திராவிடர் கழகம் ஆயிரங்காலத்துப் பயிர்! கட்டுப்பாடு மிக்க கொள்கைக் குடும்பங்களே இதன் பலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

திராவிடர் கழகம் ஆயிரங்காலத்துப் பயிர்! கட்டுப்பாடு மிக்க கொள்கைக் குடும்பங்களே இதன் பலம்!

பெரியாருக்குப் பின்னால் இயக்கம் இருக்கிறது எனக்குப் பின்னரும் வலிவோடு இயங்கும்

'விடுதலை' காகிதம் அல்ல - ஆயுதம்! வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பீர்!

திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவரின் பாசறை உரை

நமது சிறப்புச் செய்தியாளர்

திராவிடர் கழகம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்! கட்டுப்பாடு மிக்க கொள்கைக் குடும்பங்களே இதன் பலம். தந்தை பெரியாருக்குப் பிறகும் கழகம் வலிவோடு இருப்பது போலவே, எனக்குப் பின்னரும் இந்த இலட்சிய இயக்கம் வலிவோடு இயங்கும்;  நம் ஒவ்வொருவரின் கடமை விடுதலையை வீட்டுக்கு வீடு சேர்ப்பதே என்று கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர், கி. வீரமணி அவர்கள் நேற்று  (12.12.2020) சென்னை  பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழு கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கொடும் கரோனா காலத்தில் மக்கள் நடமாட முடியாத ஒரு சூழல் ஆனாலும், இயக்கம் என்பதால் என்றைக்கும் இயங்கிக் கொண்டே இருப்பது என்பதற்கான இலக்கணத்தை இப்போது நேராக நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமது பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், துரை. சந்திரசேகரன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் மதுரை செல்வம், தருமபுரி ஊமை. செயராமன், ஈரோடு சண்முகம், பொன்னேரி பன்னீர்செல்வம் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு தேனீக்கள் போல சுற்றிச் சுழன்று 'விடுதலை' சந்தாக்களை சேகரித்தது கண்டு மட்டிலா மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய வழக்குரைஞர்களும் தங்கள் பங் களிப்பை இதில் செய்திருக்கிறார்கள். இளைஞரணி பொறுப்பாளராக இருந்த நமது வீரன் வழக்குரைஞராகி தென் காசி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். சந்தாக்கள் சேர்ப்பது, இயக்க நூல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்று சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. 

மதுரையில் நம் வழக்குரைஞர்கள் கணேசன், சித்தார்த்தன் போன்றோரும் இதில் முனைப்புக் காட்டுவது பாராட்டுக் குரியது. நமது வழக்குரைஞர் அணி வீரசேகரன், குமாரதேவன் முதலியோர்  பணிகள் பாராட்டத்தக்கவை.

'விடுதலை' சந்தா சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டுள்ளது. வழக்குரைஞர் நிம்மதி குடந்தை மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றது முதற் கொண்டு அம்மாவட் டத்தில் இயக்கப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளன.

நமது 'ஆடிட்டர்' சண்முகத்திடம் கூட சொன்னேன். நமது தோழர் நிம்மதியின் செயல்பாடுகளால் நான் நிம்மதி அடைந்தேன் என்று சொன்னதுண்டு.

'விடுதலை'க்கு நன்கொடை என்று பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். அது மளமளவென்று நிதி குவிந்தது.

'விடுதலை' சந்தா சேர்ப்பது இன்னொரு வகையில் மக்கள் சந்திப்பாகும். நம் இயக்கம், கொள்கைகள் பற்றி உரையாடும் வாய்ப்புகள் அதன் மூலம் கிடைக்கின்றன. 

'விடுதலை' காகிதம் அல்ல - ஆயுதம்!

'விடுதலை' என்பது வெறும் காகிதம் அல்ல - ஆயுதம் - போர் ஆயுதம்! மக்களிடத்தில் பொதுக் கருத்தை உருவாக்கக் கூடிய ஆற்றல் படைத்தது. இப்பொழுது இணைய தளத்தின் மூலம் ஏராளமானவர்கள் படிக்க ஆரம்பித்துள்ளனர் - வாசகர் எண்ணிக்கை பெருகி இருப்பது மகிழ்ச்சிக்குரியது. 

வருங்காலம் என்பது விஞ்ஞான வளர்ச்சியில் காகித ஏடுகள், இதழ்கள் என்ற நிலை பழையதாகி, இணைய தளத்தின் மூலம் படிக்கும் நிலை உருவாகும். அதற்கும் நாம் தயாராக வேண்டும்; மக்களையும் தயார் படுத்திட வேண்டும். 

காணொலியில் நமது சாதனை!

பொதுக் கூட்டங்களை நாம் நடத்த இயலவில்லையென்றாலும், காணொலி மூலம் பெரும்பாலும் நமது கருத்துகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். 

ஒரு காணொலி உரை நான்காயிரம் - அய்யாயிரம் பேர்களுக்குப் போய்ச் சேர்கிறது என்றால் சாதாரணமானது தானா?

105 காணொலி நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு இருப்பதாக இங்கே நமது துணைத் தலைவர் உரை யாற்றும் போது குறிப்பிட்டார். நமது மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு அவர்கள் பணி மிகவும் சிறப்புக்குரியது.

இன்னொரு பக்கத்தில் மகளிரணி யினர், இளைஞரணியினர் மாவட்ட அளவில் மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் நாள்தோறும் நாள்தோறும் காணொலி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.

நமது துணைத் தலைவர், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, மணியம்மை போன்றோர் காணொலி களில் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர். 

உங்களை சந்திப்பதால் நானும், 

என்னை சந்திப்பதால் நீங்களும்...

பல மாதங்கள் கழித்து என்னைப் பார்ப்பதற்காகவே இங்கே வந்ததாக  சிலர் சொன்னார்கள். என்னைப் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் உங்களை எல்லாம் பார்ப்பதிலே, நேரிலே சந்திப்பதிலே இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இயக்கம் என்பது  ஆயிரம் காலத்துப் பயிர்!

எந்த உறவை விடவும் கொள்கை உறவுதான் வலிமையுடையது. இந்த இயக்கம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகும் வலிமையோடு செயல்படுகிறது - வெற்றிகளைக் குவிக்கிறது. என்றால், அதற்குக் காரணம் கொள்கை யையே மூச்சுக் காற்றாகக் கொண்டு, கட்டுப்பாடு என்னும் கவசத்தோடு குடும்பம் குடும்பமாக இருப்பதால், இந்த இயக்கம், கழகம் அடித்தளம் உறுதியாக - பலமாக கொண்ட - என்ன செய்தாலும் எதிரிகளால் வீழ்த்தவேப் பட முடியாத, எதிலும் வெற்றி பெறும் அமைப்பாக இருக்கிறது. பிரச்சாரம்! பிரச்சாரம்!! அது திண்ணைப் பிரச்சாரமாகக் கூட இருக்கலாம் - இருக்கவும் வேண்டும்.

இந்தக் கரோனா காலத்தில் இயக்க அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். நமது மகளிர் அமைப்பு, மாணவர் கழகம், இளைஞரணி, தொழிலாளரணி, அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். அதில் கவனம் செலுத்துங்கள். இந்தக் காலத்தை நழுவ விட்டு விடாதீர்கள்.

பெரியாருக்குப் பின்னால்  யார் என்று கேட்டார்கள். இப்பொழுது வீரமணிக்குப் பிறகு என்று கேட்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன? 

எனக்குப் பின்னரும் இயக்கம் வலிவோடு இருக்கும் - அய்யமில்லை

பெரியாருக்குப் பின்னால் வீரமணி தலைமையிலே திராவிடர் கழகம் வலிமையாக இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு விட்டதாகப் பொருள். தொண்டறத்தால், கொள்கைப் பாசத்தால் வலிமையோடு வாழும் இயக்கம் இது. எனக்குப் பின்னரும் இயக்கம் பலமாகவே இருக்கும். வேகமாகவே செயல்படும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. இது ஆயிரங் காலத்துப் பயிர்! உழைப்புக்கும், உண்மைத் தொண்டுக்கும் ஏற்ப இயக்கப் பொறுப்புகள் அவரவர்களுக்கே வந்து சேரும்.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இயக்கத்தை முன்னிலைப்படுத்தும் தோழர்கள் நமது தோழர்கள்.

வயது 88இல் இருக்கிறேன் - எவ்வளவு காலம் வாழ்வேன் என்றால் நம்முன் உள்ள பிரச்சினைகள் - நாம் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் சவால்கள் தீர்க்கப்படும் வரை நான் இருப்பேன்.

இன்றைய தினம் பெரியார் உலகம் முழுவதும் பேசப் படுகிறார். அமெரிக்காவில் குழந்தைகள் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் - மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது.

உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்வீர்!

நம் இயக்கம் என்பது ஒரு கொள்கைக் குடும்பம். ஒருவருக்கு ஏற்படும் துன்பம் மற்றவருக்கு ஏற்பட்டது போல; உடம்பில் ஒரு பாகம் அடிபட்டாலும் அந்த வலியை உடம்பே உணரவில்லையா? கண்கள் கலங்க வில்லையா? அது போன்றதுதான் - இயக்கக் குடும்பத்தில் உள்ள நம் ஒவ்வொருவருக்கும்.  இழக்கக் கூடாத பல தோழர்களை இழந்து இருக்கிறோம். தூத்துக்குடி பெரியாரடியானாகட்டும், நமது பவுன்ராசாவாகட்டும், நமது நல். இராமச்சந்திரனாகட்டும் இழக்கக் கூடாத இழப்புகள்.

நமது கழகக் குடும்பங்களைச் சார்ந்த தருமபுரி சிவாஜி, நெல்லுப்பட்டு இராமலிங்கம், ஆவடி கார் வேந்தன், மதுக்கூர் சிவக்குமார் வீட்டுப் பிள்ளை களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப் பதற்கு மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தோழர்களே, உடல் நலனைப் பாதுகாப் பதில் கவனமாக இருங்கள். இருங்கள். மார்ச்சு மாதம் அன்னை மணியம்மையார் நினைவு நாளான 16ஆம் தேதியிலிருந்து எனது பிரச் சாரம் தொடங்கும் என்றார்.

திருப்பத்தூர், கிருட்டினகிரி மாவட்டங்கள் 

நிருவாக அமைப்பு மாற்றம்

திருப்பத்தூர்

நகராட்சிகள்: திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை.

பேரூராட்சிகள்: உதயேந்திரம், ஆலங் காயம், நாட்றம்பள்ளி.

ஒன்றியங்கள்: திருப்பத்தூர் ஒன்றியம், ஜோலார்பேட்டை ஒன்றியம், கந்திலி ஒன்றியம், நாட்றம்பள்ளி ஒன்றியம், ஆலங் காயம் ஒன்றியம், மாதனூர் ஒன்றியம்.

கிருட்டினகிரி 

ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றியங்கள் கிருட்டினகிரி கழக மாவட்டத்துடன் இணைக் கப்படுகிறது.

தருமபுரி மண்டலம்

மண்டலத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மண்டல செயலாளர்: பழ. பிரபு, பொதுக் குழு உறுப்பினர்: கோ. திராவிடமணி.

புதுச்சேரி மாநிலம்

மண்டல தலைவர்: இரா. சடகோபன், மண்டல அமைப்பாளர்: புதுவை இராசு.

திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில் (12.12.2020) கழகத் தலைவர் அறிவிப்பு.

No comments:

Post a Comment