மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி - அது ஒரு சாமியாரை முதல்வராகக் கொண்டு நடைபெறும் ஆட்சி. அயோத்தியில் ராமர் கோவில் பாபர் மசூதி இடித்த இடத்தினையொட்டி உருவாக்கப்படுகிறது.
அயோத்தியில் ஏற்கெனவே இராம்லல்லா மற்றும் சகோதரர்கள் உருவங்கள் - சிலைகள் வணங்கப்பட்டு வருவதையொட்டிதானே அது ராமஜென்ம பூமி கலவர பூமியான வரலாறு!
இன்று ஒரு விசித்திரமான அறிவின் உச்ச செய்தி 'தி இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் வெளிவந்துள்ளது!
உலகத்தவர் இந்த செய்தியைப் படித்தால் அறிவியல் மனப்பான்மை வளர்ச்சியில் இந்தியா எவ்வளவு ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறது என்று நினைத்து, ''பெருமை''(?ப் படுவார்கள் என்பது நிச்சயம். ''அப்படி ஒரு செய்தியா?' ஆவலைத் தூண்டிக்கொண்டே போகாதீர்கள். உடனே வாசகர்களாகிய எங்களுக்குச் சொல்லுங்கள்!'' என்று கேட்கிறீர்கள்!
உ.பி.யில் - அயோத்தி போன்ற ஊர்களில் கடுங்குளிர் வாட்டுகிறது - இந்தப் பருவம் அப்படியாகையால். அதனால், இராமரும், அவரது சகோதரர்களும் குளிரால் பாதிக்கப்படக் கூடாது என்று கவலை எடுத்துக்கொண்டு, அவர்களுக்குக் கம்பளிப் போர்வை போர்த்தியதோடு மின்சார வெப்பக் கருவி (Electric Heater) யை வைத்து உள்ளே வெப்பம் ஆக்கியுள்ளார்கள்.
எவ்வளவு பெரிய ''அறிவாளிகள்'' பார்த்தீர்களா? இதுதான் நாடு கடந்த 6 ஆண்டு காலத்தில் ஒரு புதிய அரசியல் ஏற்படுத்திய வளர்ச்சியோ, வளர்ச்சி!!
டில்லியில் கடந்த 18 நாட்களாக (இன்று 19 ஆம் நாள்) - பல லட்சக்கணக்கான விவசாய பெருமக்கள் திறந்தவெளி நெடுஞ்சாலையில் டில்லி - அரியானா எல்லையில் அமர்ந்து கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, தங்களுக்கு மூன்று விவசாய சட்டங்களால் ஏற்படும் பாதிப்பைச் சுட்டிக்காட்டி, அதனை மத்தியில் உள்ள மோடி அரசு ரத்து செய்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டுமென பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலிருந்து கிளம்பி வந்து, கடுங்குளிரில் - தாக்கும் பனியில் தங்களை வருத்திக் கொண்டு ஒரு அறவழி அறப்போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றுமுதல் (14.12.2020) பட்டினிப் போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.
குளிரில் போராடும் மக்களைப்பற்றி கவலைப்படாது, அவர்களது அறப்போரைக் கொச்சைப்படுத்தும் ''அறிவியல் மேதைகள் - காவி மெய்ஞானிகள்'' இராமருக்குப் கம்பளிப் போர்வை போர்த்துகிறார்கள்.
கதைப்படி 14 ஆண்டுகள் காட்டில் வசித்த இராமன், சீதை, லட்சுமணன் போன்றோர் மரவுரி தரித்துதானே 'உலா'வினர்! கம்பளிப் போர்வையா - குளிர்காலத்தில் போர்த்திக் கொண்டனர்?
ஆனால், இன்றோ இராமர் சிலைகளுக்குக் குளிருக்காக, வெப்பம் வசதி செய்து தரப்படுவது - அசல் கேலிக் கூத்தல்லவா!
தந்தை பெரியார் சொன்னது சரிதானே?
''கடவுளை மற, மனிதனை நினை'' காரணம், மனிதனை மறந்து பக்திப் போதையினால் கடவுளையே ஏமாற்றுகிறார்கள் என்பது நினைவிற்கு வருகிறதா?

No comments:
Post a Comment