திருச்சி, அக்.2 திருச்சியிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (சங்கமம்) அய்ம்பெரும் விழாவாக கல்லூரி வளாகத்தில் செப்.17 அன்று நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலருமான திருச்சி சிவா தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்,திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானமாக கல்லூரியின் பெயர் மாற்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்த தீர்மானத்தை திருச்சி சிவா முன்மொழிந்தார்.
அதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறும் வகையில் கல்லூரிக்காக 20 ஏக்கர் நிலமும்,
5 லட்சம் ரூபாய் பணமும் தந்தை பெரியாரால் வழங்கப்பட்டது.அதன் காரணமாக பல லட்சம் மாணவர்கள் இன்று வரை பயன்பெற்று வருகிறார்கள். கல்லூரிக்காக நிலமும் பணமும் வழங்கிய பெரியார் பெயர் கல்லூரிக்கு பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி என வைக்கப்பட்டது.ஆனால் அந்த பெயரை முழுமையாக அழைக்காமல் பலர் ஈ.வெ.ரா கல்லூரி என மட்டுமே அழைத்து வருகின்றனர்.இது பெரியார் பெயரை மறைக்கும் வகையில் உள்ளதாக கல்லூரி முன்னாள் மாணவர்களும் பேராசிரியர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இந்த கல்லூரியை "தந்தை பெரியார் கல்லூரி" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து திருச்சி சிவா தீர்மானத்தை முன் மொழிந்தார் அத்தீர்மானம் அங்கிருந்தவர்களால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், முன்னாள் இன்னாள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment