‘கோமாதா வறுவல்' என்று கூறினால் இந்துக்கள் மனது புண்படுமாம்!

உயர்நீதிமன்றம் கூறுகிறது


கொச்சி, நவ.30  கேரள மாநில சமூக செயற்பாட்டாளர் ரெகானா என்பவர் சமையல் நிகழ்ச்சியில் கோமாதா வறுவல் என்று கூறியதால், அப்படி கூறியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தென் இந்தியாவில்  மாட்டிறைச்சி உண்பவர்கள் கேரளாவில் அதிகம் உள்ளனர். இங்கு மாட்டிறைச்சி உணவுவகைகளில் ‘பீப் உலர்த்தியு' என்ற மாட்டிறைச்சி வறுவல் மிகவும் பிரபலமானது.


 தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவின் சமூக செயற்பாட்டாளர் ரெகானா மாட்டிறைச்சி வறுவலை ‘கோமாதா வறுவல்' என்று கூறியுள்ளார்.  இவர் அப்படிக் கூறியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டினர்.


இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரெகானா மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 இன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ‘‘கோமாதா என்ற சொல் 'புனித'மான பசுவைக் குறிக்கும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. மனுதாரர் மேற்கோள் காட்டிய வேதங்களில் உள்ளபடி பழங்காலத்தில் இருந்தே பசுக்களை தெய்வமாக மக்கள் மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இதை லட்சக்கணக்கான இந்துக்கள் நம்புவது தெரிகிறது. எனவே கோமாதா என்ற வார்த்தையை இறைச்சிக்கு நிகராகப் பயன்படுத்துவது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடியது.


மேலும் பிணை நிபந்தனைகளை ரெகானா மீறியுள்ளார். சபரிமலை வழக்கு முடிவுக்கு வரும் வரை இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை ரெகானா தெரிவிக்கக் கூடாது'' என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு பெண்கள் சபரிமலைக்கோவிலில் நுழைய நடந்த போராட்டத்தில் மிகவும் முக்கியபங்கு வகித்தவரான ரெகானா பெண்கள் உரிமை குறித்த பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இவரை ஹிந்துத்துவ அமைப்புகள் மிகவும் மோசமான வார்த்தைகளால் பொது இடங்களில் விமர் சித்துவருகின்றனர். இதற்கான பெண்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றில் இதே நீதிமன்றம் ”வார்த்தைகளில் கண்ணியத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று ஒற்றை வரியில் வழக்கை முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.


Comments