'பைசர் தடுப்பூசி பயன்படுத்திய அமெரிக்க செவிலியருக்கு கரோனா' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

'பைசர் தடுப்பூசி பயன்படுத்திய அமெரிக்க செவிலியருக்கு கரோனா'

கலிபோர்னியா, டிச.31 அமெரிக்காவின் கலிபோர்னி யாவை சேர்ந்தவர் மேத்யூ (45). இவர் இருவேறு மருத்துவ மனைகளில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் பைசர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக பதிவிட்டுள்ளார். 6 நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு பின் கரோனா பிரிவில் பணியாற்றிய நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து கருநாடகா வந்தவர்களை அடையாளம் கண்டு, சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில், கடந்த 23ஆம் தேதி வந்த  ஷிவமொக்கா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு புதிய வகை கரோனாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கருநாடகாவில் புதிய கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளபைசர்எனப்படும் கரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு இந்த மாத தொடக்கத்தில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இதை பயன்படுத்த அனுமதி அளித்தன. இதேபோல், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளகோவிஷீல்டுதடுப்பூசியை பயன்படுத்த, உலகில் முதல் நாடாக இங்கிலாந்து அரசு நேற்று அனுமதி அளித்தது.

இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை அவசர காலத்தில் பயன்படுத்த இங்கிலாந்து நேற்று அனுமதி அளித்த நிலையில், இந்தியாவிலும் இதுபோல் பயன்படுத்த அனுமதிக்கும்படி இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

 

ஆளுநரைத் திரும்ப பெறுங்கள்குடியரசுத் தலைவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

கொல்கத்தா,டிச.31  மாநில அரசுக்கு எதிராக செயல் படும் ஆளுநர் ஜக்தீப் தங்காரை திரும்ப பெறுங்கள் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்,  மம்தாவின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மத்தியஅரசின் பெரும்பாலான சட்டங்களுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால், பாஜக மம்தா மீது கடுமையான கோபத்தில் உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

அங்கு 2021ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் அனல்பறக்கிறது. மம்தா கட்சியைச் சேர்ந்த பலரை பாஜக தன்பக்கம் இழுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கார், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும், மாநில நலன்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக மம்தா குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு,  கடிதம் எழுதி உள்ளார். அதில், ஆளுநர் ஜக்தீப் தங்காரை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

இஸ்ரோ தலைவர் சிவன் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

புதுடில்லி, டிச.31, தமிழ கத்தை சேர்ந்த சிவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இஸ்ரோவுக்கு வருவதற்கு முன் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தின் இயக்குநராக இருந்தார். இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜன.14ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 2022 ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment