‘‘ஊசிமிளகாய்'' - பலமுறை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்ட ‘வீர்' சவர்க்காரைக் காப்பாற்ற புதிய புளுகா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

‘‘ஊசிமிளகாய்'' - பலமுறை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்ட ‘வீர்' சவர்க்காரைக் காப்பாற்ற புதிய புளுகா?

பிரிட்டிஷ் அரசில் ஆயுள் தண்டனை பெற்று அந்தமானுக்கு அனுப்பப்பட்ட (அக்காலத்தில்  ‘தீவாந்தர தண்டனை' என்று பெயர்) ‘இந்துத்துவா' பெயர் கண்டுபிடிப்பாளரான வி.டி.சவர்க்கார் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 2, 3 தடவைக்குமேல் மன்னிப்புக் கடிதம் எழுதியதுபற்றி பல விமர்சனங்கள் வந்துள்ளன.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் சவர்க்காரைப் பாதுகாக்க வேடிக்கையான ஒரு புதிய காரணத்தைக் கூறியுள்ளதுதான் நாட்டின் இன்றைய  நம்பர் ஒன் நகைச்சுவை!

காந்தியின் யோசனையைக் கேட்டுத்தான் இந்த மன்னிப்புக் கடிதத்தை எழுதியதாக ஒருபுதுக்கதை'  எழுதி வினோத விளக்கம் தந்துள்ளார்!

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்தான்; ஆனால், இந்த சங் பரிவாரங்களின் புதிய கோயபெல்ஸ் ஆயுதம் 8 மணிநேரத்திற்குக்கூட நிற்கவில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்!

எதிர்க்கட்சியினர் பலரும் இந்த பொய்மையின் தோலை உரித்துத் தொங்கவிட்டுள்ளனர்!

சவர்க்காரின் மன்னிப்புக் கோரிக்கை கடிதங்கள்:

1911 இல் - சிறை வாசத்தில் 6 மாதம் ஆனவுடனேயே மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார்; அப்போது காந்தி அவர்கள் இந்தியாவிலேயே இல்லை; தென்னாப்பிரிக்காவில்தான் இருந்துள்ளார்!

1920 இல் கூட காந்தி, ‘‘உங்களுக்கு நான் எப்படி அறிவுரை கூற முடியும்'' என்றுதான் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்!

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சி எம்.பி., ஜெயராம் ரமேஷ், அசுதீன் ஓவைசி எம்.பி., இப்படிப் பலரும் - ‘‘ஆர்.எஸ்.எஸ்.சினர்  புளுகு பேக்டரியையே நடத்துகிறார்கள்'' என்று கூறி, பொய்த் திரையை, ஆதாரப்பூர்வ முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி கிழிகிழி என்று கிழித்துவிட்டனர்.

வாதத்திற்காக அப்படியே காந்தியார் மன்னிப்புக் கேட்கக் கூறியதாகவே இருக்கட்டும்; ‘வீர', ‘தீர' சவர்க்கார் என்ற ‘‘லட்சிய மாவீரர்'' அதனை ஏற்றிருக்கலாமா?

என்னவானாலும்முடியாது' என்றல்லவா காந்திக்கே பதில் எழுதியிருக்கவேண்டும்?

எத்தனை முறை பலர் வேண்டினாலும், தனது உறுதியில் இறுதிவரை நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட 23 வயது இளைஞன் மாவீரன் பகத்சிங் வரலாறு இடம்பெற்றுள்ள பாடப் புத்தகங்களில், ‘‘மன்னிப்புத் திலகம்'' சவர்க்கார் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

என்றாலும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்காமல் - இப்படி  ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டி வரலாற்றைக் கொச்சைப்படுத்துவது  நியாயமா?

‘‘வாய்மையே வெல்லும் -

சத்தியமேவ ஜெயதே''

என்பது இதுதானோ

No comments:

Post a Comment