கழகத் தலைவர் இரங்கல் வீரவணக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும் சிறந்த (நகைச்சுவை மிக்க) பேச்சாள ரும், எளிமையும் - இனிமையும் கலந்த பொதுநலத் தொண்டறப் போராளியுமான மதுரைத் தோழர் என்.நன்மாறன் (வயது 72) அவர்கள் மதுரையில் 28.10.2021 மாலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தோம்.
எவரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகும் கொள்கை வீரர். பலமுறை நமது நூல்களை வெளியிட்டு சிறப்புடன் பேசி கருத்து விளக்கம் அளித்துள்ளார். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சிக்கும் மட்டும் இழப்பு அல்ல; பொது வாழ்வில் தூய்மை - எளிமை - இனிமையை விரும்பும் அனைவருக்குமே பெரும் இழப்பாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரையில் ஒரு கிளையை அமைக்க, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் தொடர் முயற்சிகளை எடுத்து வென்றவர் ஆவார்.
இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்த சரித்திரம் அவருடையது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கொள்கை உறவுகளான மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் தோழர்களுக்கு நமது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கலும் உரித்தாகுக.
அவருக்கு நமது வீரவணக்கம்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28-10-2021
No comments:
Post a Comment