மதத்தால் மரணங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

மதத்தால் மரணங்கள்!

பண்டிகைகளும், மதவிழாக்களும் மக்களைப் பீடித்த பெரு நோய் என்பதற்கு அண்மைக் கால நிகழ்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் முதல் தேதி 142 ஆக இருந்த கோவிட் தொற்று ஏப்ரல் முதல் வாரத்தில் 1,400 ஆக மாறியது, ஏப்ரல் 14 ஆம் தேதி இதுவே ஒரு நாள் தொற்று 5842 என மாறியது.

இந்த நிலையில் கும்பமேளா உத்தராகண்ட் மாநிலம் அரித்துவாரில் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கியது, கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்த நிலையிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் மேற்குவங்க தேர்தல் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது.

கும்பமேளாவிற்காக உத்தரகாண்டில் நாடு முழுவதிலு மிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடத் தொடங்கினர். இதன் விளைவாக ஏப்ரல் முதல் வாரம் 194 ஆக இருந்த கோவிட் தொற்று இரண்டே வாரத்தில் 2167 என்ற  எண்ணிக்கையைக் கடந்தது.

கும்பமேளா நிகழ்விற்காக தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 20,000 பேருக்கு மேல் சென்றுள்ளார்கள் என்று தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

கும்பமேளா முடிந்த பிறகு இவர்களில் பெரும்பாலா னோர் தரைமார்க்கமாக தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந் தார்கள். இவர்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசு எவ் வகையிலும் பரிசோதனை செய்யும்  நிலை இல்லை.

கடந்த ஆண்டு குஜராத்தில் நோய் தொற்று, அறிகுறி இல்லாதவர்களால் தான் அதிகம் பரவியது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மக்களிடம் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஊட்டவேண்டிய பொறுப்பில் உள்ள உத்தராகண்ட் முதல் அமைச்சர், ‘கங்கை அன்னை எல்லா வற்றையும் பார்த்துக் கொள்வாள் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதோடு, அனைவரும் கும்பமேளா விற்கு வந்து கங்கை அன்னையின் அருள் பெற்றுச் செல்லுங்கள்' என்று வேறு கூறிவிட்டார்.

அதை விட ஒரு படி மேலே போய் அவரது அமைச்சர வையில் உள்ள பிரேம் சிங் படேல் என்பவர்  "மரணம் என்பது வரத்தான் செய்யும், நோய்வாய்ப்பட்டால் மரணம் ஏற்படும்; அதே போல் கரோனாவால் மரணிப்பவர்களை  அரசாங்கம் பிடித்து நிறுத்த முடியாது, மரணமடைய வேண்டும் என்று விதி மற்றும் வயது இருந்தால் அவர் மரணிக்கத்தான் வேண்டும்" என்று கூறினார்.

மே முதல் வாரத்தில் உத்தராகண்ட் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களால் நாடு முழுவதும் இலட்சக் கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலை யில், ஒன்றிய அரசு இது குறித்து எந்த ஒரு முன்னெச் சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

அந்த  அளவுக்கு இந்துத்துவா மதப் போதை தலையில் ஏறி சவாரி செய்துகொண்டிருக்கிறது.

400 பேர் கூடிய இஸ்லாமிய தப்லிக் ஜமாத் குறித்து 4 மாதங்களாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வந்த செய்தி ஊடகங்கள், கடந்த ஆண்டை விட கடுமையான வேகத்தில் நோய்ப் பரவிய போதும் ஆபத்தான கும்ப மேளாக் கூட்டம் குறித்து  ஊடகங்கள்  பேசவே இல்லை.

மக்களின் நல்வாழ்வுக்கு மதம் எந்த அளவு பேராபத் தானது என்பதை யதார்த்தமான நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய அமைச்சர்கள் தவறான பாதையைக் காட்டியதால் மக்கள் மரணம் அடைந்ததற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?

நியாயமாக நீதிமன்றங்கள் தாமாகவே முன் வந்து மக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது, வழிகாட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

கடவுள் நம்பிக்கையும் மதமும் மக்களை இன்னும் எந்த அளவுக்குப் பலி கொள்ளப் போகிறதோ தெரிய வில்லை. அறிவியல், பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்ப வர்கள் பிரச்சாரம் செய்பவர்கள்மீது வழக்குத் தொடுக்கும் பேதமையை என்ன சொல்ல!

No comments:

Post a Comment