தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம்

தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனை யுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர், மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு.

முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்கு வதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனந்திக்கும் எருமை போலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள் கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர் விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை.

புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம் பித்து, விண்கருக்கும்வரை உழுதாலும் பயனில்லை. புத்தி யின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழி களும், புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம் போக்குகளும், வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேகம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே, ஆரியத்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும் இப்பண்டிகையை பகிஷ்கரிக்க வேண்டும்.

ஆரியர், திராவிடரை வீழ்த்திய வெற்றிவெறி, அப்பண் டிகை அதை ஆரியர் கொண்டாடினாலாவது பொருள் உண்டு. தோற்கடிக்கப் பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்டத் திராவிடர் அதனைக் கொண்டாடுவது, இனஇழிவுக்கு அடையாளமென்போம். கள்ளனிடம் சிக்கிக் கற்பழிக்கப் பட்ட கன்னி, கண்ணீருடன் இருக்கும் போதுகள்ளீ! உன் பொருட்டு நான் எடுத்துக்கொண்ட பிரயாசை எவ்வளவு? அலுப்பு எவ்வளவு? இந்தச் சந்தோஷத்தை உனக்கு அளித் ததற்காக ஓர் அருமையான, பாட்டு பாடிக்கொண்டே, என் கால்களைச்சற்று வருடிக் கொண்டிரு, நான் தூங்குகிறேன்என்று கள்ளன் கட்டளை யிட, கன்னி, அவன் காலைப் பிடித்துக்கொண்டு, கானம் செய்வது போன்றது, தீபாவளி யைத் தமிழன் கொண் டாடு வது! ஓநாய்க்கு உபசாரம் செய்ய ஆடு அமர்த்தப்படுவது போல, பக்காத் திருடனின் பாதக்குறடுகளை, சொத்தைப் பறிகொடுத்தோன் சுமப்பது போல, உதைக்கும் கழுதையின் காலுக்கு உதைபட்டவன், தங்கத்தால் இலாடம் கட்டுவது போல, கொட்டும் தேளை எடுத்து முத்தமிடுவது போல, தோளிலே பாய்ந்த வாளினை எடுத்துக்கண்களிலே செரு கிக்கொள்வதுபோல, மனைவி யைக் கற்பழித்தவனுக்கு மலரபிஷேகம் செய்வதுபோல, எந்த ஆரியம் மூடத் தனத்தை மூட்டித் தமிழகத்தைத் தீய்த் ததோ, மடைத் தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ, சனாதனத்தைப் புகுத்தித் தமிழரின் செல் வத்தைச் சுரண்டிற்றோ, அந்த ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்ய மிடுவது, அவர்களின் ஆணவத்துக்கு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத் தனம் என்போம்.

தீயும் வாளியும், தமிழரைக் கெடுத்ததுபோதும், இனி யேனும் தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடாது, திருந்துவரா, வைதீகர்கள் என்று கேட்கி றோம். எத்தனை தமிழர்கள் தீபாவளியை நாங்கள் கொண் டாடவில்லை என்று கூறுகின்றனரோ, என்பதைப் பொறுத் துத்தான், தமிழரின் மறுமலர்ச்சி இருக்கிறது. இந்த நமது உணர்ச்சி, இன்று, சில ஆயிரவருக்கு மட்டுமே உண்டு என்ற போதிலும், அந்தத் தொகை பெருகிவருவது நமக்குப் பெருமகிழ்வூட்டுகிறது. இன்று நாம், தமிழரை நோக்கி, புதுவைத் தோழர் சிவப்பிரகாசம் அவர்கள் கேட்பதுபோல,

தீந்தமிழான செந் தேன் மொழிநாடே

தீமை வைதீகம் ஏனோ நீ ஏற்றாய்?”

என்று கேட்கும் நிலையில் மட்டுமே இருக்கிறோம். என் செய்வது!

- 24.10.1943

No comments:

Post a Comment