“விடுதலை” ஏடு பற்றி அறிஞர் அண்ணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

“விடுதலை” ஏடு பற்றி அறிஞர் அண்ணா

சென்னை சர்க்கார், திராவிட மக்களின் முன்னேற்றத் திற்காகப் பணி புரியும்விடுதலைதினசரிக்கு ரூபா இரண்டாயிரம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

ஓர் இனம், தங்கள் குறைபாடுகளையும், தாங்கள் படும் வேதனைகளையும் கூறி, அவை ஏற்பட்ட விதத்தையும், அவை ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதையும் விளக்கி, அக்குறைபாடுகள் ஒழிய வேண்டும் - நீக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பெற்று, அதன் பொருட்டு உழைத்து வரும் முறையைத் தவறென்றும் - சட்ட விரோத மென்றும் கருதி, அடக்குமுறைகளை அள்ளி வீசுவது ஜனநாயக ஆட்சிமுறைக்கு முற்றிலும் புறம்பானது.

மக்கள் சர்க்கார் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் - மக்களுக்காக உடல், பொருள், உயிர் அனைத் தையும் தியாகம் செய்யத் தயாராயுள்ள சர்க்கார் - மக்களின் மனப் பண்புகளை நன்கறிந்த சர்க்கார், ஓர் இன மக்களின் சமுதாய முன்னேற்றமன்றிப் பிறிதொன்றையும் குறிக் கோளாகப் கொள்ளாது பணிபுரிந்து வரும்விடுதலைக்கு ஜாமீன் கேட்பதை விவேகமுடைய செயலென்றோ, விரும் பத்தக்க முறையென்றோ எவரும் கூறமாட்டார்கள்.

விழிப்பும் - விளக்கமும் தரும்விடுதலை'

திராவிடனே! உன் சமுதாயம், சேறும் பாசியும் நிறைந்த குட்டைபோல் ஆகிவிட்டது. சேறும் பாசியும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்! அந்த நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டு விட்டது. எனவே, அதை உபயோகித்து உடன் உடலை நோய்க்காளாகும்படி செய்து வதைந்து போகாதே! சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உபயோகப்படுத் திக் கொள்என்றுவிடுதலைகூறுகின்றது.

இப்படிக் கூறுவது தவறு - எனவே, இரண்டாயிரம் ரூபா ஜாமீன் கட்டுஎன்று சர்க்கார் - மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்க்கார் கூறுகின்றது. இது நியாயமா?

ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாகக் கிடக்கிறாய் - வீரனாய் - விறல் வேந்தனாய் இருந்த நீ, கோழையாய் - பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடிருந்த நீ, இன்று செங்கை ஏந்திச் சாவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணர வில்லையே!” என்று கூறி விளக்கமும் - விழிப்பும் உண்டாக்கி வருகின்றதுவிடுதலை’.

அறிவுத் துறையிலோ புத்துணர்ச்சி,

 வாழ்க்கைத் துறையிலோ வளம்!‘

இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம்என்று, மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது; ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?

கீழ்த்தர ஜாதியாய் - நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் - உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டு விட்டாய் - பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டு விட்டாய் - கல்வியில் 100-க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் - அரசியலிலோ பிற துறைகளிலோ கேவலம் கீழ்த்தரச் சிப்பந்தியாய்ச் சீர்குலைக்கப்பட்டு விட்டாய்என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியையும், வாழ்க்கைத் துறையில் வளத்தையும் பெறும்படிவிடுதலைபணியாற்றி வருகின்றது.

சாதிச் சனியனையும், மதப் பூசல்களையும், பொருளா தார ஏற்றத் தாழ்வுகளையும், கல்வியின்மையையும் நாட்டி லிருந்து விரட்டியடிப்பதையே நாட்டமாகக் கொண்டுள் ளதாகச் சொல்லப்படும் சர்க்கார், இத்துறைகளில் சர்க்காரின் கொள்கைகளுக்குச் சாதகமான முறையில் பணியாற்றி வரு வதைத் தவறான காரியம் என்று எண்ணி, “எடு இரண்டா யிரம் ரூபா ஜாமீன்என்று கேட்கிறது. இது முறையா?

- தலையங்கம், ‘திராவிட நாடு' 27.6.1948

No comments:

Post a Comment