அய்யா, நானும் எனது நண்பர்களும் 29.8.1947இல் கடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு உணவு அருந்த அய்.ஆர்.ஆர்க்கு சென்றோம். அவ்விடம் சாப்பிடும் விடுதி இரண்டு இருப்பதில் ஒன்றில் ஜனங்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டும், மற்றொன்றில் ஒரு பாப்பனர் மட்டும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். நாங்கள் அந்த ஒருவர் உணவு அருந்தும் விடுதியில் உட்கார்ந்தோம். எங்களுக்கு சாப்பாடு போடப்பட்டது. நாங்கள் சாப்பிடும் போது அந்த பார்ப்பனர் எங்களை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் அவர் எழுந்து கை கூட அலம்பாமல் பக்கத்தில் குடிதண்ணீர் வைத்திருந்த டபராவில் எச்சல் கையை அலம்பிவிட்டு எழுந்து, பரிமாறினவரிடம் "எங்கே உங்கள் மானேஜர்- நான் தனியாக அல்லவா சாப்பாடு அருந்த இங்கு வந்தேன். இவர்களை ஏன் அனுமதித்தாய்? உடனே கம்பிளையின்ட் புஸ்தகத்தை எடுத்துவா" என்று உரக்கக் கத்தினார். அதற்கு அவர் எங்களுக்கு பார்ப் பனர்களுக்கு தனியாக உணவு அளிக்கும்படி உத்தரவு ஒன்றுமில்லை. வேண்டுமானால் எங்கள் மானேஜரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். உடனே மானேஜரும் வந்தார். உமது கம்பிளையின்ட் புத்தகத்தை எஸ்.எம்.ரூமுக்கு எடுத்துவா என்று கூறிவிட்டு போய்விட்டார். அந்த மானேஜரும் பல்லை இளித்து அவர் பின் தொடர்ந்தார். இவர் ஒரு ரெயில்வே(வெல்ஃபேர்) இன்ஸ்பெக்டராம். இவருக்கு உண்மையில் (வெல்பேர் இன்ஸ்பெக்டர் என்னும்) பெயர் பொருந்துமா? 'இந்து' நம்மை வகுப்புத் துவேஷிகள் என்கிறதே யார் வகுப்புத் துவேஷிகள்? அதிகாரிகள் கவனிப் பார்களாக! 'இந்து' உணருமா?
- கி.வீரமணி, விருத்தாசலம், '
விடுதலை', 29.8.1947