பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கைப்பேசிகள் வழங்க தெலங்கானா அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கைப்பேசிகள் வழங்க தெலங்கானா அரசு முடிவு

 அய்தராபாத், ஜூன் 12 தெலுங்கானாவில் கரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் கைப்பேசிகள் வழங்கப்பட உள்ளன.

நாட்டின் கரோனா 2ஆவது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  இதில், வயது வித்தியாசமின்றி பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் தொற்றுக்கு ஆளாகினர்.

இதில், கணவன், மனைவி என இருவருமே உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.  இதனால், அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.  அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன.

இந்நிலையில், தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல துறை முடிவு செய்துள்ளது.

இந்த எண்களை கொண்டு, அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும்.  யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.  தொடர்புடைய அதிகாரிகளுடன் எப்பொழுது பேச வேண்டும் என்பது பற்றி குழந்தைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட நல துறை அதிகாரி அக்கேஷ்வர் ராவ் தெரிவித்து உள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறை 

 புதுடில்லி, ஜூன் 12 ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறை வருகிற 1ஆம்  தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

திறன் வாய்ந்த ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை மற்றும் சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் அதிகரிக்கும் விபத்துகள் போன்றவை இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே திறமையான ஓட்டுநர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மய்யங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெறும் டிரைவர்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக ஆர்.டி.. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க வேண்டியது இல்லை. இந்த பயிற்சி மய்யங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த விதிமுறைகள் வருகிற 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி இந்த பயிற்சி மய்யங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக மாதிரிகள் (சிமுலேட்டர்கள்), பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி மாற்று மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மய்யங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.

இந்த பயிற்சி மய்யங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், ஓட்டுநர் உரிமத்துக்காக ஆர்.டி.. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க தேவையில்லை. இதன் மூலம் உரிமம் வழிமுறைகள் எளிதாகும். இந்த மய்யங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட  மாவட்ட ஆட்சியர்களுக்கு

தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை, ஜூன் 12 தமிழக அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபற்றி விசாரித்தால், அவை அங்கு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி யாராலும் கூற முடியவில்லை. எனவே இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்தவும், அதற்கான வழிகாணவும் நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும்.

அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும்.

அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வரமாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங் களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment