கரூரில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மய்யம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

கரூரில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மய்யம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 1 கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தினை நேற்று (21.5.2021) முதல்வர் மு..ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மய்யத்தை அமைத்துள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை ஆகும்.

இந்த சிகிச்சை மய்யத்திற்குத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி இம்மருத்துவமனைக்குக் கிடைத்திட, சுமார் 1 கோடி ரூபாய் செலவில், தேவையான உபகரணங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், அருகிலுள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது தகுதியுடையோர்

விண்ணப்பிக்க அரசு அழைப்பு


சென்னை, ஜூன் 1 ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் கையால் வழங்கப்படும் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கானகல்பனா சாவ்லா விருதுக்கு இந்த ஆண்டுக்கு விருது பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பிக்க அரசு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு:

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கானகல்பனா சாவ்லா விருதுஒவ்வோர் ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2021ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி/ 2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment