அண்ணா பல்கலைக் கழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினைத் தொடருக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

அண்ணா பல்கலைக் கழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினைத் தொடருக!

 இன்றேல், ஒத்தக் கருத்துள்ளவர்களைத் திரட்டி போராட்டக் களம் காணுவோம்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர தமிழக முதல்வரும், தமிழக அரசும் தலையிட வேண்டும் என்றும், இன்றேல், ஒத்தக் கருத்துள்ளவர்களைத் திரட்டி போராட்டக் களம் காணுவோம் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அண்ணா பல்கலைக் கழகத்தை மத்தியில் உள்ள பா... அரசு - எப்படியும் தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன்மூலம் ஒடுக்கப்பட்ட மக்களான பழங்குடியினர் (எஸ்.டி.,), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.,), பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்.பி.சி.) தற்போது  மாணவர் சேர்க்கையில் தொடரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை ஒழித்துக்கட்ட உடனடியாக முடியவில்லை என்பதற்கு, ஆய்வு மாணவர்களுக்கும் (எம்.டெக் பயோ டெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டெஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும்) 2020-21 மாணவர் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கிறோம் என்று அண்ணா பல்கலைக் கழக உயர் தொழில்நுட்பத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பதே முக்கிய ஆதாரமாகும்.

 வன்மையான கண்டனத்திற்குரியது

69 சதவிகித இட ஒதுக்கீட்டினை மத்திய பா... அரசு ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர் களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

தமிழக முதல்வரும், தமிழக அரசும் இதில் தலையிட்டு, இவ்வாண்டும் நிறுத்தாமல், வழக்கம்போல் இயங்கும்படி -  மாணவர் சேர்க்கை உயர் படிப்புகளுக்கானவை - தொடர ஏற்பாடு செய்வது அவசியம் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்!

ஒத்தக் கருத்துள்ளவர்களைத் திரட்டி....

இன்றேல், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டி போராட்டக் களத்தில் இறங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

1.2.2021

No comments:

Post a Comment