திருவரங்கம் ஜீயர் நியமன விவகாரம்: உண்மை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 22, 2021

திருவரங்கம் ஜீயர் நியமன விவகாரம்: உண்மை என்ன?

திருவரங்கம் ஜீயர் பொறுப்புக்கு ஆட்கள் தேவை என அக்கோவிலின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டதற்கு சில குழுக்களும் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. அவர்கள் கவனத்திற்கு சில கருத்துகள்.

1. திருவரங்கம் ஜீயர் என்பவர் கோவிலின் ஊழியர் என்பது நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட ஒரு முடிவு.

2. இந்தப் பணிக்கு என சில தகுதிகள் உள்ளன. அந்தத் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்கிறது கோவில் நிர்வாகம். இதற்கு எச்.ராஜா உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்தப் பணி தென் கலை அய்யங்கார்களுக்கு உடையது. வடகலையார்களோ, மாத்வ பிராமணர்களோ, ஸ்மார்த்தர்களோ விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பணிக்கு அரசு ஜீயரை நியமிக்கக்கூடாது என்கிறார்கள். அரசு நியமிக்காமல் யார் நியமிப்பது? வேறு மாநிலத்தைச் சேர்ந்த பார்ப்பனரான எச். ராஜாவா அதை முடிவெடுக்க முடியும்? அரசுதான் நியமிக்க முடியும். 1911இல் இருந்து இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது.

3. 2018இல் ஜீயர் பொறுப்பு காலியானது. அந்தப் பொறுப்புக்கு இப்போது ஆள் தேடுகிறார்கள். அதை ஸ்மார்த்த பார்ப்பனரான எச். ராஜா ஏன் தடுக்கிறார்?

4. இந்தப் பதவிக்கு வர தென்கலை அய்ய்யங்காராக இருக்க வேண்டும்: நாலாயிர திவ்யப் பிரபந்தம்  கற்றுணர்ந்தவராக வேண்டும்; தனது குடும்ப உறவுகளைத் துண்டித்தவராகவும்  துண்டிக்க உறுதி தருபவராகவும் இருத்தல்  வேண்டும்; வைணவ வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், பூசை முறைகள், அறிந்தவராக இருத்தல் அவசியம்.

5. ஒருவர் ஜீயரானதும் அவர் வசிப்பதற்கு கோவிலின் சார்பில் வீடு தரப்படும். அங்கேயே ஜீயர் தங்கிக் கொள்வார். அங்கு பிரபந்தப் பாடம் சொல்லித்தரப்படும். அவருக்கு மாதம் சிறிது ரொக்கமும், ஆராதனையில் பங்கும் தரப்படும். ஆகவே அவர் கோவிலின் ஊழியர்தான்.

6. ஒரு ஜீயர் இறந்துவிட்டால் அடுத்த ஜீயரை எப்படி தேர்வுசெய்வது? சிவ மடங்களில்  ஆதினமே இளைய ஆதீனத்தை நியமிப்பார். மூத்த ஆதீனம் இறந்தால், இளைய ஆதீனம் பட்டத்திற்கு வருவார். இதில் அரசு தலையிடாது. ஆனால் ஜீயர் விஷயத்தில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை. ஆகையால் ஒரு ஜீயர் மரணித்தால் அடுத்த ஜீயரை அரசுதான் நியமிக்கும்.

7. ஒருவர் ஜீயராக இருக்கத் தகுதியானவரா என்பதை திருவரங்கத்தில் உள்ள தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷ்ண சபா தங்களது பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்துப் பரிந்துரைக்கும். இவர்கள் பரிந்துரைப்பதை கோவில் அறங்காவலர்கள் குழு தீர்மானமாக்கும்..இதனை அரசின் பிரதிநிதி அறநிலையத் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார் . 1914இல் இந்த சபா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுதான் வழக்கம்.

8. இந்த தென்னாச்சார்ய சபாவில் தமிழை, பெருமாள் பேசிய அருளிப்பாடாகக் கருதும் வைணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்வைணவர்களில் ரெட்டியார், செட்டியார், யாதவர்  கள்ளர், அம்பலக்காரர், நாய்க்கர், நாயுடு அய்யங்கார், சாத்தாத வைணவர்  என எல்லோரும் உள்ளனர். பாகவதர்களை உள்ளடக்கிய இந்த சபா தரும் நபரை ஜீயராக நியமிப்பதால் ஒட்டு மொத்த வைணவமும் ஜீயரை அங்கீகரித்ததாகிறது.

9. இதற்கு முன்னர் 1945இல் 1980களில் 1990களில் ஜீயர்கள் நியமனமாகியுள்ளனர். அப்போதெல்லாம் ஜீயர் நியமனத்திற்கு விளம்பரம் செய்து விண்ணப்பம்  கேட்டுள்ளனர்ஜீயர்களுக்கும் துறைக்கும் பல வழக்குகள் நடந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் ஜீயர்கள் கோவிலின் ஊழியர் என தீர்ப்பாகியுள்ளது. இவர் தனது கைங்கர்யத்தை சரியாக செய்யவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படலாம். இதனால் இவர் பணியாளராகிறார்.

10. இப்போது எதிர்ப்பு ஏற்பட்டிருப்பது ஏன்? இப்போதுதான் புதிய அரசு உருவாகியிருக்கிறது. இந்த அரசை இந்து விரோத அரசாகக் கட்டமைக்க முயலும் சில அரசியல் சக்திகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்கு ஸ்தலத்தார் என்பவர்களும் துணைபோகிறார்கள்.

11. தென்கலை ஜீயர்கள் தமிழே பெருமாளுடன் உரையாடும் மொழி என்பவர்கள். பிரபந்தத்தை தங்கள் மடங்களில் ஒலிக்கச் செய்வார்கள். ஆனால், இப்போது அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஸ்மார்த்தர்கள் தமிழை நீச மொழி என்பவர்கள். அவர்கள் ஏன் இதில் தலையிட வேண்டும்?

12.கடைசியாக ஒரே கேள்வி. ஜீயரை நியமிக்கத் தகுதி வாய்ந்தது தமிழ் வைணவர்கள் நிரம்பிய தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷ்ண சபாவா அல்லது வடமொழியை முன்னிறுத்தும் எச். ராஜாவா?

பூவுலகு சுந்தரராஜன்

பதிவிலிருந்து... 

No comments:

Post a Comment