“சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்” என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, செப்.30 - ‘சமூகநீதிதான் ஆட்சியை ஆதரிப்ப தற்கான அளவுகோல் தந்தை பெரியாருக்கு' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்''
கடந்த 21.8.2021 அன்று மாலை சென்னை பச்சையப் பன் கல்லூரியில் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற் றாண்டு விழா (1920-2021) - சிறப்பு நிகழ்ச்சியில் (1.8.2021 முதல் 21.8.2021 வரை) ‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்'' (17.12.1920 முதல் இன்றுவரை தமிழ்நாடு முதலமைச்சர்களின் வாழ்வும் - பணியும்) என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார்
இன்றைக்கு சென்னையில் சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்டு, பிறகு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்றப்பட்டு இருக்கிறதே - அந்த இடம்தான் ஓமந்தூரார் வளாகம் - அந்த ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தார். அவர் இரண்டாண்டுகளுக்கு மேல் முதல மைச்சராக இருக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் ஓமந்தூரார் அவர்கள் ‘ஒழுக்கச் சீலர்’ என்று பெயர் பெற்றவர்.
அவர் எந்த அளவிற்குச் சாதனை செய்தார் என்றால், இந்த சமூகநீதிக் கொடியைப் பரப்புவதில் அவர்கள் மிகக் குறியாக இருந்தார். 20 சதவிகிதம் பொறியாளர் களுக்கு - மிக முக்கியமாக பொறியியல் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் என்று - அதற்கு முன்பு இருந்த பிரகாசம் அவர்களுடைய அமைச்சரவையில் போட்டதை - சமூகநீதிக்கு எதிராக இருந்ததை - ஓமந் தூரார் முதலமைச்சராக வந்தவுடன், உத்தரவுப் போட்டு மாற்றி, அதனை நீக்கினார்.
காரணம், பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதி, போராட்டங்களை நடத்திக் கொண் டிருக்கிறார். தகுதி என்ற பெயராலே மற்றவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள் மூடப்படுகின்றன. வாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுங்கள்.
தோல்வியுற்றவர்களை எல்லாம் எடுத்துக்கொள்ளுங் கள் என்று சொல்லவில்லை. இவர்கள் வேண்டுமென்றே வைத்திருக்கின்ற பன்னாடை முறை - வடிக்கட்டல் முறை இருக்கக்கூடாது. எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுங்கள். வகுப்புவாரி உரிமை அப்பொழுது ரத்து செய்யப்படுவதற்கு முன்பு - 1946-1947 - ஆகஸ்ட் 15 இல் சுதந்திரம் - அதற்கு முன்னால் இருக்கக்கூடிய ஆட்சி - அந்தக் காலகட்டத்தில் 20 சதவிகிதம் என்ற அந்த வாய்ப்புகளை மாற்றினார்.
இன்னுங்கேட்டால், மிகப்பெரிய அளவிற்கு, நீதித் துறையில், மற்ற இடங்களில் யார் யார் இருக்கவேண்டும் என்று சொன்னவுடன், உடனடியாக அவர்மீது ஆத்திரப் பட்டார்கள். ஓமந்தூரார் காங்கிரஸ்காரர் - திருவண்ணா மலைக்கு மாதந்தவறாமல் ரமண ரிஷி ஆசிரமத்திற்குச் சென்றுவரக்கூடிய பக்தர். வெள்ளிக்கிழமை தவறாமல் விரதம் இருக்கக்கூடியவர். அதேநேரத்தில், ரொம்ப நேர்மையாளர்.
“கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை”
அப்படிப்பட்ட ஓமந்தூராரைப் பத்திரிகைகளில், ‘‘ஓமந்தூர் இராமசாமியல்ல - இவர் தாடியில்லாத ராம சாமி - கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை இருக்கிறது'' என்று அவரை வருணித்தார்கள்.
காரணம் என்ன?
சமூகநீதியை கொஞ்சம் தொட்டுக்காட்டினார். முழுமையாக அவரைச் செய்ய விடவில்லை. அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தெளி வாக செய்தார்.
இந்த நேரத்தில் இன்னொன்றை உங்களுக்குச் சொல்லவேண்டும். ஒரு பிரபலமான ஆங்கில நாளேடு - இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆங்கில நாளேடு -
பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆங்கில பத்திரிகை ஆசிரியர்
அந்த நாளேடு (இந்து), ஓமந்தூராரைப் பார்த்து, நீங்கள் ஒரு வகுப்புவாதி என்று எழுதினார்கள்.
உடனே ஓமந்தூரார் அவர்கள், பெரிய பட்டதாரி அல்ல; ஒழுக்கச் சீலர் - நேர்மையானவர் - திறமையான வர்.
உடனே அவர் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்தார் -
என்னை வகுப்புவாதி என்று சொல்கிறீர்களே, நான் வகுப்புரிமைக்காகத்தானே போராடுகிறேன். சட்டப்படி உள்ளதாயிற்றே!
சரி, உங்கள் அலுவலகத்தில் எவ்வளவு பேர் பணி யாற்றுகிறார்கள்? எல்லா ஜாதியினருக்கும் கொடுத் திருக்கிறீர்களா? என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வில்லை.
காரணம் என்ன?
அந்த அலுவலகத்தில் அவர் என்ன ஜாதியோ, உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் பெரும்பாலும் இருந்தார்கள். இன்றைக்கு வேண்டுமானாலும் கொஞ்சம் மாறியிருக்கலாம்.
அந்த பத்திரிகை ஆசிரியர் வாயடைத்துப் போனார்.
எனவே, என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று ஓமந்தூரார் சொன்னார். இந்தத் துணிச்சலுள்ள ஒரு முதலமைச்சராக இருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, காலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமை வாய்ந்த, மூத்த வழக்குரைஞருக்குப் பரிந்துரை செய் கிறார்.
பிரதமர் நேரு அவர்கள் ஓமந்தூரார் கொடுத்த பரிந்துரையில் கைவைக்கவில்லை!
அப்பொழுதெல்லாம் முதலமைச்சர் இங்கே பரிந்துரை செய்து, டில்லியினுடைய உள்துறை ஏற்று, பிரதமருக்கு அப்பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்.
அப்படி அவர்கள் பரிந்துரை செய்த நேரத்தில், பிரதமர் நேரு அவர்கள் அழைத்து, கவர்னர் ஜெனரலாக இருக்கக்கூடிய இராஜாஜி அவர்கள் வேறொருவரைப் பரிந்துரைத்திருக்கிறார். (அவர் அய்யங்கார் ஜாதி) ஆகவே, அதற்காக உங்கள் பரிந்துரையை மாற்றிக் கொடுங்கள் என்று சொன்னார்.
ஓமந்தூரார் அவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். “நான் நியாயத்தின் அடிப்படையில் அவரைப் பரிந்துரைத்திருக்கிறேன். அப்பரிந் துரையை மாற்ற வேண்டுமென்றால், மாற்றிக் கொள்ளுங்கள். நான் என்னுடைய ராஜினாமாவைக் கொடுக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் தெரி வித்திருந்தார்! பிறகு பிரதமர் நேரு அவர்கள் அப்பரிந்துரையில் கை வைக்க விரும்பவில்லை. ஏற்றுக் கொண்டார்.
அப்படி வந்தவர்தான் தலைசிறந்த தீர்ப்புகளைக் கொடுத்த ஒரு நீதிபதி (ஜஸ்டிஸ் திரு என்.சோமசுந்தரம்).
எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், சமூகநீதி.
காந்தியாரிடம் பிராமண சங்கத்தினர் கொடுத்த புகார் மனு!
ஏன்?
பிராமண சங்கம் சார்பாக, காந்தியாரிடம் ஒரு மனு கொடுத்தார்கள்; ஓமந்தூரார் ஒரு வகுப்புவாதி - எல்லா வற்றையும் இவர் இப்படித்தான் செய்கிறார் என்று.
உடனடியாக காந்தியார் அவர்கள் ஓமந்தூராரைப் பார்த்து, இப்படி செய்யலாமா? ஒரு ஜாதியினரை நீங்கள் பழிவாங்குகிறீர்கள் என்று உங்கள்மீது குற்றம் சொல் கிறார்களே, உங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்துகிறீர்கள் என்று சொல்கிறார்களே என்று கேட்டார்.
உடனே புள்ளி விவரத்தோடு சொன்னார், அவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்; ஏற்கெனவே எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எப்படி அவர் களுக்குக் குறைவில்லாமல் இருக்கிறது என்பதையெல் லாம் புள்ளி விவரங்களோடு ஆதாரத்தோடு காந்தியா ருடைய செயலாளருக்கு நீண்ட கடிதம் எழுதினார்.
அடுத்தமுறை காந்தியார் வரும்பொழுது, பிராமண சங்கத்தினர் அவரைப் பார்த்தபொழுது,
‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு’’
காந்தியார் சொன்னார், ‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு'' உங்களுக்கென்ன அந்த இடத்தில் வேலை'' என்று கேட்டார்.
காரணம் என்ன?
புள்ளிவிவரத்தோடு ஆதாரங்களை அவருக்கு அனுப்பிய காரணத்தினால்தான்
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், முதலமைச்சராக மட்டும் இல்லை. அதிகாரம் அதிகமாக இல்லாத கால கட்டத்தில்கூட சாதனைகளை செய்தவர்களாக இருந் தார்கள். அந்த அதிகாரம் போய்விடுமோ என்று அவர் கள் பயந்துகொண்டு ஒரு காலத்திலும் அவர்கள் செயல்படவில்லை. முதுகெலும்பு உள்ளவர்களாக - தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சமூகநீதிக்கு ஆபத்து என்றால், அந்த சமூகநீதியை நாங்கள் செயல்படுத்திக் காட்டுவோம் என்று சொல்லக் கூடிய அந்த வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது.
அடுத்து காமராஜருடைய ஆட்சி - குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து மிகப்பெரிய அளவிற்கு வந்தார்.
150 இடங்கள் இன்டர்வியூ என்று சொல்லக்கூடிய நேரிடையான இடங்கள் இருந்த நேரத்தில், அப்பொழுது தான் அவர் பதவிக்கு வந்திருக்கிறார். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து உத்தரவு போடுகிறார்.
அந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு - இப்பொழுது நீட் தேர்வு மிரட்டிக் கொண்டிருக்கிறதே - மாணவர் களையெல்லாம் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே - அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அன்றைக்கு இருந்த அடிப்படையில் எதைச் செய்தார் என்றால், ஏற்கெனவே 150 மதிப்பெண்கள் இருந்தது ஓமந்தூரார் காலத்திலிருந்து வரிசையாக.
150 மதிப்பெண்களை 50 மதிப்பெண்களாகக் குறைத்தார் இராஜாஜி
அப்படி வருகிறபொழுது அந்த 150 மதிப்பெண்களை இராஜாஜி அவர்கள் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் அதை 50 ஆகக் குறைத்தார். இண்டர்வியூ மதிப்பெண் அது. தேர்வில் வாங்குகின்ற மதிப்பெண் ணையும், நேரிடையான இண்டர்வியூவில் பெறுகின்ற மதிப்பெண்ணையும் சேர்த்துதான் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கின்ற முறை. தேர்வுக் குழு அதைத்தான் கடைப்பிடிக்கும்.
காமராஜர் பதவிக்கு வந்து அப்பொழுதுதான் ஒரு சில நாள்கள் ஆகின்றன. முதல் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார். இவர் படிக்காத காமராஜர், இவரை கேள்வி கேட்டு மடக்கிவிடலாம்; இவருக்கு என்ன ஆளுமை தெரியும் என்று நினைத்த செய்தியாளர்களில் சிலர் மேல்மட்டத்தனம் என்று நினைத்துக்கொண்டு காம ராஜரிடம் கேள்வி கேட்டார்கள்.
முந்தைய முதலமைச்சர் 150 மதிப்பெண்களாக இருந் ததை 50 மதிப்பெண்களாகக் குறைத்தாரே - நீங்கள் ஏன் மீண்டும் 150 மதிப்பெண்களாக மாற்றியிருக்கிறீர்கள்?
சமூகநீதி என்பது ஒவ்வொரு முதலமைச்சர்களாலும் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ப தற்கு அடையாளம் அதுதான்.
50 மதிப்பெண்களை 150 மதிப்பெண்களாக உயர்த்தினார் காமராஜர்!
காமராஜர் அவர்கள் யாரையும் சங்கடப்படுத்தாமல், அப்படியா? அவர் எதற்காக 150 மதிப்பெண்களிலிருந்து 50 மதிப்பெண்களாகக் குறைத்தாரோ, அதே காரணத் திற்காகத்தான் 50 மதிப்பெண்களை 150 மதிப்பெண்களாக உயர்த்தியிருக்கிறேன் என்று சொன்னார்.
இதற்கு மேலே நான் சொல்லவேண்டிய அவசிய மில்லை என்றார்.
இந்தப் பதிலால் அவர்கள் வாயடைத்துப் போய் விட்டார்கள்.
அப்படி வருகிறபொழுது நண்பர்களே, இந்த சமூகநீதியினுடைய தத்துவத்திலே, முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்ததே, காமராஜருடைய காலம்தான்.
தனித்தனியாக இருந்தது வகுப்புரிமை ஆணையில். அந்த வகுப்புரிமை ஆணைக்காக தந்தை பெரியார் அவர்கள் போராடி, 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்பட்டது. சென்னை ராஜ்ஜியம் - ஆந்திரா பிரியவில்லை - மொழிவழி மாநிலங்கள் வரவில்லை. அப்பொழுது வழக்கு நடந்த பொழுது, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள் என்று பெரியார் போராடியபொழுது, மிகப்பெரிய அள விற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை பிரதமர் நேரு, ஒரு ஜனநாயகவாதி என்கிற முறையில் அதனை ஏற்றுக்கொண்டு, அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச் சர், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1951 இல் வருகிறது. அந்த சட்டத் திருத்தத்தில்தான் 15(4) என்கிற பிரிவில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு வருகிறது.
மாணவர்கள் படித்து வந்தால்தானே, வேலை வாய்ப்புக்கு வர முடியும்
சோசியலி அண்ட் எஜூகேஷனலி ஃபேக்வர்ட் கிளாசஸ் (Socially and educationally backward classes) என்கிற வார்த்தையைப் போட்டு, அந்த இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு வருகிறது.
ஏனென்றால், அதற்குமுன் வேலை வாய்ப்பில் மட்டும் இருந்தது. மாணவர்களுக்குக் கிடையாது. மாண வர்கள் படித்து வந்தால்தானே, வேலை வாய்ப்புக்கு வர முடியும். ஆகவே, இங்கேயே தடுத்துவிட்டால், அங்கே வர முடியாது.
பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்காகப் போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது.
எனவே, சென்னை ராஜ்ஜியத்தில் இருந்த வகுப் புரிமை ஆணையின் பலன், இந்தியா முழுக்க இன் றைக்கும் அது தொடர்கிறது.
மண்டல் கமிசனைப்பற்றியெல்லாம் இங்கே அறி முகப்படுத்திய அம்மையார் அவர்கள் சொன்னார்கள்.
அதனுடைய விளைவுகள் என்ன இன்றைக்கு?
மிகப்பெரிய அளவிற்கு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.
அதனுடைய விளைவாகத்தான், இன்றைக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று இத்தனை சதவிகிதம் என்று வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகின.
எனவே, இந்தியா முழுக்க அது பயன்பட்டது.
முதலமைச்சராக அவர்கள் இருந்த நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பு என்ன வென்று சொன்னால், எந்த முதலமைச்சரும், தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மாறுகின்றன; அரசியல் களங்கள், உருவங்கள் மாறுகின்றன. ஒரு தேர்தலில் ஒரு அமைச்சரவை போகிறது; இன்னொரு அமைச்சரவை வரக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது.
ஒரு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது சமூகநீதி!
அப்படி பெறக்கூடிய சூழ்நிலையில், மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக வரக்கூடிய இந்த எண்ணங்கள் இருக் கிறது அல்லவா இந்த எண்ணங்களின் அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற நேரத்தில், வருகின்ற சிறப்பு என்ன வென்று சொன்னால் நண்பர்களே, பெரிய மாறுதல் ஏற்படுகிறது.
என்ன அந்த மாறுதல்?
மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் - சமூகநீதியில் வளர்ச்சி ஏற்படுகிறது.
இவர் போய்விட்டாரே - அந்த ஆட்சிப் போய் விட்டதே - இந்த ஆட்சி வந்ததும் அதை மாற்றவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது ஒரு தொடர்ச் சியாக வந்து கொண்டிருக்கிறது.
மக்கள் தொகை எண்ணிக்கையின்படிதான்!
அந்த அடிப்படையில் வருகிறபொழுது, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் என்று ஓமந்தூரார் சொன்னார். காமராஜர் காலத்தில், பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 25 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய ஆதிதிராவிடர் சமுதாய சகோதரர் களுக்கு 16 சதவிகிதம்; காரணம், மக்கள் தொகை எண் ணிக்கை என்னவோ அதன்படி.
பழங்குடியினர் என்று தனியாகப் பிரியவில்லை, அவர்களையும் சேர்த்துத்தான்.
25 - 16 என்று இருந்தது.
காமராஜர் ஆட்சி முடிந்து, அண்ணா ஆட்சி வருகிறது.
பெரியார் சொல்கிறார், இவ்வளவு அதிகமான மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களுக்குப் போதிய வகுப்புரி மையை சமூகநீதி வழங்கவில்லையே - நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன பயன்? என்றார்.
சமூகநீதிதான் ஆட்சியை ஆதரிப்பதற்கான அளவுகோல் தந்தை பெரியாருக்கு!
பெரியாரைப் பொறுத்தவரையில், எந்த ஒரு ஆட்சியை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்ப தாக இருந்தாலும் சமூகநீதிதான் அவருக்கு ஒரே அளவுகோல்!
அந்த சமூகநீதிதான், அவருடைய பொது வாழ்க்கை ஆரம்பித்ததும் - காங்கிரசில் சேர்ந்ததும் அதற்காகத்தான், வெளியேறியதும் அதற்காகத் தான் - எந்த ஆட்சிகளையும் ஆதரிப்பதும் அதற் காகத்தான். எதிர்ப்பதும் அதற்குத்தான்.
செதுக்கியவர்கள் - சிற்பிகள் - செயல்பாட்டாளர் கள்.
பெரியார் அப்படி சொன்னவுடன், அண்ணா அவர்கள் முயற்சி எடுத்தார். முப்பெரும் சாத னையை செய்தவர் அண்ணா.
ஒன்று, தாய்த்திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தது
இரண்டு, சுயமரியாதைத் திருமணச் சட்டம்
மூன்று, இருமொழிக் கொள்கை - தமிழும், ஆங்கிலமும் போதும். கட்டாய ஹிந்திக்கு இட மில்லை என்றார்.
தந்தை பெரியார் சொன்னார், ஏன், 50 சதவிகி தத்திற்குமேல் போகக்கூடாது என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறது, சமூகநீதியில்.
சட்டநாதன் ஆணையம்!
அதற்காகப் போடப்பட்டதுதான் சட்டநாதன் ஆணையம். அந்த ஆணையத்தினர் பெரியாரை சந்திக்கிறார்கள்.
இப்பொழுது 25 +16 = 41 சதவிகிதம்தானே இருக்கிறது. அதை 49 சதவிகிதமாக ஆக்கலாமே என்று அந்தக் கமிஷனிடம் பெரியார் சொன்னார்.
அப்படி செய்தால் என்னாகும்? என்று அந்த ஆணையத்தினர் யோசித்தார்கள். தயங்கினார்கள். டில்லி ஒப்புக்கொள்ளுமா? உச்சநீதிமன்றம் 50 சதவிகி தத்திற்கு மேல் போகக்கூடாது தமிழ்நாட்டில் என்றார்கள்.
பெரியார்தான் பதில் சொன்னார், 49 என்பது 50-க்கும் கீழேதான் என்று சொல்லுங்கள் அது போதும் விடையாக என்றார்!
உடனே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அதனை செயல்படுத்தினார்கள்.
அந்த சூழ்நிலையில், நண்பர்களே நன்றாக நீங்கள் இதைக் கவனிக்கவேண்டும் சமூகநீதிக்கு மிக முக்கிய மான கட்டத்திற்கு வருகிறோம்.
முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் 25 என்பதை 31 ஆக ஆக்கினார்; அதேநேரத்தில் எஸ்.சி., கோட்டா 16 என்பதை 18 ஆக ஆக்கி, எஸ்.டி. அதில் சேர்ந்ததுதான். ஓ.பி.சி. என்று சொல்லக்கூடிய பிற்படுத்தப்பட்டவர் களையும் சேர்த்து 49 என்று ஆக்கினார்.
அது தொடர்ந்து வந்தது; பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சி (அதிமுக) வருகிறது. அவர் பெரியார் நூற்றாண்டை கொண்டாடுகிறார்.
இங்கே அறிமுகப்படுத்திய பேராசிரியர் அவர்கள் சொன்னதைப்போல, எம்.ஜி.ஆர். அவர்கள் ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை கொண்டு வரும் பொழுது, பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து சமூகநீதியிலே சேர்க்கக் கூடாது. குழப்பம்தான் மிஞ்சும் என நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினோம்,
Justice - Social Justice
Economic justice
Political Justice
தனித்தனி மூன்றும்.
Social Justice என்பதை Economic justice என்று நாம் எடுக்கக்கூடாது.
தொடர்ந்து போராடியதின் விளைவால் ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு திரும்பப் பெறப்பட்டது!
அந்த வகையில், ரூ.9 ஆயிரம் வருமான வரம்பைக் கொண்டு வந்தது தவறு என்று நாங்கள் சுட்டிக் காட்டினோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், எங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஓராண்டு போராடியதின் விளைவால், எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் வந்தது.
அதற்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள், போராட்டங்களின் காரணமாக ஏற்றுக் கொண்டார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார், அதில், கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் நான் விளக்கிச் சொன்னவுடன், அதனை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
உடனே அதற்குப் பரிகாரமாக, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 சதவிகிதம் என்று உயர்த்தினார். பிறகு 1989 - 1990இல் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 50-அய் 30+20 என்று பிரித்ததார். இன்றைக்கு அந்த 30 இல், அந்த 20 இல் உள்ஒதுக்கீடுகள் வந்து கொண்டிருக் கின்றன.
எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
முதலில் 1946 இல் ‘பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று வருகிறது - அதற்கடுத்து விரிவாகிறது - அதற்கு ஆபத்து ஏற்படுகிறது - அது பாதுகாக்கப்படுகிறது - அப்படி பாது காக்கப்பட்டவுடன், இந்தக் கட்டம் வந்து மிகப்பெரிய அளவிற்கு 50+18 = 68 சதவிகிதம் என்று ஆகிவிட்டது.
உயர்நீதிமன்றம் சொல்லுகிறது, ‘எஸ்.டி.’ என்ற பிரிவினருக்குத் தனியே கொடுங்கள் என்று.
தி.மு.க. ஆட்சி கலைஞர் தலைமையில் மீண்டும் வந்தவுடன், அவர்களுக்கு ஒரு சதவிகிதம் கொடுத்தார்.
ஆகவே, அந்த சூழ்நிலையில், மிக முக்கியமான அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.
50 சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கில் ஒரு தீர்ப்பு சொன் னார்கள்.
69 சதவிகிதம் என்பது அநீதியல்ல என்று சொன்னோம்!
பிறகு 1991 வாக்கில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வருகிறார். நாங்கள் அவரைப் பயன்படுத்தினோம். சமூகநீதிக்கு ஆபத்து - 69 சதவிகி தத்தைப் போராடிப் பெற்றிருக்கிறோம். 85 விழுக்காடு இருக்கின்ற மக்களுக்கு 69 சதவிகிதம் என்பது அநீதியல்ல என்று விளக்கிச் சொன்னோம்.
சில கருத்து மாறுபாடுகள் அவருக்கு இருந்தாலும், திராவிட இயக்கத்தினுடைய தொடர்ச்சி என்று, தன்னை பரிணாம வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டவர் அவர்.
சமூகநீதிதான், வகுப்புரிமைதான் என்பதைப் புரிந்துகொண்டு, திராவிடர் கழகம் என்ன சொன்னதோ, அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
31-சி என்று ஒரு சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எழுதிக் கொடுத்து, அரசமைப்புச் சட்ட ரீதியாகவே அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கலாம். இன்னுங்கேட்டால், வகுப்புவாரி உரிமை அரசாணையாக (G.O.) இருக்கிறது. ஆணைகளுக்கு பின்னோக்கி செயல்படுத்த முடியாது - மாறாக, ஒரு சட்டத்தை (ACT) சட்டமன்றத்தில் நிறைவேற்றினால், அதைப் பின்னோக்கி, அதிலிருந்து செயலாகும் என்று செய்யலாம். எனவே, அதனை சட்டமாக்குங்கள் என்று சொன்னவுடன், அதை ஏற்றுக் கொண்டார்.
இன்னுங்கேட்டால், தன்னுடைய ஜாதிப் பெருமையை சொன்ன ஒருவர் ஆரம்ப காலகட்டத்தில். ஆனால், அவரையே மிகப்பெரிய அளவிற்கு சிந்திக்க வைத்தது - இந்த இயக்கம் - இந்தத் தத்துவங்கள் மாற்றியது, வேலை வாங்கியது!
69 சதவிகித இட ஒதுக்கீடு
9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பு
உடனே அதனை ஏற்றுக்கொண்டு, தனிச் சட் டத்தை இயற்றினார்கள். 31-சி என்ற பிரிவின்கீழே 31-பியைப் பயன்படுத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் IX (9)th Schedule இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தவுடன், மிகப் பெரிய வாய்ப்பு.
ஆகவே, 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.- 25 ஆண்டுகளுக்கு மேலாக!
இது ஒன்றும் அக்கிரமம் அல்ல. மக்கள் தொகை கணக்கில், வகுப்புவாரி உரிமை அடிப் படையில் இது குறைவுதான். இதை எதிர்த்து போராடினார்கள்; வழக்குத் தொடுத்தார்கள். ஆனால், அது இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.
ஆகவே, இது சாதாரணமானதல்ல. இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பு.
69 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறதே என்று மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் கேட்டார்கள்.
9 ஆவது அட்டவணை பாதுகாப்பிற்காக எவ்வளவு போராடி இருக்கிறோம். தொடர்ச்சியாக அதனுடைய விளைவுகள் இன்றைக்கு வரை வந்திருக்கிறது.
ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொன்னவர்கள், இன்றைக்கு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்
இப்பொழுது மருத்துவ மத்திய தொகுப்புகள், மத்திய கல்வி இவற்றில் எல்லாம் 27 சதவிகிதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு நாங்கள் கொடுப்போம் - நாங்கள் 50-க்குக் கீழே இருப்பதில் 27 சதவிகிதம் கொடுப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருகிறபொழுது, அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொன்ன வர்கள், இன்றைக்கு (ஒன்றிய அரசு) அதை ஏற்றுக்கொள் கிறார்கள்!
மாநிலங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததை மாற்றி, இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள், மற்ற அமைப்பாளர்கள், தமிழ்நாட்டு மண் சமூகநீதி மண் என்று போராடியதின் காரணத்தினாலே, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பு ஏற்பட்டு, இன்றைக்கு முழுமையாக நடந்து - இன்றைக்கு 127 ஆவது அரசமைப்புச் சட்டம் - நேற்று முன்தினம்தான் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் வந்திருக்கிறது
அதன்மூலம், மாநிலங்களுக்கு உரிமை உண்டு. யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற உரிமையும், பட்டியல் தயாரிக்கக் கூடிய உரிமையையும் - 102 இல் பறிக்கப்பட்ட உரிமை - 127 இல் அவசரமாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றி, மிக வேகமாக நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால் 105ஆவது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மாநில உரிமைகள் மீண்டும் நிலை நாட்டப்பட் டுள்ளது என்பது - வீதிமன்றப் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் செய்த இந்த மண்ணிலே, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் வந்திருக்கிறது.
பெண்களுக்கு வாக்குரிமை
எனவேதான் நண்பர்களே, பொருளாதார ஆபத்து வந்த நேரத்தில் அதனை எதிர்த்துப் போராடிய முதலமைச்சர்கள்,
ஆபத்து வருகிறபொழுது 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - அதன் காரணமாக எவ்வளவுதான் எங்களிடம் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதைச் செய்தவர்களைப் பாராட்டவேண்டும்.
அதேபோல, பெண்களுக்குச் சொத்துரிமை என்று வருகின்ற நேரத்தில், செங்கற்பட்டில் 1929 இல் நடை பெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் போட்டார்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்து சாதனை படைத் ததும் நீதிக்கட்சியின் ஆட்சியே என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம்
1929இல் அப்பொழுது 5 வயது சிறுவனாக கலைஞர் அவர்கள் இருந்தார். அவர் 1969 இல் ஆட்சிக்கு வரு கிறார். 40 ஆண்டுகள் கழித்து - பெண்களுக்குச் சொத் துரிமை சட்டம் கொண்டு வருகிறார் - இந்தியாவிலேயே முதன்முறையாகக் கொண்டு வருகிறார்.
சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களே நாடாளுமன்றத்தில் அப்போதுசெய்ய முடியாத ஒன்று - செய்ய முடியாத அளவிற்குத் திணற வைத்து, சங்கடப்படுத்தியதால், அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போனார்.
அதேநேரத்தில், 2006 ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை (U.P.A.) அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நிறைவேற்ற வைத்தது ஒன்றிய ஆட்சியில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகம்.
அதற்கு முன்பு 1969 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், தன்னுடைய ஆட்சிக் காலத்தில், அதனை மிகத் தெளிவாக பெண்களுக்குச் சொத்துரிமை என்று செய்தார்.
எனவேதான், சமூகநீதி என்பது இருக்கிறதே, சமூகநீதி, பாலியல் நீதியை உள்ளடக்கிய திராவிடர் இயக்கமாக, தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, வருகிறது! தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களானாலும், சமூகநீதி மண் இது - பெரியார் மண் - சமூகநீதி அடித்தளம் என்று காட்டியிருக்கிறார்கள்.
வரலாற்று சமூகநீதிக் கொடி இன்றைக்குத் தலைதாழாமல் பறந்து கொண்டிருக்கிறது
எனவேதான், வரலாறு என்று சொல்லுகின்ற நேரத்தில், வரலாற்றில் சமூகநீதிக் கொடி இன்றைக்குத் தலைதாழாமல் பறந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, இதைப் பார்த்து மற்றவர்கள் பாடம் கற்கிறார்கள். எங் களுக்கும் அந்த உணர்வு தேவை - நாங்களும் அதனைப் பின்பற்றவேண்டும். இதை எப்படி செய்தீர்கள்? என்று.
“தமிழ்நாட்டைப் பாருங்கள், தமிழ்நாட்டைப் பாருங் கள் - தமிழ்நாட்டு ‘திரவிடியன் மாடல்’ என்று சொல்லக் கூடிய இந்த எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம்“ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்று பல மாநிலத்தவரும் வந்திருக்கிறார்கள்.
இதுதான் அன்று முதல் இன்றுவரையில் - அவசர அவசரமாக சொல்லியிருக்கிறேன். பல விஷயங்களை விளக்க முடியவில்லை. சாதனைகளை மேலும் விரிவாக விளக்கி நீதி வழங்க முடியிவல்லை என்னால் - அந்த அளவிற்கு வாய்ப்புகள் குறைவு. குறிப்பிட்ட நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். உரையை நிறைவு செய்கிறேன். எனவேதான், நீங்கள் இந்த அளவிற்குப் பொறு மையாக இருந்து கேட்டதற்கு நன்றி.
வேறு வேறு வாய்ப்புகள் கிடைக்குமேயானால், விரிவாக மற்றொரு வாய்ப்பிலும் பேசுவோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இந்த வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு.
வெறும் படமாக இல்லை - பாடமாகக் காட்டக் கூடியது
இந்த வரலாறு - யாரும், எப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களும் ஏற்படலாம் - அந்த ஆட்சி மாற்றங் கள் காட்சி மாற்றங்களாக இருக்கலாம். ஆனால், சமூகநீதி என்பது இருக்கிறதே, அது என்றைக்கும் அந்தக் கொடி இறக்கப்பட முடியாத கொடி - தலைதாழாமல் பறந்துகொண்டிருக்கின்ற கொடி - இன்னுங்கேட்டால், மற்றவர்களுக்கு இது வெறும் படமாக இல்லை - பாடமாகக் காட்டக் கூடியது என்ற அளவில், மிகப்பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சர்கள் தத்துவ ரீதியாக இங்கே பயன்பட்டு இருக்கிறார்கள்.
எனவே, ஆட்சி என்பது அவர்களுக்காக அல்ல -
ஆட்சி என்பது வெறும் காட்சிக்காக அல்ல -
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினுடைய மீட்சிக்காக - என்பதை இந்தச் சமூகநீதிக் கொடி ஏற்றப்படுவதன்மூலமாகக் காட்டியிருக்கிறார்கள் - திராவிடர் இயக்கத்தினரான தி,க,, திமுகவினர் மற்றும் ஆட்சி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால்.
அதைத்தான் இந்த நேரத்தில் சொல்லியிருக்கிறோம். அதனை நினைவூட்டுவது - அந்த வரலாற்றுச் சுவடுகளை ஓரளவிற்கு உங்களுக்குக் காட்டுவதற்கு இந்தக் குறுகிய நேரத்தில் வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!
வாழ்க பெரியார்!
வளர்க சமூகநீதி!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment