கருநாடக மாநிலத்தில் கல்வித் திட்டத்தில் ஆறாம் வகுப்புக்குரிய சமூக அறிவியல் பாட நூலின் ஒரு பாடத்தில், வேத காலமான கி.மு 1500 முதல் கி.மு 600 வரையில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியதாகவும் அதற்கு, வேள்விகளில் (ஹோமா, ஹவனா - அக்னிக்குரிய கரணங்கள்) மிகுதியான அளவில் உணவுப் பொருள் களையும், பால், நெய் போன்றவற்றையும் பயன்படுத்தியதே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வேள்விகளில் (யக்ஞம்) வேளாண் மைக்குப் பெரிதும் உதவிய விலங்குகள் பலியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருநாடக பிராமணர் வளர்ச்சி வாரியத்தினர் சார்பில் அதன் தலைவர் சச்சிதானந்த மூர்த்தியும் ஏனையோரும் முதல்வர் எடியூராப்பாவிடம் முறையிட்டனர். மேலும் இதே கருத்துகள் ஒன்பதாம் வகுப்புக்குரிய சமூக அறிவியல் பாட நூலிலும் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்..
“எங்கள் சமூகத்தை (பார்ப்பனர்) இழிவுபடுத்தும் வகையிலும் மாணவர்களிடையே இத்தகைய ஒரு கருத்துருவை உருவாக்கும் நோக்கத்திலும் வேண்டுமென்றே இப்பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு உடனடியாக இவற்றைப் பாட நூல்களில் இருந்து நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணடும்“ என்று வற்புறுத்தினர்.
இந்தக் கருத்தை வலியுறுத்திய மந்திராலயா மடாதிபதி சுப்புதேந்திரர், மேலும் கூறுகையில், ”சமஸ்கிருதம் புரோகிதர் களுடைய (குருமார்கள்) மொழி என்றும் அதனை சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்றும், புதிய மதங்கள் பிராமணர்களுடைய மேலாண்மையை மறுதலிக்கவே தோன்றின” என்றும், மற்றொரு பாடத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதியும் நீக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
கடந்த வியாழனன்று (17.12.2020) அன்று கருநாடக மாநில தொடக்கநிலை மற்றும் உயர்நிலைக் கலவி அமைச்சர் சுரேசுகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவின் படி , அந்தப் பாடத்தில் உள்ள இந்தப் பகுதிகள் பார்ப்பனர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, பாடத்திலிருந்து நீக்கி விட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆய்வறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அளித்திட வேண்டுமென்றும் கருநாடக மாநில கல்விசார் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் பாடநூல் கழக அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். இந்தக் கருத்துகள் தங்களுக்கு இப்போதுதான் தெரிய வந்ததாகவும், இவை தங்கள் ஆட்சிக் காலத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அவை காங்கிரசார் ஆட்சிக் காலத்தில் சேர்க்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்தை மறுத்துள்ள அறிஞரும் காங்கிரசார் ஆட்சிக் காலத்தில் பாடநூல் மீளாய்வுக்குழுத் தலைவராக இருந்தவருமான பரகூர் இராமச்சந்திரப்பா, “இப்படிக் கூறுவது மக்களாட்சி மாண்புகளை மதிக்காத நிலையாகும். பாடநூல்கள் உருவாக்கப்படும்போது அந்தந்த பாடங்களுக்குரிய வல்லுநர்களை ஆலோசித்தே உருவாக்கப் படுகின்றன. எவரும் தன்னிச்சையாகச் சேர்த்துவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
கருநாடக மாநில கல்விசார் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாதே கவுடா, ஒன்று முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாட நூல்கள் அனைத்தும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, மாறுபாடான கருத்துகள் இருப்பின் அவை குறித்த அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ப்பதோ நீக்குவதோ இந்தக் கழகத்தின் பணியல்ல என்றும் அந்தப் பொறுப்பு அரசுக்குரியதே என்றும் கூறியுள்ளார்.
அப்படி ஓர் அறிக்கை வருவதற்கு முன்பே, மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளை அரசு நீக்க முடிவு எடுத்திருப்பதாகக் கூறியுள்ள அமைச்சர் சுரேசுகுமார் அதை நியாயப்படுத்தியுள்ளார். வேள்விகளில் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தியதே வேத காலத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்திற்குக் காரணம் என்பதை ஏற்க இயலாது என்பதாலும், சமஸ்கிருதம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதாலும், இந்தக் கருத்துகள் பிராமணர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளன என்பதாலும் அவை நீக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு , பாட நூல்களில் திப்பு சுல்தானைப் பற்றி உயர்வாகக் கூறப்பட்டிருந்த பகுதிகளுக்கு பிஜேபியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அப்பாச்சு ரஞ்சன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அந்தப்பகுதிகளை பிஜேபி அரசு நீக்க முயற்சித்தபோது அது வல்லுநர் குழுவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, கரோனாவை முன்னிட்டுப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் பாடத் திட்டத்தைக் குறைப்பதாகக் காரணம் காட்டி, சங்கொல்லி ராயண்ணா, கித்தூர் ராணி சென்னம்மா. விஜயநகர் மன்னர்கள், ஏசு கிறிஸ்து, முகம்மது நபி, திப்பு சுல்தான் ஆகியோர் குறித்த பாடங்களைக் கருநாடக அரசு பாடநூல்களில் இருந்து நீக்கிவிட்டது.
இதற்கிடையில் இந்தப் போக்குக் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வரலாற்று அறிஞர்களும், பாடத்திட்டங்களை வரையறுப்பதற்கும் அவற்றை உருவாக் குவதற்கும் அரசியல் மற்றும் அரசுகளின் குறுக்கீடுகளுமில்லாத அமைப்புகளே தேவை என்று வலியுறுத்தியுள்ளனர். அரசியலாரின் தலையீடுகள் பல வகையான திரிபுகளுக்கு வழி வகுத்துவிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-A-h) கூறுகிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் சரியான பணியை ஒரு அரசே தடுப்பதா? வெட்கக்கேடு!
No comments:
Post a Comment