புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் அல்ல - ஒரு படைக் கருவியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் அல்ல - ஒரு படைக் கருவியே!

கவிஞர் கலி. பூங்குன்றன்

"வெல்லும் தூய தமிழ்" (மாத இதழ்) ஆசிரியரும் 43 நூல்களை யாத்தவரும், புதுச்சேரி மாநில அரசால் 'தமிழ் மாமணி' விருது பெற்றவரும், தனித் தமிழ் ஆர்வலரும் பகுத்தறிவாளருமான முனைவர் மானமிகு . தமிழமல்லன் அவர்களின் "இராவண காவிய ஆய்வுரை" நூல் வெளியீட்டு விழா சென்னைப் பெரியார் திடலில் நேற்று (11.10.2021) மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் - "புதுமை இலக்கியத் தென்றல்" சார்பில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த புதுவை மு.. நடராசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் மாமணி முனைவர் . தமிழ்மல்லன் அவர்களால் - புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்ட "இராவண காவியம்" பற்றி நிகழ்த்தப்பட்ட

18 ஆய்வுச் சொற்பொழிவுகளின் விளைச்சலே இந்நூல்.

புதுவைத் தோழர் மு.. நடராசன் அவர்கள் எப்பொழுதும், தந்தை பெரியாரின் கருத்துகளை, பகுத்தறிவுச் சிந்தனைகளை வெளியீடுகளை வெளியிட்ட வண்ணமே இருப்பார் - பொது மக்களிடம் அளித்துக் கொண்டே இருக்கும் பகுத்தறிவுத் தேனீ. - அதற்காகப் பெரும் செலவும் செய்தவர்.

அவரின் தொடர் வேண்டுகோளால் தோழர் தமிழமல்லன் அவர்களின் தொடர் சொற்பொழிவுகள் நடந்த காரணத்தால், நன்றி உணர்ச்சியின் காரணமாக இந்நூலை தோழர் நடராசனுக்கு அர்ப்பணித்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.

நிகழ்ச்சிக்குப் புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் வழக்குரைஞர் . வீரமர்த்தினி தலைமை வகித்தார்.

திராவிட இயக்கத்தில் தந்தை வழி தொடர் பயணம் செய்யக் கூடியவரும் தொழிலதிபருமான முனைவர் .கு. திவாகரன் வரவேற்புரை ஆற்றினார்.

சிறுவனாக இருந்த போது என் தந்தை யாரோடு வந்த போது நான் பார்த்த பெரியார் திடலுக்கும், இப்பொழுது ஒளிரும் பெரியார் திடலுக்கும் உள்ள வேறுபாட்டை, தோற்றத்தைப் பார்த்து வியந்து போகிறேன். இந்த வியப்புக்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அய்யா அவர்களின் உழைப்பும், ஆற்றலும், மதி நுட்பமும், திட்டமிடலும் ஓங்கி நிற்கிறது என்று தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

நூல் வெளியீட்டு விழா

 தமிழ் மாமணி தமிழமல்லன் அவர்களின் "இராவண காவியம்" ஆய்வுரை நூலை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட, தோழர்கள் பொறியாளர் மு.. பாஸ்கரன் (மு. .நடராசன் அவர்களின் மகன்), புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ. நடராசன், பொறியாளர் . வளனரசு அயன்புரம் சு. துரைராசு, கவிஞர் . முருகையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலின் விலை ரூ.275 ஆகும். வெளியீட்டு விழாவை முன்னிட்டு ரூ.250க்கு அளிக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் வரிசையாக வந்து நூலினைக் கழகத் தலைவரிடம் வாங்கிக் கொண்டனர்.

ஆய்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், சொற்பொழிவுக் கூட்டங்கள் 18க்கும் தொடர்ந்து தலைமை வகித்தவரும் புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவருமான சிவ. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலினை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

எடுத்த எடுப்பிலேயே புலவர் குழந்தையின் இராவண காவியம் என்பது ஒரு நூல் அல்ல - படைக் கருவி என்றார்.

வரவேற்புரை ஆற்றிய தொழிலதிபர் திவாகரன் பேச்சாற்றலும் மிக்கவர் என்பதை இன்று உணர முடிகிறது என்று பாராட்டிய ஆசிரியர், இந்நூல் உருவாவதற்குக் காரணமாகவிருந்த புதுவைத் தோழர் நடராசன் அவர்களின் அயராக் கொள்கைப் பரப்புப் பணியை நினைவு கூர்ந்தார். அவர் இழப்பு இயக்கத்துக்கு மாபெரும் இழப்பு என்று தனது துயரத்தைப் பதிவு செய்தார்.

சிறப்பாக நூலினை வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளரையும்  பதிப்பகத்தினரையும் பாராட்டினார். இந்நிகழ்வில் பதிப்பகத்தின் சார்பாக மேலாளர் இராம. குருமூர்த்தி கலந்து கொண்டார். 

புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களால் இரண்டு முறை தொடர் சொற்பொழிவு நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்துள்ள புலவர் வெற்றியழகன் அவர்களும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் இராவண காவியம் பற்றிய சொற்பொழிவு நடத்தியதையும் அதேபோல நமது தோழர் பேராசிரியர் புள்ளம்பாடி . வெற்றியழகன் அவர்கள் திருவரங்கத்தில் தொடர் சொற்பொழிவு ஆற்றியதையும் எடுத்துக் கூறினார் ஆசிரியர்.

1971இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கருஞ்சட்டை அணிந்து புலவர் குழந்தை வீறு நடைபோட்டு வந்த காட்சிகளையும் பசுமையாக நினைவூட்டினார்.

கம்பனைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிர்மா ஆகி யோர்களுக்கு மேலாகவே சித் தரித்துள்ளார் (பெட்டிச் செய்தி காண்க).

இராமனை உயர்த்தி, இராவணனைக் கீழிறக்கி கம்பன் பாடினாலும் ஒரு குற்ற உணர்வோடுதான் இரா மாயணத்தைக் கம்பன் எழுதினான் என்பதற்கு அவனது பாடலே எடுத்துக்காட்டு.

பாடல் 6: பாயிரம்: அவைஅடக்கம்

பாடல்:

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

என்றல்லவா பாடியிருக்கிறான் கம்பன்.

கம்பனுக்கே தெரிகிறது. ஒரு தவறான காரியத்தைச் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு - அவனை உள்ளுக்குள் குடைகிறது என்பது விளங்கவில்லையா!

எப்படியாக இருந்தாலும் கம்பன் ஆரியக் கைக்கூலி என்பதில் அய்யமில்லை. வால்மிகிகூட இராமனைக் கடவுளாக்கவில்லை; இதை ராஜாஜியே கூறுகிறார். கம்பனே கடவுளாக்கியவன்.

இராமாயணத்தை ஏன் எதிர்த்தார் - எரித்தார் தந்தை பெரியார்? நூல் வெளியீட்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் கூற்றாலேயே அதனை வெளிப்படுத்தினார் ஆசிரியர்.

"திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர்களைத் தன்மானமும் பகுத்தறிவும், அற்றவர்களாக ஆக்கி, மனிதத் தன்மையை இழக்கச் செய்த ஆரியப் பிரச்சாரக் கதைகளில் முதன்மையானவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும்.

இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துவது தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும் தமிழ்நாடு சுயமரியாதைக்கு இழிவும் ஆனதாகும்" (இராமாயணப் பாத்திரங்கள்) என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தினை தொடக்கமாக தன் உரைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர்.

இராமன், இராவணன் என்று வரும்போது இரு கதாபாத்திரங்கள்பற்றி பேராசிரியர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட (1936) கருத்தினை எடுத்துக் காட்டினார்.

1) இராமனின் குணநலன்

1. ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக் கொடுத்தான்.

2. சூர்ப்பனகையின் மூக்கையும், முலையையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.

3. வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டினான்,

4. 5-மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபச்சாரப் பட்டம் கட்டித் தனியே காட்டில் கொண்டு போய் விட்டு வந்தான்.

இந்த அரும்பெரும் காரியங்களைச் செய்திருக்கிறான் இராமன்.

இந்தக் காரியங்களிலிருந்து இராமனிடத்தில் தெய்வத் தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ,  உண்மைத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?

2) இராவணன் செய்த குற்றங்கள்

1. தேவர்களைக் கொடுமைப்படுத்தியது.

2. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அவரவர்கள்  காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துத் தொல்லைக் கொடுத்தது.

3. சீதையை சிறை பிடித்தது.

இராவணன் எப்படிப்பட்டவனென்பதை அறிந்தால் இக்குற்றங்களை அவன் செய்திருப்பானா என்பது யாவருக்கும் விளங்கும்.

1. இராவணன் மகா கல்விமான். 2. வேத சாஸ்திரங்களில் விற்பனன். 3. குடிகளையும், சுற்றத்தார்களையும், இரக்கமுடன் ஆதரித்தவன். 4. புத்திசாலி. 5. வீரன். 6. ஆச்சரியப்படத்தக்க அதிபலசாலி. 7. மிகவும் பக்திமான். 8. தவசிரேஷ்டன். 9. கடவுளுடைய ப்ரீத்திக்குப் பாத்திரமானவன்.  10. பல வரங்களைப் பெற்ற வரப்பிரசாதி.

இராவணனுக்கு இந்தப் பத்துக் குணங்களையும் வால்மீகியே கற்பித்திருக்கிறார்.

இப்படிப்பட்டவன் தேவர்களைக் கொடுமைப்படுத் தினானென்றால் நம்ப முடியுமா?

அப்படிப்பட்ட தேவர்களை இப்படிப்பட்ட 10 குணங்களுள்ள இராவணன் கொடுமைப்படுத்துவான் என்று அறிவுரை சொன்னால் ஏற்க முடியுமா? என்று கேட்கிறார் பூர்ண லிங்கனார் பதில் உண்டா?

இன்றைய தினம் இங்குப் பூ தேவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு சுதந்தரத்துக்கும் சுயமரியாதைக்கும் முட்டுக்கட்டையுமாயிருந்து வாழ்ந்து வருகிறார்களே! அது போலவேதான் அப்போதும் இந்தக் கூட்டம். தங்களை தேவர் என்று சொல்லிக் கொண்டு மக்களுக்குத் தொல்லை செய்து கொண்டு வந்திருப்பார்கள்.

அத்தொல்லையை ஒழிப்பதற்கு இன்று பலர் முயற்சிப்பதுபோல், அப்பொழுது இராவணன் முயற்சித்திருக்கலாம்.

மற்றொரு முக்கிய எடுத்துக்காட்டு: பரதன் இராமனிடம் நடந்து கொண்டதுபோல விபீஷணன் இராவணனிடம் நடந்துகொண்டால் விபீஷணனை ஆழ்வாராக்கி இருப்பார்களா என்பதுதான் அந்த முக்கிய கேள்வியாகும்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் என்பது அண்ணாவால் கூறப்பட்ட .ரா. அவர்கள் கோதைத் தீவு என்னும் நாவலில் குறிப்பிட்டதை 'விடுதலை' ஆசிரியர் எடுத்துக்காட்டினார்.

"அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனைக் கொண்டாடும் நாட்டில் தங்களை அறியாமலேயே ஆயிரக்கணக்கானோர் தேசத்துரோகி ஆகி விட்டார்கள்" - என்று .ரா. (ராமசாமி அய்யங்கார்) குறிப்பிட்டதையும் தன் உரையில் குறிப்பிட்டார் ஆசிரியர்.

இராமாயணத்தில் இராமன் தன் மனைவி சீதையை நடத்தியதுபோல கேடு கெட்டது ஒன்றும் இல்லை.

சீதைமீது சந்தேகப்பட்டு தீ குளிக்கச் சொன்னதும், நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் கொண்டு விட்டதும் எந்த வகையில் நியாயம் மனிதாபிமானம்? (சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜாஜியே கூட இராமனின் செய்கையை நியாயப்படுத்த முடியாமல் திணறுகிறார்).

. சந்தானம் அய்யங்கார் 'உத்தரராம சரிதம்' என்ற வடமொழி நூலை எழுதினார். அந்நூலுக்கு ராஜாஜி எழுதிய முன்னுரையில் என்ன குறிப்பிட்டுள்ளார்.

"நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகத்திற்கு வழிகாட்ட அவதரித்த கடவுள்! சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து கொண்டு வந்தபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டார் என்ற கொடுஞ் செயலை என் மனதிற்குள் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று - தன் வாழ்நாளிலேயே 'சக்ரவர்த்தி திருமகன்' நூலை எழுதியதன் காரணமாகப் பெருமிதம் கொண்ட ராஜாஜியேகூட தன் மனைவி சீதையிடத்தில் ராமன் நடத்திய அநீதியைப் பொறுக்க முடியவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்)

இராமாயணம் என்பது ஆரிய, திராவிடர் போராட்டம் என்றும், திராவிடர்கள்மீது தொடுக்கப்பட பண்பாட்டுப் படையெடுப்பு ஆயுதம் என்றும் முத்தாய்ப்பு வைத்தார் கழகத் தலைவர்.

இராவண காவிய ஆய்வுரை நூலைக் கொண்டு வந்த தமிழ் மாமணி முனைவர் தமிழமல்லன் அவர்களைப் பல  படப்பாராட்டினார். அறிஞர் தமிழமல்லன் அவர்களைப் பாராட்ட வார்த்தை இல்லை என்று கூறிய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்நூலின் வெளியீட்டு விழாவை புதுவையிலும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏற்புரை : முனைவர் தமிழமல்லன்

1971ஆம் ஆண்டு புதுவையில் தமிழர் தலைவர் பேச்சைக் கேட்டபோது தான் இது போன்ற ஒரு நூலை எழுத வேண்டும் என்ற ஈர்ப்புத் தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

எளியவனான என்னைப் பெருமைப்படுத்தியமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார். இரவு 9 மணிக்கு வெளியீட்டு விழா வெகு நேர்த்தியாக நடைபெற்று முடிவுற்றது.

பங்கேற்றோர்

நூல் வெளியீட்டு விழாவில் பல்துறைப் பெரு மக்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். முனைவர் தமிழமல்லன் அவர்களின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வியை கழகத் தலைவர் வெகுவாகப் பாராட்டினார். இணையரின் இணையிலா ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தோழர் தமிழமல்லன் வெற்றிகளைக் குவித்திருக்க முடியுமா என்று வினவினார்.   மகள்கள் தமிழ்க் கொடி, தமிழ்த் தென்றல், தமிழ் இசைவாணி ஆகியோரும் தந்தையின் பாராட்டு விழாவில் தங்களின் இணையரோடு பங்கு கொண்டது பாராட்டத்தக்கது.

முனைவர் தமிழமல்லன் சார்பில் கழகத் தலைவர் உட்பட அனைவருக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பதிப்பக மேலாளர் இராம. குருமூர்த்தி அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பதிப்பகத்தின் சார்பில் அவரும் கழகத் தலைவர் உட்பட அனைவருக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

 

 

 

No comments:

Post a Comment