தமிழ் கலாச்சாரத்திற்கு தொடர்பில்லாத தீபாவளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

தமிழ் கலாச்சாரத்திற்கு தொடர்பில்லாத தீபாவளி

தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், தீபாவளி  இந்தியாவின்தேசியத் திருவிழாபோலக் காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை.

தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப்பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல்இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா, ஹிந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது?

பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும்.இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும்.

பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ, வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா.பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்கு 16ஆம் நூற்றாண்டுவரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப + ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை.நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று.

மாறாக பார்ப்பனிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே சனாதன வழக்கத்தின் கடுமையான எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மறைந்த நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார்.ஆகவே, பார்ப்பனிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.எனவே நரகாசுரன் அழிந்ததாக பார்ப்பனிய தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்.விசயநகரப் பேரரசான ஹிந்து சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பார்ப்பனர்களை விட.. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பார்ப்பனர்களே தீபாவளியைப்பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.வடநாட்டு ஹிந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதிநாளைக் குறிக்கும் சடங்காகும்.தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போலகங்கா ஸ்நானம்செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.‘நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவாஎன்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

No comments:

Post a Comment