அவர் நினைவை என்றும் மறவோம்!
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது நினைவு நாள் இன்று (27.11.2021)! ‘‘அவர் நினைவை என்றும் மறவோம்'' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இந்திய வரலாற்றில் சமூகநீதியை ஒன்றிய ஆட்சி பீடத்தில் ஆணையாக - மண்டல் பரிந்துரையின்படி 27 சத விகித இட ஒதுக்கீட்டைப் பணி நிய மனங்களில் செயல்படுத்த முயன்று வெற்றி பெற்றவர் இந்திய வரலாற்றின் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.
அதற்காகவே 10 மாதங்களில் அவரை ஆட்சியை இழக்க வைத்தனர் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சியினர்; வெளியிலிருந்து வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவினை அவர் கள் விலக்கிக் கொண்டு, அவரது பிரதமர் பதவியைப் பறிக்க திட்டமிட்டு செயலாற்றினர்.
‘கமண்டல் vs மண்டல்' என்று பேசப்படும் வகையில், இராமன் கோவில் கட்ட இரத யாத்திரை என்ற பெயரால், திட்டமிட்ட கலவரங்களை யும் உண்டாக்கினர்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியை இழக்கத் தயார்!
பிரதமர் பவியை இழந்ததை ஒரு பொருட்டாகவே கருதாமல், ‘‘சிறந்த பொருளைப் பெற (சமூகநீதியை) நல்ல விலை கொடுக்கவேண்டும் அல்லவா; அதைத்தான் நான் கொடுத்துள்ளேன்.''
‘‘ஒருமுறை என்ன - எத்தனை முறை வேண்டுமானாலும் சமூகநீதிக் காக எனது பதவிகளை இழக்க நான் தயார்'' என்று கூறியவர் - நமது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!
முதன்முதலில் இந்த சமூகநீதி - மண்டல் பரிந்துரையை செயல்படுத்தும் ஆணைபற்றிக் குறிப்பிடுகையில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோர் பெயரை நாடாளுமன்றத்தில் பதிய வைத்தவர்.
இப்படி தமிழ்நாட்டோடு ஒன்றி ணைந்தவர் வி.பி.சிங். ‘மறுபிறவி' என்று இருந்தால், அதன்படி தமிழ்நாட் டில்தான் பிறக்கவேண்டும் என்று பிரகடனப்படுத்தியவர்.
பண்பாட்டின் பெட்டகம் - தி.க., தி.மு.க., இயக்கத்தவர்களிடையே தனி அன்பு பாராட்டிய பெருமகன்.
வரலாற்றில் தனித்த பெருமையுடன் உயர்ந்த உயர் தனிச் செம்மல் அவர்!
அவரது நினைவு நாள் இன்று (27.11.2021) -
அவர் நினைவை என்றும் மறவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2021
No comments:
Post a Comment