கவிஞர் கலி.பூங்குன்றன்
அய்யாவின் அடிச்சுவட்டில் 78 ஆண்டுகள் என்ற பொருளில் 27.6.2021 மாலை - பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆற்றிய அறிமுகவுரை:
இதே தேதியில் (ஜூன் 27) 1943ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் செட்டிகுளம் மைதானத்தில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் தான் சிறுவன் வீரமணி என்று அழைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் முதலில் மேடை ஏறி (ஸ்டூல் மீது) தன் முதல் முழக் கத்தினை (Maiden Speech) அரங்கேற்றினார்.
அதன் பிறகு தன் 88 அகவையில் 78 ஆண்டுகள் பட்டி தொட்டிகளில் எல்லாம் அவர் கால் படாத ஊர் இல்லை என்கிற அளவுக்கு முழங்கி வருகிறார்.
ஆசிரியர் பேசுகிறார் என்றால் ஆவணம் பேசுகிறது என்று பொருள்.
திராவிடர் இயக்கம் என்பது கருத்துமிகு மேடைப் பேச்சால் மக்களை ஈர்த்த மாபெரும் புரட்சி இயக்கம். இதன் பாடி வீட்டில் இருந்து புறப்பட்ட பேச்சாளர்கள் எண்ணற்றோர் - மக்களின் எண்ணத்தை மாற்றியவர் ஆவர்.
அவர்களுள் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உரை தனித்தன்மையானது. அவர் பேசுகிறார் என்றால் ஆவணம் பேசுகிறது என்று பொருள். திராவிட இயக்க சொற்பொழிவாளர் களுள் இந்த வகையில் இவரது உரை இவருக்கே உரித்தான தனி முத்திரையே! அவர் எழுதிய நூல்களைவிட - அவருடைய பேச்சுகள் நூல்களாக வெளிவந்தது தான் அதிகம்.
நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூல்கள் என்னும் - தந்தை பெரியாரின் போர் ஆயுதங்கள் அவை.
'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது தந்தை பெரியார் அவர்களின் அறிக்கை (10.8.1962 'விடுதலை').
இந்த அறிக்கையில் மிகவும் முதன்மையான தாக நாமும் - இயக்கமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது - தமிழர்களுக்கான உயிர் மூச்சுத் தொடர்பானது அது.
"உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையா திருந்தால் தினசரி 'விடுதலை'யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தோம்" - என்று தந்தை பெரியார் எழுதிய தகவல் தான் அது.
தமிழகத்தின் உயிர்க்காற்றுக்கு உத்தரவாதம் என்னும் கட்டியம் கூறியுள்ளார் நமது அருமைத் தலைவர் - இதற்காக வெறும் "நன்றி" என்பது போதுமானதாக இருக்க முடியாது.
அய்யாவின் இரண்டாவது 'விடுதலை' தலை யங்க அறிக்கை (6.6.1964) 'விடுதலை' வெள்ளி விழா வும் - வேண்டுகோளும்' என்பதாகும்.
"விடுதலை'யை வீரமணியின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன்" என்று தந்தை பெரியார் அந்த அறிக்கையில் குறிப்பிட் டுள்ள வரிகள். வழக்கமாக வைர வரிகள் என்று சொல்லுவார்கள். அதற்கும் மேலானவை இவை!
தந்தை பெரியாரிடத்தில் வேறு யாரும் பெற்றிராத நம்பிக்கையின் உச்சம் இது என்பது தான் இந்த வரிகளுக்குள் நிமிர்ந்து நிற்கும் சாரமாகும்.
மூன்றாவதாக ஒரு முக்கிய தகவல் உண்டு.
மலேசியா சென்று இயக்கப் பிரச்சாரப் பணி களை முடித்துக் கொண்டு திரும்பிய 'விடுதலை' ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு 'விடுதலை'ப் பணியாளர்கள் சார்பில் சென்னை நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு - தேநீர் விருந்து நிகழ்ச்சியில் (28.2.1968) தந்தை பெரியார் ஆசிரியர் பற்றிக் கூறிய மூன்று முத்தான சொற்கள்: அறிவுள்ளவர் - ஆற்றல் உள்ளவர் - பொறுப்பானவர்.
இவற்றிற்கு மேல் எவர் எது சொல்லியிருந் தாலும் - தந்தை பெரியாருக்கு முன் வெகு சாதாரண மானவையே!
"அய்யாவின் அடிச்சுவட்டில் 78 ஆண்டுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட காணொலி கருத் தரங்கம் என்பது ஆசிரியரின் முதல் மேடை முழக்கத்தை மய்யப்படுத்தியது என்பதால் இரண்டு நிகழ்வுகளை நிரல்படுத்துவதே பொருத்தமான தாகும்.
அதுவும் அய்யா அவர்களைக் கொண்டே! 30.10.1960 அன்று சென்னைக் கடற்கரையில் உயர் நீதிமன்ற நீதிப் போக்கிற்குக் கண்டனம் தெரிவிக் கும் பொதுக் கூட்டம் அது.
அந்தக் கூட்டத்தில் சட்டக் கல்லூரி படிப்பை நிறைவு செய்த நிலையில் வீரமணி அவர்களும் பேசினார்.
இறுதியாக உரையாற்றிய தந்தை பெரியார் குறிப்பிட்டது என்ன?
"நண்பர் வீரமணி கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியதுதான். ஏனென்றால், அவர் மற்றவர் களைப் போல ஜாக்கிரதையாகப் பேசாமல், சற்று தாராளமாகவே பேசினார். அவர் வெறும் ஆள் அல்ல; நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்று துணிவாய்ப் பேசி விட்டார். திரு.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றிற்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்ததவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகி விட்டது என்று தான் கருதுவேன். ஏன், நம் இயக்கத்திற்கு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகி விடலாம்" என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்து - எத்தகைய எதிர்பார்ப்பு ஆசிரியர் பற்றி அய்யா அவர்களிடம் இருந்தது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு.
இன்னொரு முக்கிய நிகழ்வு - ஆசிரியர் அவர்களின் உரை - பேச்சுக்கே கிடைக்கப்பெற்ற கிரீடம் அதனைச் சூட்டியவரும் அய்யாவே!
தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் இறுதியாகக் கூட்டிய மாநாடு "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு" (1973 டிசம்பர் 8, 9, பெரியார் திடல்)
அம்மாநாட்டில் தந்தை பெரியாரின் தலைமை உரைக்கு முன்னதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் உரை எழுச்சிமயமானது - போர்ப்பறை போன்றது.
மாநாட்டுத் தலைவர் தந்தை பெரியார் நிறை வுரை ஆற்றினார் - என்ன பேசினார்? இதோ அது:
"இவ்வளவு அருமையான உரையை வீரமணி அவர்கள் நிகழ்த்திய பிறகு நான் பேச வேண்டாம், பேசி, வீரமணி உருவாக்கிய உணர்வைக் கலைத்து விடக் கூடாது என்று கருதி பேசாமலே முடித்து விடலாம் என்று கருதுகிறேன். என்றாலும் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்களே நான் பேசாவிட்டால் என்பதால் தான் ஒரு சிலவற்றைக் கூற முன் வந்துள்ளேன்" என்று வாழ்நாள் எல்லாம் மாலை நேரங்களில் மக்கள் மன்றத்தின் முன் கருத்துப் புயலை வீசி, மக்களை எழுச்சியுறச் செய்த தந்தை பெரியார் (அதனால்தான் தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் என்று அண்ணா கூறினார்) இப்படியொரு பேச்சைப் பேசினார் என்றால் - இந்தப் பேறும், பெற்றிமையும் நமது ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு மட்டுமே தான் கிடைத் திருக்கிறது.
ஆசிரியரின் - மேடைப் பேச்சின் 78ஆம் ஆண்டு என்பதால் ஆசிரியரின் பேச்சை ஒட்டிய அணி வகுப்பை இங்கு நிறுத்த வேண்டியுள்ளது.
1944 ஜூலை 29ஆம் தேதி கடலூரில் நடை பெற்ற தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் முதன்முறையாக தந்தை பெரியார் முன் உரையாற்றிய சிறுவன் வீரமணிக்கு 1973 டிசம்பரில் இப்படியொரு விலை மதிக்க முடியாத கிரீடம் தந்தை பெரியாரால் சூட்டப்பட்டது.
ஆசிரியர் எழுதி வெளிவந்த நூல்களைவிட அவர் உரையாற்றி வந்த உரைகள் நூல்களாக வெளிவந்ததுதான் அதிகமாகும். (அந்தப் பட்டி யலை தனியே காண்க.)
எழுதுவது என்பதற்கு சில வசதிகள் உண்டு. போதிய அவகாசம் கிடைக்கும் - எழுதிய பிறகு திருத்தங்களும் செய்து கொள்ளலாம். ஆனால் பேச்சே புத்தகமாவது அருஞ் செயலே!

No comments:
Post a Comment