வேதங்கள் - பேதங்கள்

 சு.அறிவுக்கரசு

மூன்று அக்னிகளாம். புவி அக்னி, பர அக்னி, நடு அக்னி என மூன்று. புவி அக்னி மனிதர் மூட்டுவது. பர அக்னியால் மனித உயிர் இறக்குமாம். மூன்றாவது அக்னியால் தான் மழை பெய்கிறதாம். எவ்வளவு முட்டாள் தனமான புளுகுகள் என்பதைக் கவனிக்கவும். புவி அக்னியில் ஜாதவேதஸன். வைசுவாநரன், இரவு - பகல், குதிரை, பறவை, ரதம், டமாரம், வில்நுனி, இருபருவம், இந்திரன், மருந்து, சோமன், பர்ஜன்யன், விஷ்ணு முதலிய குணங்களைக் காணலாம் என்கிறார்கள். திரவினோதஸன், தனூன பாதன், நரஸாம்ஸன், பவமானன், ஜாதவேதஸன் எனப் பெயர்கள் உண்டு என்கிறார்கள். பர அக்னி திரவியம் தருவதால் திரவினோதஸன் எனவும் பரம் எனும் தேவ அக்னியின் மகனானதால் தனூனபதன் எனவும் நரஸாம்ஸன் எனவும் பெயர்களாம். பிறந்தவுடன் சகலமும் தெரிந்தவன் என்பதால் ஜாதவேதஸன் என்றும் பெயராம். நடு அக்னி என்பது இந்திரனாம். இடிமுழக்கம், ஈரத்தைப் பற்றுவது, விருத்திரனைக் கொல்வது போன்ற பயங்கரச் செயல்களைச் செய்வது இதன் வேலையாம். இவனுக்க 26 பெயர்களாம். வாயு, வருணன், ருத்ரன், பிரஹஸ்பதி, விஸ்வகர்மன், ஸரஸ்வதி போன்றவை உள்பட பெயர்களாம்.

அக்னி என்றால் நெருப்பு. அதை மூன்றாக்கி, முப்பதுக்கு மேற்பட்ட பெயர்கள் வைத்தது அறிவற்ற செயல்தானே. ஆண் பெயரும், பெண் பெயரும் சேர்த்தே வைத்தது முட்டாள்தனமல்லவா? பவுதீகப் பொருளை மனிதன் போலவே பாவித்துக் கல்யாணம், கருமாதி செய்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனமல்லவா? அக்னி தேவனாம், வருணன் பகவானாம், வாயுவும் பகவானாம், கடவுள் அல்லவாம், மிகைப்படுத்தப்பட்ட சக்தி (Personified)  என்று அரவிந்தகோஷ் விளக்கம் தந்தார். இவர்களின் பொய்ப் பெருமைகளுக்கு அளவே இல்லை. “சதவிம்ச பிரமாணம்என்றொரு நூலாம். பூமி, வானம், கடல் போன்றவற்றை ஆய்ந்து எழுதப்பட்ட நூலாம். ஆனால் கைவசம் இல்லையாம். இருக்கும் இடமும் தெரியாதாம். பின் பெயர் மட்டும் எப்படித் தெரிந்ததாம்? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு என்பார்கள். இவர்கள் முட்டாள்கள். இவர்களின் புளுகுக்கு அல்பாயுசுதான்.

சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளன என்றும் அது தமஸ் என்றும் ஒளிப்பகுதியை ஜ்யோதி என்றும் வேதம் கூறுகிறது. எந்தவித விஞ்ஞான அறிவும் பெற்றிராத நிலையில் இவர்கள் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் கிடையாது. கருந்துளை (Black Hole)என்று அறிவியலில் உண்டு. இந்தப் பிரபஞ்சம் எனப்படும் பகுதி 4 விழுக்காடு என்றால், கருந்துளைப் பகுதி 96 விழுக்காடு எனுமளவுக்கு மிகப் பெரும்பகுதியை கருந்துளை என அறிவியல் அழைக்கிறது. ஏதும் அறியாத ரிஷிகள் தமஸூக்கும் ஜோதிக்கும் இடையில்பரமாத்மாஇருக்கிறது என்று கதையளக்கிறார்கள். பரமாத்மா என்றால் கடவுளாம். அது படைத்த மனிதர்கள்ஜீவாத்மாவாம். அதிதியும் தக்ஷனும் இணைந்து அனேக தேவன்களையும் தேவதைகளையும்உற்பத்திசெய்தார்களாம். அக்னி அப்படி உருவான முதல் தேவனாம். சோமன் அக்னியுடன் பிறந்த இரட்டைகளில் மற்றொன்றாம். (அக்னி) தக்ஷனுடன் அதிதியில் கலந்தபோது 13 ஆதித்யர்கள் தோன்றினார்களாம். இவர்கள் எல்லோரும் உலகுக்கு ஒளி தருகிறார்களாம். இப்படியெல்லாம் பிதற்றியவன் அரவிந்தகோஷ், வங்காளப் பார்ப்பான். வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து புதுச்சேரியில் பதுங்கிக் கொண்ட வீரன், இதேபோல் தப்பித்து வந்து பதுங்கிக் கொண்ட சுப்ரமணிய பாரதியின் நண்பன். இந்தக் கோழைகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்கிறார்கள் ஹிந்துக்கள். ஜாதிப் பாசம்தான் காரணம்.

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள். மொத்தம் 1017 சூக்தங்கள். இவற்றை அறிந்தவர்கள் 15 ரிஷிகள். ஒருவன் அறிந்ததை மற்றவன் அறிய மாட்டான். முழுவதும் அறிந்தவன் ஒருவனும் இல்லை.

ரிக்வேதக் குழப்பங்களில் சிறப்பான குழப்பம் இதுதான். “தேவர்கள் உலகங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். படைப்பு எப்படி என்பதை யார் அறிவான்? அவன்தான் படைத்தானா? இல்லையா? எல்லாவற்றையும் அவனே அறிவான். ஒரு வேளை அவனும் அறியாதவனா? அவன் அறிந்தும் அறியாதது போல இருக்கிறானா?” என்ன விளங்கியது. உங்களுக்கு? இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் எழுதினார், படித்தால் விளங்குவது சித்தாந்தம். விளங்காதது வேதாந்தம் என்றார்.

மங்கள காரியங்களாம். சுப காரியங்களாம். அவற்றைச் செய்யும்போது மங்களகரமான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டுமாம். அவை சுவஸ்தி மந்த்ரங்களாம். கூடுதலாகச் சொல்லப்படும் மங்கள மந்த்ரங்களும் சில உண்டாம். அவை சாந்தி மந்த்ரங்களாம்.

அக்னிம் ஈளே புரோஹிதம் யக்ஞஸ்யஎன்று ரிக்வேத, முதல் மண்டலத்தின் முதல் பாடல் தொடங்கும். நெருப்புதான் எல்லாமே என்பது தான் ஆரியர் கொள்கை. அதை வணங்குகிறான் முதலில். “மது சந்தன விஸ்வாமித்ரன்என்பது அடுத்த பாடல். வாயு பகவான் வணக்கம். ஸோமபானம் தயார் செய்துள்ளோம். குடிப்பதற்கு நீயும் இந்திரனும் வருணனும் வாருங்கள். யாகத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்று அழைக்கிறான். சோமபானம் மதுபானத்தில் ஒரு வகை இக்கால பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற ஒரு வகை இதைக் குடிக்கவா என்று பகவானைக் கூப்பிடுகிறானென்றால் ஹிந்து பகவான்கள் குடிவெறியர்கள் அல்லவா?

சோமபானத்தைத் தர்ப்பைப் புல்லில் நனைத்து வைத்திருக்கிறேன், வா என்று மூன்றாம் பாடல் இந்திரனை, அஸ்வினி தேவர்களை அழைக்கிறார் அத்துடன் அல்லாமல் கல்விக்கான பெண் கடவுள் ஸரஸ்வதியை அழைக்கிறான். (ஸரஸ்வதிக்கும் குடிப்பழக்கம் உண்டோ?)

அஸ்வினி தேவர்களை அழைக்கும்போது, மூன்று முறை வரச்சொல்கிறான். அவர்களின் தேர் பெரியதாம். தேருக்கு மூன்று சக்கரங்களாம். (இதை எழுதும்போது, வடுவூர் நாராயணன் அதனை மூன்று சக்கரங்கள் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு அந்தத் தொழில்நுட்பத்தை மேலை நாட்டார் எடுத்துச் சென்றுவிட்டதாக அங்கலாய்க்கிறார். இதே மாதிரிதான் ஆரியப்புளுகுகள். சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன என்கிறார்கள். தேரோட்டிக்கு ஒரு கால் மட்டுமே என்கிறார்கள். அறிவியலின்படி சூரியன் நிலையாக ஒரே இடத்தில் சுழல்கிறது. வேதப் புளுகு எப்படி?) இந்த அஸ்வினி தேவர்கள், இறக்கை முளைத்த குதிரைகளாம். வான்வழியே 800 முதல் 1500 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடிறயவைகளாம். இவை அறுவை மருத்துவர்களாம். தலையைக்கூட மாற்றி அறுவை மருத்துவம் செய்பவர்களாம். இதயமாற்று போல தலை மாற்றாம். (பிள்ளையார் தலைக்குப் பதில் யானைத் தலையை வைத்தது யார்? இவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட அபத்தங்கள் நிறைய. அக்னி, வருணன், இந்திரன், ஸரஸ்வதி, ருத்திரன், போற்றித்துதிப் பாடல்கள் இரண்டாம் மண்டலம் முழுக்க நிறைந்துள்ளன. மூன்றாம் நான்காம் மண்டலங்களிலும் அதே பிதற்றல்களே, மூன்று கடவுள்களும் முப்பது தேவர்களும் கொண்டாடப்படுகின்றன. மீதி மண்டலங்களிலும் இதே மாதிரி அபத்தங்கள், அபஸ்வரங்கள். நம் ஊர்ப்பார்ப்பனர்கள் ரிக்வேதத்தில் வானியலைப் பற்றிய தெளிவான அறிவு இருந்திருப்பதாகக் கூறுகிறார்கள். விளக்க வேண்டாவா? சந்திர மண்டலமும் அதனுள் அடங்கிய நட்சத்திரக் கூட்டமும் புதிய தகவல்களை அளிக்கின்றனவாம். சூரியக் குடும்பம் என்பதுதான் அறிவியல். இவர்களின் சந்திரன் குருபத்தினி தாரா மீது மையல் கொண்டு சாபம் பெற்று தேய்ந்து வளரும் கதையின் கதாநாயகன். எதை வானியல் அறிவு என்று புளுகுகிறார்கள்? எல்லாமே அபத்தக் களஞ்சியம்.

இவை போதாவென்று 30 மந்த்ரங்கள் கடைசியில் உள்ளனவாம். அவற்றில் ஒன்றில் கனவுகளின் தந்தை எமன் என்கிறது. அதிபயங்கரமான கெட்ட கனவுகளைக் காண்பவர்கள் தூக்கத்திலேயே இறந்து விடுவார்களாம். யமலோகத்தில் தோன்றும் கனவுகள் பூமியில் இறங்கி மனிதனுக்குள் நுழைகிறதாம். கனவு மனிதனைக் கொன்று விடலாமாம். எமன்தான் பூமியில் பிறந்த முதல் மனிதன் என்கிறது வேதம். முதலில் இறந்தவனும் அவன்தானாம். இறந்து வானுலகம் போனபோது எமலோகம் காலியாக இருந்ததால் அவன் மன்னன் ஆனானாம். செத்துப் போனவர்களுக்கெல்லாம் (பித்ருக்கள்) அவன் அரசனாம். பித்ருக்கள் அவனது பிரஜைகளாம். க்ளைமாக்ஸ் மங்கலமாக முடிகிறதாம்.

தொடரும்....

 

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறது. சூரியை, சூரியனின் (ஸவிதாவின்) மகள். ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான். ஸோமன் என்பது பிராந்தியோ, விஸ்கியோ? திருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம். அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம். தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதிஎன்று வாழ்த்துகிறார்கள். இந்திரனே, மணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடு. அவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள். பத்தும் புதல்வர்களாம். புதல்வியே வேண்டாமாம். என்ன புத்தி! ஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான். சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லை. படிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத், அய்தரேய உபநிஷத் என்பதாம். உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம். உலகம் படைக்கப்பட்டதா? உருவானதா? மதவாதிகளும், மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றன. அறிவியலோ, பரிணாமம் என்கிறது. எண்பித்திருக்கிறது. இந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம். மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம். பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம். வாயிலிருந்து பேச்சு வந்ததாம். அதிலிருந்து நெருப்பு வந்ததாம். மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம். மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம். கண்கள் தோன்றின. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம். காதுகள் தோன்றின. திசைகள் தோன்றின. தோல் உண்டாகியது. தோல் பிளந்து, மயிர்கள் தோன்றின. மயிரிலிருந்து செடி, கொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயின. இதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை. மூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்) மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம். தொப்புள் தோன்றியதாம். அதிலிருந்து அபானன், அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம். குறி தோன்றியதாம். பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம். உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதே! மருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம். கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய், தொப்புள், குறி, குதம, பிரம்மரந்திரம் என்பவையாம். இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம். அதன் வழியே ஆவியை விடுபவன், மரணமற்ற நிலையை அடைகிறானாம். வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம். ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம். கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வ, க்வ, க்வ என்று அழுகிறது. சமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம். பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம். முட்டாள் தனமான உளறல், அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

Comments