்கைப் பயணத்தில் ஏழு முறை உயிர்ப்பறி முயற்சிகள் நடந்தும் களத்தில் நிற்கும் கடமை திசை திரும்பாமல் பார்த்துக் கொள்ளக் காரணமானது.

அய்யா மறைந்த நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழியை மறவோம்!

ஏறத்தாழ 54 முறை சிறை வாசங்கள். அதில் மிசாக் கொடுமையும் உள்ளடக்கம் என்றாலும், சோர்வில்லா சுறுசுறுப்புடன் கூடிய லட்சியப் பயணம் - இன்றும் தொடர்கிறது!

இந்த 89 ஆம் ஆண்டு பிறந்த நாள், முன்பு எப்போதும் கிடைத்திராத மனநிறைவையும், மகிழ்ச்சியையும் எனக்கு அளித்திருக்கிறது!

காரணம், எனது குருதி உறவுகளும் சரி, கொள்கை உறவுகளும் சரி, எனக்குப் பெரிதும்வரவுகளாக' (Assets) இருக்கிறார்கள்; மனதறிந்து ஒத்துழைப்புத் தந்து உற்சாகப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் எனக்கு, எமது இயக்கத்திற்கு நட்டங்களாக (Liabilities) ‘சுமையாக' இல்லை.

அதைவிட மகிழ்ச்சிக்கு மேலும் முக்கியமான காரணங்கள் இரண்டு.

பேராசான் பெரியார் போட்ட பாதையில் நின்று - எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமலே - விட்ட பணி முடிக்க அன்னை மணியம்மையார் தலைமையில் 1974 ஆம் ஆண்டு எடுத்த உறுதிமொழிக்கு உருவம் கிடைத்து - மகிழும் நல்வாய்ப்பு.

சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சரின் சாதனை!

கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று மானமிகு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த திராவிட ஆட்சி  - தி.மு.. ஆட்சி, அதன் முக்கிய பணியாக- கலைஞரின் ஆதங்கத்தைப் போக்கி - பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், தந்தை களத்தில் பிரகடனப்படுத்திய ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போரின் முக்கிய அம்சமான ‘‘அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி'' சரித்திர சாதனை படைத்தார்!

14.8.2021 அன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாகக் காத்திருந்து பதவியேற்றனர் - தி.மு.. ஆட்சியின் 100 நாள் சாதனையில் மகத்தானது இது!

அதன்மூலம் பெரியார் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற நிம்மதியை நாம் அனைவரும் பெற்றோம்.

அதற்கு முழுக்காரணமாகத் திகழும் சமூகநீதிக்கான சரித்திர நாயகரான மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் செயலூக்கம் தந்தை பெரியார் பிறந்த நாளை ''சமூகநீதி நாளாக்கி'', அரசு ஊழியர்களை உறுதிமொழி எடுக்க வைத்ததும், சரித்திரம் காணா சாகாப் புகழ்பெற்ற சாதனை அல்லவா?

இதனை நேரில் தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்பட்ட வாய்ப்பு எம்மை மகிழ்ச்சிக் கண்ணீர்க் கடலில் தள்ளியது!

நமது முதலமைச்சரின் திராவிடப் பாரம்பரியக் கொள்கை குன்றாத ஆட்சியாக அவர் ஆட்சி நடைபெறுவதோடு, எதிரிகளும் குறைகாண முடியாத குறையாப் புகழை நாளும் வைப்பு நிதிபோல சேர்த்து, வரலாற்றில் பொற்கால ஆட்சி, இவரது தலைமையில் அமைந்த திராவிடர் ஆட்சியன்றோ!

ஜாதி ஒழிப்பே நமது அடுத்த பணியும், கடமையும்!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்களது அடியொற்றியதிராவிட மாடல்' என்ற புகழ் பூத்த ஆட்சி என்பதைக் கண்டு மகிழ்வது நம்மைப் போன்ற பெரியார் தொண்டர்களின்  - பெரியார் போர் வீரர்களின் வாழ்வைப் பெருக்கும்; காரணம், கொள்கை வெற்றி என்ற ஊக்கச் செயலிகளை இவ்வாட்சி நாளும் தந்து நம்மை வாய்மைப் போருக்கு என்றென்றும் வாலிபராக, இளமையாக அல்லவா ஆக்குகிறது!

1. எனவே, ஜாதி ஒழிப்பின் அடுத்த கட்டத்தை - அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திடுவதே அடுத்து களம் காணும் எமது அடுத்த பணியாகும்.

8, 9.12.1973 இல் நம் ஆசான் நடத்திய மாநாட்டின் தீர்மானம்  செயலுரு பெற்றுள்ளது.

சமூகநீதி ஆட்சிக்குக் காவல் அரணாய் இருப்போம்!

2. இனி தாய்க் கழகத்தின் முக்கிய பணி தி.மு.. ஆட்சிக்கு வாளாய், கேடயமாய், படைக்கலப் பட்டறையாய், திராவிடக் கோட்டையாம் இந்த விடியல் முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆட்சிக்குக்காவல் அரணாய்' இருப்பது முக்கிய முதற்பணியாகும்!

இவ்வாட்சியை உலகம் ‘‘வியந்து பார்க்கிறது! மகிழ்ந்து பாராட்டுகிறது!! அதற்காக தன் மகனை சான்றோன்எனக் கேட்டதாய்போல'' தாய்க் கழகம் பூரித்து நிற்கிறது!

3. ஜாதி ஒழிப்பை அரசியல் சட்ட ரீதியாகவே செயல்படுத்த தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் (8, 9.12.1973) செயலுரு கொள்ள தொடர்ந்து போராடி, ஜாதி ஒழிப்புக்கு நாளும் களத்தில் நிற்கவேண்டும்.

உச்சநீதிமன்றம் (26.11.2021) ஜாதி ஒழிப்புப் பெரும்போர் நடத்திய அதே நாளின் 64 ஆம் ஆண்டு விழாவில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு - .பி. ஆணவக் கொலைபற்றிய தீர்ப்பில் ''ஜாதி ஒழிப்பு 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெறவில்லையே - ஜாதி மறுப்பு திருமணங்கள்தானே ஒரே தீர்வு'' என்பதைச் சுட்டிக்காட்டி, ''ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கென தனிச் சட்டமும், ஜாதி ஒழிப்புக்குப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்'' என்பதை கட்டளையாக அறிவித்திருப்பது தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் கொள்கைகள் காலங்கடந்த உண்மைகளாகி உயர்ந்து நிற்கின்றன என்பதற்கான அடையாளங்கள் அல்லவா?

4. நமது உடனடி வேலைத்திட்டம், 'நீட்' தேர்வு என்ற எளிய மக்களின் மருத்துவக் கனவுகளைச் சிதைத்து, அப்பாவி ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவச் செல்வங்களைத் தற்கொலைக்குத் துரத்தும் பலி பீடத்தை ஒழிப்பதை முழு முதற்பணியாகக் கொண்டு,

விழிப்புணர்வுப் பிரச்சாரம், அறவழியில் தொடர் போராட்டம், ஆளுநர்கள்மூலம் அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் நோக்கங்களுக்கு மாறாக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அரசியல் நிலைப்பாடுகள்முதல் மொழி உரிமை பறித்தல், பண்பாட்டுப் படையெடுப்புகளை எதிர்த்த தொடர் பிரச்சாரத்தைத் தொய்வின்றி செய்துகொண்டே - அடைமழைபோல - கடமையாற்றல் முக்கியமாகும்.

5. பெரியார் உலகம்‘ அமைக்கும் பணிகள் முறைப்படி அனுமதிகள் பெற்று ஆயத்தப் பணிகள் - நன்கொடை வசூலிப்பு உள்பட பலவற்றையும் இவ்வாண்டின் முக்கிய பணியாகக் கொள்ளுதல்.

6. கழகக் கொள்கை உறவுகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் - விழைவு.

நீங்கள் மட்டும் இயக்கத்தில் உழைத்தால் போதுமா?

ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தபட்சம் இரண்டு, மூன்று இளைஞர்களை அழைத்து, பக்குவப்படுத்தி, தோளில் அமர்த்தி, உற்சாகப்படுத்தி, பட்டறையில் காய்ச்சி பதப்படுத்திய எஃகுபோல ஆக்குவதே இயக்கப் பணியில் முக்கிய கட்டம்!

வயது இடைவெளி இல்லாத இயக்கம் நம் இயக்கம் என்றாலும், இளைஞர்கள், வாலிபர்களைத் தட்டிக் கொடுத்து, பணியாற்றக் கற்றுக் கொடுத்தால் - அதுவே உங்களுக்குத் தனிப்பெருமை.

இயக்க வளர்ச்சி என்றென்றும் 'தோப்பாகவே' இருக்கவேண்டும்.

தனி மரமாக நிற்பது பெருமை அல்ல - தனித்தன்மையோடு இயங்குவது முக்கியம் என்றால், தனித்து இயங்குவது என்பது அதற்குப் பொருள் அல்ல; கரங்கூப்பி வேண்டுகிறேன்.

விழுதுகளால்தான் வேர்களுக்குப் பலம் மறவாதீர்!

மகளிருக்கும் இது பொருந்தும்!

எனவே, எமது 89 ஆம் ஆண்டு எமக்குப் புத்துணர்ச்சியும், புத்தாக்கமும் தரும் புதுத் திருப்ப ஆண்டாகவே அமைந்துள்ளதால், தடைக்கற்களை தகர்த்தெறிந்து, இலட்சியப் போரில் பொற்கால ஆட்சி அது தடையற்ற சாதனைகள் புரிய முன்னே சென்று அதற்குப் பாதை அமைக்கும் ‘‘சாப்பர்ஸ் & மைனர்ஸ்'' படையாக திராவிடர் கழகம் என்றும் திகழும்.

திராவிடம் வென்றது! என்றும் வெல்லும்!!

முதுமை விலகுகிறது - முதிர்ச்சி முகிழ்கிறது!

வெற்றிடம் அல்ல தமிழ்நாடு; கற்றிடம் - மற்றவர்களுக்கு என்று பாடம் எடுக்கும் பள்ளிக் கூடம் என்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்வடையும்போது எனது முதுமை விரட்டப்படுகிறது; முதிர்ச்சி முகிழ்த்துக் கிளம்பி வெற்றிக் கனி பறிக்க விரைந்து வேக நடைபோட வைக்கிறது!

இதுவே எனது மகிழ்ச்சி செய்தி -

நன்றி! நன்றி!! நன்றி!!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

1.12.2021

No comments:

Post a Comment