பதக்கங்கள் பல பெற்ற வாள் வீராங்கனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

பதக்கங்கள் பல பெற்ற வாள் வீராங்கனை

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு என்பது இந்தியர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் அந்நியமான விளையாட்டு. ஒலிம்பிக்கில் அந்த விளையாட்டைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், பல வீடுகளிலும் அலைவரிசையை மாற்றிவிடுவார்கள். ஆனால், டோக்கியோ ஒலிம் பிக் வாள்வீச்சுக்கு அதுபோல் பாராமுகம் இருக்காது என்று நம்பலாம். ஏனெனில், முதன்முறையாக ஒலிம்பிக்கில் இந்தியர் ஒருவர் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொள்வதை உலகமே காணப்போகிறது. அந்தப் பெருமைமிகு தருணத்தை நமக்குத் தரவிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி. விளையாட்டுக்கெனப் புகழ்பெற்ற ஊர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. தலைநகரில் விளையாட்டுக்குப் பெயர் போன பகுதி வட சென்னை. அந்தப் பகுதியில் பழைய வண்ணையைச் சேர்ந் தவர் பவானி தேவி

தொடக்கக் காலத்தில் மூங்கில் கழியைக் கொண்டே வாள்வீச்சுப் பயிற்சியை மேற் கொண்டார். வாள்வீச்சை முறையாகக் கற்றுக்கொள்ள சென்னை நேரு ஸ்டேடியத் தில் உள்ள வாள்வீச்சு மய்யம் அவருக்கு உதவியது. 

2004ஆம் ஆண்டில் முதன் முதலாகத் தேசிய சப்ஜூனியர் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கத்தை வென்று தன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கிய பவானி, தொடர்ந்து தேசிய அளவிலான போட்டி களில் பங்கேற்று வந்தார்.

வாள்வீச்சில் ஒன்பது முறை இந்தி யாவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற பவானி, 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் முதல் முறையாக வெண்கலம் வென்று சர்வதேச அரங்கில் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 2010இல் பிலிப் பைன்ஸில் ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம், 2012இல் ஜெர்ஸி காமன் வெல்த்தில் வெள்ளி- தங்கம், 2014இல் பிலிப்பைன்ஸில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2015இல் மங்கோலியாவில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் எனத் தொடர்ச்சியாகப் பல சர்வதேசத் தொடர் களில் பதக்கம் வென்று வாள்வீச்சில் இந்தி யாவின் முதல் வீராங்கனையாக உரு வெடுத்தார்.

உலகத் தரவரிசையின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசியா-ஓசியானா பிரிவில் இரு இடங்கள் இருந்தன. தற்போது வாள்வீச்சு உலகத் தரவரிசையில் 45ஆவது இடத்தில் இருக்கும் பவானி தேவி அவற்றில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, ஒலிம்பிக்கில் பங்கேற்ப தற்கான இடத்தைப் பிடித்துவிட்டார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 

No comments:

Post a Comment