பிராமணர்கள் அதாவது பார்ப்பனர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் என்று கூறும் ஆதாரங்களை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
(ரிக் வேதம் 62ஆம் பிரிவு - 10ஆம் சுலோகம்)
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந் திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை; பிராமணர்களே நமக்கு மேலான கடவுள் என்று கூறுவதுதான். இந்த சுலோகம்.
புத்தம் வளர்ந்த காலத்தில் பார்ப்பன ஆரியம் வீழ்ந்து போனது. அப்போது பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்துவதற்காக பார்ப்பனர்களால் முன்னிறுத்தப்பட்டவன் ராமன்.
பிராமணர்களுக்குத் தொண்டு செய் வதுதான் இராமராஜ்யம்.
‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.
(கம்பராமாயணம்)
‘கரிய நிறம் கொண்ட திருமாலை விடவும், நெற்றிக்கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும், பஞ்சபூதங்களை விட வும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான். இதையே வடக் கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.
துளசிதாசர் இராமாயணம் என்ன கூறுகிறது? பிராமணர்களின் பாதங்களில் குறையாத பக்தியை வைப்பதுதான் மோட்சம் அடைய வழி! பிராமணர்களைப் பழித்துப் பேசினால் அடுத்த ஜென்மத்தில் காக்கையாகப் பிறப்பார்கள் என்கிறது துளசிதாசர் இராமாயணம்.
***
ஸ்ரீவைகுந்தவாசனாகிய நீலமேக சாமள வர்ணனாகிய ஸ்ரீசாட்சாத் கிருஷ்ண பரமாத்துமாவை, பிரம புத்திரனாகிய நாரதர் தரிசிக்க வந்தபோது, அச்சமயம் பரமாத்துமா பூசையறையில் இருந்து வெளியே வந்தார். வெகு நேரம் வரையில் பரமாத்துமாவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நாரத பகவான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்துமாவைப் பார்த்து "இவ்வுலகத்தின் கண்ணுள்ள அனந்தகோடி மக்களும் தங்களைப் பூசித்துவரும் போது, தாங்கள் இவ்வளவு நேரமாய் யாரைப் பூசை செய்து கொண்டிருந்தீர்" கள் என்று கேட்ட உடனே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்துமா, பூசையறையில் முன்னால் விடப்பட்ட திரைச் சீலையை நீக்கிவிட்டு, அங்கு அவரால் பூஜிக்கப்பட்ட விக்கிரகத்தைத் திறந்து காட்டினார். அதைப் பார்த்தவுடன், நாரதபகவான் அப்படியே ஆச்சரியப்பட்டுப் பிரம்மித்துப் போனார். ஏனென்றால் அஃது ஒரு பிரமஸ்வரூபமாகிய பிராமணனுடைய விக்கிரகமே அன்றி வேறல்ல. ஆதலால் அப்படிப்பட்ட கண்ணனாலேயே பூசிக்கப்பட்டு வரும் பிராமணாளுடைய மகத்துவத்தை வேதங்கள் கூட வரை யறுத்துக் கூறமுடியாது என்றால், மற்றவர் களால் அவர்களுக்குக் குணதோஷம் கூறமுடியுமா?
இதுகிடக்க, இன்னொரு சம்பவத் தையும் சொல்லுகிறேன் கேளும். ஒரு சமயம், வாயுபுத்திரனாகிய ஹனுமான், ஒரு பிராமணச் சிறுவனாக உருவந்தாங்கி, ஸ்ரீராமபிரான் முன் தோன்றிய போது, ஸ்ரீராமர் அவரைக் கண்ட மாத்திரத்தில், அவர் காலில் நெடுஞ்சாரியாய் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டுள்ளார். இதைக் கண்ட இராம தூதனாகிய ஹனுமான், இராமமூர்த்தியைப் பார்த்துச் சொல்லுகின்றார்; நான் உண்மையான பிராமணன் அல்ல; நாட்டினில் வாழும் குரங்கு வம்சத்தைச் சார்ந்தவன். ஆகையால் என் காலில் விழுவது முறையல்ல என்று சொல்லவும், அதற்கு இராமர் பதிலுத்தரமாக என்ன சொன்னார் என்றால், நான் பிராமணாளைக் கண்ட மாத்திரத்தில் உடனே அவர்களைக் கை கூப்பி வணங்குவது என் கடமையாகும். ஆகையால் உண்மையான பிராமணனாய் இருந்தாலென்ன, அல்லது போலிப் பிராமணனாய் இருந்தாலென்ன? அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
"அருந்தொண்டாற்றிய அந்தணர்" என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்...? அரசர்களுக்குக் குருவாகப் பார்ப்பனர்களே இருந்து வந்தனர். இன்னும் சொல்லப் போனால் கடவுளுக்கும் மேலே பிராமணர்கள் என்று கூறியதுண்டே! திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ தங்கத்திலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கு ரூபாய் 15 லட்சத்திலும் பூணூல் போட்டாரே ஜெயேந்திரர். அதுபோல சிறீரங்கம் ரெங்கநாதனுக்கு ஜீயர் தங்கத்தினாலான பூணூலை அணிவித்ததுண்டு, இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? கடவுளும் - பார்ப்பானும் ஒரே ஜாதி என்பதைத்தானே!
புரிந்து கொள்வீர் - பார்ப்பன ஆதிக்க அடங்கலை.
- - நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர்
No comments:
Post a Comment