எல்லா மதங்களிலும் பண்டிகைகள் உண்டு; சடங்குகளும் உண்டு. ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரை - மதமே பண்டிகைகளில் மூழ்கிக் கிடப்பதும் - சடங்குகளே மதத்தின் உயிர்க் கூடாக இருப்பதும் - மக்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடை!
மாதம் தவறினாலும் பண்டிகை தவறாது என்பது மட்டுமல்ல - மாதம் பூராவுமே பண்டிகைகளுக்கான நடவடிக்கைகள், விரதங்கள் அன்றாட மூச்சாக இருந்தால், எங்கே முன்னேற்றம், எங்கே வளர்ச்சி? எங்கே போய் முட்டிக் கொள்ளுவது!
புரட்டாசி மாதத்தை எடுத்துக் கொண்டால் மாதம் பூராவும் விரதம்தான் - அசைவம் சாப்பிட மாட்டார்களாம். இதில் புத்தியும், உடலும் கெடுவது ஒருபுறம் இருக்கட்டும். பொருளாதாரம் பாழ் என்பது எவ்வளவுப் பெரிய விடயம்!
பண்டிகைகளுக்காகக் கூறப்படும் விடயங்களும், கதைகளும் காது கொடுத்துக் கேட்க முடியாதவை - படித்துப் பார்க்கவும் தகுதியற்றன. அவ்வளவு மூடத்தனம் - அவ்வளவு ஆபாசம் - அருவருப்பு!
நவராத்திரி பற்றி ஒரு நாளேடு எழுதுவது என்ன?
"நவராத்திரி நான்காம் நாளில் துவங்கி ஆறாம் நாள் வரை மகாலட்சுமியின் தோற்றம் துதிக்கப்படுகிறது. இந்த மூன்று நாள்களும் மகாலட்சுமியின் திரு அவதாரம் பற்றிய புராணக் கதைகள், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் போன்றவற்றை பாராயணம் செய்வது, மிகவும் சுபிட்சம் உண்டாக்கும்.
மகாலட்சுமியின் தோற்றம் பற்றி பாகவதத்தில் விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒருமுறை துர்வாசரின் சாபத்தால் தேவேந்திரன், தேவர்கள் தங்கள் சக்திகளை இழந்தனர்; தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக அய்ஸ்வர்யங்களுக்கு ஆதாரமான, சுவர்க்க லட்சுமியும் அங்கிருந்து வெளியேறினாள்.
இதையடுத்து, தேவர்கள் தாம் இழந்த இளமை, ஆயுள், செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தருமாறு மகாவிஷ்ணு விடம் கோரினர். அவர், 'நீங்கள் பாற்கடலைக் கடைந்தால், அதில் கிடைக்கும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையும், மரணமில்லாப் பெருவாழ்வும் அளிக்கும். மேலும் பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, உங்களுக்கு சகல செல்வங்களும் அளிப்பாள்...' என்று ஆசியளித்தார் மகாவிஷ்ணு.
அதையடுத்து, அசுரர்கள் உதவியுடன், தேவர்கள் வாசுகிப் பாம்பை மத்தாகக் கொண்டு, பாற்கடலைக் கடையத் துவங்கினர். வாசுகி வலி தாங்காமல் நஞ்சை உமிழ, கடலில் முதலில் ஆலகால விஷம் தோன்றியது.
அனைவரும் சிவனாரை வேண்ட, அவர் விஷத்தை அருந்தி, தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றினார். அந்த நஞ்சை, சிவ பெருமானின் தொண்டையிலேயே நிறுத்தி, அவரைக் காத்தாள் பார்வதி தேவி.
பின், பாற்கடலிலிருந்து கவுஸ்துபம், உச்சை சிரவஸ், அய்ராவதம், கற்பக தரு உள்ளிட்ட பல அபூர்வமான வஸ்துக்களும், ஜந்துக்களும் தோன்றின.
முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். அவள் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
தேவர்கள் மகாலட்சுமியை சரணடைய, அவளிடமிருந்து வெளிப்பட்ட சுவர்க்க லட்சுமி, மீண்டும் தேவலோகத்தை அடைந்தாள். அதனால், அங்கு மீண்டும் தெய்வீகச் செல்வங்கள் நிறைந்து ஒளி வீசியது.
அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான குபேரனுக்கு, தேவ லோகச் செல்வங்களைப் பாதுகாத்து, தகுதியானவர்களுக்கு வழங்கும் அதிகாரம் தரப்பட்டது.
அப்படி மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு, நவநிதிகள் வழங்குகிறார் குபேரன்.
மகாலட்சுமி கடாட்சம் கிடைத்தால், உலகியல் செல்வங்கள் மட்டுமன்றி, மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டு வகை செல்வங் களையும் அளிப்பவள் என்று, பிரம்மவைவர்த்த புராணத்திலும் இவை சொல்லப்பட்டிருக்கிறது.
மகிஷனை அழிக்க எடுத்த அவதாரத்தில், நான்காம் நாள் லட்சுமியாய் தோன்றுகிறாள் துர்கை."
இவைதான் அந்த ஏட்டில் வெளிவந்துள்ள விவரங்கள். இதில் கடுகு மூக்கு அளவுக்காவது அறிவுக்கு இடம் இருக்கிறதா?
பாற்கடல் என்று ஒன்று இருக்கிறதா? அந்தக் கடலை மத்துக் கொண்டு கடைய முடியுமா? அப்படிக் கடைந்தால் நவநிதிகள் கிடைக்குமா? அதில் மகாலட்சுமி என்ற கடவுளச்சி தோன்றுவாரா?
பட்டை சாராயம் குடித்த பைத்தியக்காரனை தேள் கொட்டினால் எப்படி உளறுவானோ அதைவிட மோசமான கொச்சையான உளறல் குவியல் அல்லவா இவை! மகிஷன் என்ற அசுரனை லட்சுமி அழித்தாளாம் - கடவுளின் வேலை கொலை செய்வதுதானா? அசுரன் என்று இதிகாசங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுவோர் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளார்களே - என்ன பதில்? பார்ப்பனர்கள் சிந்திக்க மாட்டார்கள் - திராவிடர்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
No comments:
Post a Comment