சனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 1, 2021

சனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை!

எழுச்சித் தமிழர் திருமாவளவன் முழக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் பாபு ஜெயகுமார் எழுதிய நூலை வெளியிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரையில் இன்று நான் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.

இந்தச் சிறப்பான வாய்ப்பை எனக்கு அளித்த தமிழர் தலைவருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் வரலாற்றை சாமி. சிதம்பரனார் முதன் முதலாக எழுதினார்.  ஆசிரியர் அவர்களும் எழுதி பல தொகுதிகள் வந்திருக்கின்றன. பாபு ஜெயகுமார் எழுதிய இந்நூல் உலகெங்கும் பரவிட வேண்டும். சுரண்டல் நிறைந்த ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நிற்க நமக்கு பெரியார் தேவைப்படுகிறார்.

இன்னும் எத்தனையோ எண்ணிக்கையில் பெரியார் திரைப்படத்தைத் தயாரிக்க முடியும் என்று நமது ஞான. இராசசேகரன் அய்..எஸ். அவர்கள் இங்கே சொன்னார்.

தமிழ்நாட்டின் தனித்

தன்மைக்குக் காரணம் பெரியார்

காரணம், பெரியார் என்றால் கருத்துச் சுரங்கம் என்று பொருள். இந்தியாவில் - உலகில் புதிய சிந்தனைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். புதிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் அவர். இன்று தமிழ்நாடு மதவாதத்தை எதிர்த்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரியார்.

நூலாசிரியர் பாபு ஜெயக்குமார் இந்நூலில் முன்னுரை யாக எழுதியதை விமானத்தில் வரும்போது படித்தேன்.

பார்ப்பனர்களுக்கு அடிமையான

தமிழ் மன்னர்கள்

ஜனநாயக மரபு என்பது தமிழ்நாட்டில் இங்கிலாந்து நாட்டுக்கு முன்பே மலர்ந்திருக்கிறது. 1215ஆம் ஆண்டு வாக்கில் தான் இங்கிலாந்தில்கூட ஜனநாயகம் பற்றி பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே உத்தரமேரூரில் உள்ளாட்சி ஜனநாயகம் மலர்ந்து விட்டது.

ஆனாலும் நமது சோழ அரசர்களும் பாண்டியர் களும், பல்லவர்களும், நாயக்கர் மன்னர்களும், பார்ப் பனர்களின் மேலாண்மைக்குத் தான் துணை போயி ருக்கிறார்கள்.

அவர்கள் கல்விக் கூடம் வைத்துச் சொல்லிக் கொடுத் தது எல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான். சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் வேதங்களும், உபநிஷத்துக்களும்தான்.

(11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். 140 மாணவர்கள் கற்றனர். 14 ஆசிரியர்கள்; ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் நாள்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. 45 வேலி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங் களும் சொல்லித் தரப்பட்டன.

புதுச்சேரிக்கு அருகில் திருபுவனத்தில் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டது. 260 மாணவர்கள், 12 ஆசிரி யர்கள் இருந்தனர். இதிகாசங்களும் மனுதர்மமும் கற்பிக் கப்பட்டன. 12ஆம் நூற்றாண்டில் திருவாவடு துறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். சமஸ்கிருதத்தில் உள்ள சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள் (உத்தரமேரூர் கல்வெட்டு பராந்தக சோழன் தீட்டியது - மேற்படி புத்தகம் பக்கம் 454).

தமிழ் வேந்தர்கள் பார்ப்பனர்களுக்கு அடி பணிந்து கிடந்தனர். கிராமங்கள் எல்லாம் அவர்களுக்கு இனா மாக தாரை வார்க்கப்பட்டன. 'மங்கலம்', 'மங்கலம்' என்று பெயர் உள்ள கிராமங்கள் எல்லாம் நமது மன்னர்களால் பார்ப்பனர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டவையே! அந்தக் கிராமங்களில் பார்ப்பனர்கள் வரி வசூல் செய்துகொள்ளலாம் (மூன்று வேதங்கள் படித்த வர்களுக்குத் திரிவேதிமங்கலம், நான்கு வேதங்கள் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலங்கள் என்று பெயரிட்டு நிலங்கள் இனாமாக அளிக்கப்பட்டன).

பார்ப்பனர் அல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்பட வில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் நமது அரசர்கள் எடுக்கவேயில்லை.

17ஆம் நூற்றாண்டில் மதுரை வந்த ராபர்ட் டி நொபிலி எழுதியுள்ளார் - மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். சமஸ்கிருத பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று எழுதியுள்ளார்.

களப்பிரர் இருட்டடிக்கப்பட்டதேன்?

பவுத்தம் சனாதனத்தை எதிர்த்தது  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தப் பவுத்தம் இந்தியாவிலேயே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. மன்னர்களைக் கையில் போட்டுக் கொண்டு ஒழித்தது.

களப்பிரர்கள் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு என்று அளிக்கப்பட்ட சலுகைகள், இனாம் நிலங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன. அதனால்தான் களப் பிரர் ஆட்சியை இருண்ட காலம் என்பார்கள். பார்ப்பனர்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை அனைத்தையும் இருட்டடித்து விட்டனர்.

தந்தை பெரியார் 1879இல் பிறந்தார் - அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு (சென்சஸ்) எடுக்கப்பட்டது. 99 விழுக்காடு  கல்வியற்றவர்கள் என்கிறது அந்தக் கணக்கெடுப்பு!

அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இன்றைய தினம் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் அதற்காக வித்திட்டவர், பாடுபட்டவர், போர்க் கொடி தூக்கியவர், களங்கள் கண்டவர் தந்தை பெரியார்.

மீண்டும் ஆரியம் தலைதூக்குகிறது. பெரியார் இல்லை, இல்லை, கலைஞர் இல்லை என்ற தைரியத்தில் துள்ளுகிறார்கள்.

இதனை நாம் எதிர் கொள்ள வேண்டும். அதற்கு நமக்குக் கிடைத்த ஒரே ஆயுதம், போர் ஆயுதம் பெரியார் பெரியார்தான்!

சனாதன சக்திகள் இங்கு கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரே!

சனாதனம் இங்கே கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியார்தான்.  அந்தளவு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

ஒரு போதும் சனாதன சக்திகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கப் போவதில்லை.

தேர்தலில் தக்கப்பாடம் கற்பிப்போம்!

தேர்தலில் தக்கப் பாடம் கற்பிப்போம்! விடுதலை சிறுத்தைகளையும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கி என்று எங்களை அடையாளப்படுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர். அதில் உறுதியாக இருப்போம் - நிற்போம்.

சனாதன மதவாத சக்திகளை பின்னங்கால் பிடரியில் இடிபட இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு  வடக்கே விரட்டியடிப்போம் - விரட்டியடிப் போம் என்று எழுச்சியுரை ஆற்றினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

 

No comments:

Post a Comment