போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்த உத்தரப்பிரதேச இளைஞர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 15, 2021

போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்த உத்தரப்பிரதேச இளைஞர் கைது

 லக்னோ,ஆக.15- உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர், நாகுத் பகுதியை சேர்ந்தவர் விபுல் சைனி (24). இவர் உள்ளூரில் -சேவை மய்யம் நடத்தி வருகிறார். இந்த மய்யத்தின் மூலம் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து கொடுத்ததை உளவுத் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து விபுல் சைனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள், நிபுணர்கள்  விபுல் சைனியின் வீடு, அலுவலகத்துக்கு சென்று அவர் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘கடந்த 3 மாதங்களாக விபுல் சைனி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை ஹேக்கிங் செய்து 10,000-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து கொடுத்துள்ளார். ஒரு வாக்காளர் அட்டைக்கு பொதுமக்களிடம் ரூ.200 வரை பணம் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்பவரின் தூண்டுதலின்பேரில் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்ததாக விபுல் சைனி வாக்குமூலம் அளித்துள்ளார். அர்மான் மாலிக்கை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றனர்.

ஹெலிகாப்டர் தயாரித்து இயக்கிய இளைஞர் உயிரிழப்பு

மும்பை,ஆக.15- மராட்டிய மாநிலம், யவத்மால் மாவட்டம் புல்சவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் ஷேக் இப்ராஹிம் (வயது 24). 8ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர். தனது மூத்த சகோதரரின் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளைக் கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார்.

இதுகுறித்து அவரது நண்பர் சச்சின் உபாலே கூறும்போது, “3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட இப்ராஹிம், ஹெலிகாப்டர் தயாரிக்கும் முறையை யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார். பின்னர் மாருதி 800 கார் இன்ஜின் உள்ளிட்ட ஹெலிகாப்டர் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை திரட்டினார். 2 ஆண்டு முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டரை தயாரித்தார். வரும் சுதந்திர தினத்தன்று இதைக் காட்சிப்படுத்த விரும்பினார். இதற்காக தனது கடைக்கு அருகே கடந்த 10ஆம் தேதி தான் தயாரித்த ஹெலிகாப்டரில் பைலட் இருக்கையில் அமர்ந்து பறக்கத் தொடங்கினார்.  அப்போது ஒரு இறக்கை மற்றொரு இறக்கையின் மீது இடித்து உடைந்தது. அதில் உடைந்த ஒரு பாகம் இப்ராஹிமின் தொண்டையில் வெட்டியதில் அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்என்றார்.

No comments:

Post a Comment