நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

நூல் அரங்கம்


நூலின் பெயர் :  திராவிட நாட்டுக் கல்வி வரலாறு


ஆசிரியர் :  திராவிடப் பித்தன்


மீள்பதிப்பாசிரியர்  :  இரா.பாவேந்தன்


வெளியீடு :  கயல்கவின்


பக்கங்கள் :  232


விலை  :  ரூ.250/-


 


திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என், என்று அழைக்கப்பட்ட என். விஜயரங்கம் நடராஜனால் நடத்தப்பட்ட ‘திராவிடன்’ வார இதழில் திராவிடப் பித்தன் என்பவரால் “ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம்’’ என்னும் தலைப்பில் எழுதப் பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் “திராவிட நாட்டுக் கல்வி வரலாறு’’ என்னும் நூல்.


தமிழ்நாடு கல்வித்துறையில் இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணம் திராவிட இயக்கமா? பார்ப்பனரல்லாத மக் களுக்கு பார்ப்பனர்களா கல்வி மறுத்தார் கள்? என்று பத்தாம் பசலித்தனமாக கேள்விகள் கேட்கும் இளைஞர்களுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன், ஆவ ணமாக வெளிவந்துள்ள நூல்.


இந்த நூலை பகுத்தறிவு எழுத்தாளர் அருணா இராசகோபால் அவர்களின் புதல்வர் இரா.பாவேந்தன் மீள் பதிப்புச் செய்துள்ளார்.


நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் “ஆரம்பக் கல்வி சீர்திருத்தம்" பற்றி எழுதுவதற்கு அப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்க்க நேரிட்டது. இப்படி ஆராய்ந்து பார்த்ததின் பயனாய் நம் திராவிட நாட்டின் கல்விச் சரித்திரத்தையே எழுத வேண்டிய பெரும் வேலை ஏற்பட்டு விட்டது. இந்தியக் கல்விச் சரித்திரத்தை எழுதியுள்ளவர்கள் அத்தனை பேரும் திராவிட நாட்டுக் கல்விச் சரித்திரத்தைப் பற்றித் தம் நூல்களில் மாதிரிக்குக் கூட ஒரு வார்த்தையும் எழுத வில்லை. அவர்கள் கூறியிருப்பதெல்லாம், புகழ்ந்து எழுதியிருப்பதெல்லாம் சமஸ் கிருதக் கல்வியைப் பற்றியும் பார்ப்ப னர்களின் கல்வி ச்சரித்திரத்தைப் பற்றிமே இருக்கின்றன. அவர்கள் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்துள்ள நூல்களெல்லாம் சமஸ்கிருத நூல்களாகவே உள்ளன. அவர்கள் கூறும் பண்டைக்கால இந்தியக் கல்விச் சரித்திரம் எல்லாம் சமஸ்கிருதக் கல்விச் சரித்திரமாகவே உள்ளது. ஆகவே, இவர்களால் எழுதப்படாத, எழுத விருப்பப் படாத திராவிட நாட்டுக் கல்வி வரலாற்றை, அவ்வரலாறு புகழத்தக்கதொன்றாக இருப் பினும் இகழத்தக்கதொன்றாக இருப்பினும் எழுதிவிட வேண்டும் என்கிற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது,’’ என்று நூல் எழுதப் போந்ததன் அவசியம் குறித்து கூறியுள்ளது நூலின் முக்கியத்துவத்தை உணர்த்தவல்லது.


மவுரிய ஆட்சிக்காலம் பொதுமக்கள் கல்வியின் வளர்ச்சிக் காலமாக இருந்து வந்தது. பண்டைக் காலத்தில் கல்வி நிலையானது சிறப்புற்றிருந்தது என்பதற் குத் தொல்காப்பியம், சங்க நூல்கள் ஆகிய வற்றைச் சான்றாகக் கொண்டு கூறியுள்ள பாங்கு போற்றற்குரிய ஒன்று. மேலும்,


“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்


கீழ்ப்பா லொருவன் கற்பின்


மேற்பா லொருவனும் மவன்கட் படுமே’’


(புறநானூறு 183)


என்ற பாடலின் மூலம் அக்காலத்தில் மேல்குலத்தார், கீழ்குலத்தார் என்று வேறுபாடுகள் இருந்த சூழ்நிலையிலும் கீழ்குலத்தவரும் கல்வியை விரும்பிக் கற்பதானாலேயே ஒருவாறு சமூக உயர்வடைய வழி இருந்ததென்பதும் தெரியவரும். அக்கால இவ்வுண்மை யையும் தற்கால மக்கள் நிலைமையையும் கல்வித் துறையிலும் கம்யூனல் ஜி.ஓ. என்பது இன்றியமையாத ஒன்றாக வேண்டப்படுவதையும் ஒப்புநோக்கிப் பார்க்கத்தக்கதாகும்’’ என்று கூறியுள்ள கூற்று இன்றைக்கும் பொருந்தக்கூடிய, ஒன்றாக உள்ளதை உணர முடிகிறது.


வரலாற்றுக்கு முற்பட்ட பழங்காலத் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்ற மக்களாக இருந்தனர். தொல்காப்பியர் காலத்திலும் திராவிடர்கள் கல்வி அறிவு பெறாத மாக்களாகவே வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்துவரும் இந்த வஞ்சக ஏற்பாட்டை உடைத்தெறிந்து புத்துலகப் பாதையை அமைத்துக் கொடுப்பதே திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதனை இலக்கியச் சான்றுகளுடனும், வரலாற்றுத் தரவுகளுடனும் வகைப்படுத்தியுள்ளார்.


இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட த்தில் தான் பெண் கல்வி போற்றப்பட்டு வந்தது என்பதற்கு அப்பப்பா, எவ்வளவு சான்றுகள்...!


ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோர் என்பவர்கள் யார்? அவர்களின் உறவுகள் எப்படிப்பட்டது என்பது பற்றியும்,


“கற்கை நன்றே கற்கை நன்றே


பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்னும் மூதுரை மூலம் இரந்தும் கல்வி கற்பதில் முனைப்புக் காட்டியவர்கள் திராவிடர்களே என்று நிறுவியுள்ளார்.


வைதிகம் அதாவது பார்ப்பனியம் மனுவை முன்வைத்து அரசு அதிகாரத்தின் துணையுடன் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி மறுத்த சூழ்ச்சியையும், அதனை முறியடித்து பார்ப்பனரல்லாத மக்கள் கல்வி பெற பவுத்தம், சமணம் ஆற்றிய அரும்பணிகள் ஆச்சரியப்பட வைக்கிறது.


இன்றும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் கிறித்துவர்கள் தேச விரோதிகள் என்றும், குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி மெக்காலே கல்வி என்றும் செய்துவரும் பிரச்சாரம் உண்மைக்கு மாறானது என்பது, “உள்நோக்கம் கிறித்துவ மதப் பிரச்சாரமாக இருந்தது என்றாலும், பார்ப்பனர்களின் வஞ்சக சூழ்ச்சியின் வலையறுத்து அனைத்து மக்களுக்கும் கல்வி அறிவு வழங்கிய கிறித்துவர்களின் கல்விப் பணிகள்" பற்றிய செய்திகளைப் படிக்கும்போது உணரமுடிகிறது.


19ஆம் நூற்றாண்டில் கல்வி நிலை குறித்துக் கூறவந்த நூலாசிரியர், அக்காலத் தில் சிறந்து விளங்கிய திராவிடப் பெருமக் களான பச்சையப்ப  முதலியார், கோவிந்த நாயக்கர், செங்கல்வராய நாயக்கர் போன்றோரின் அறச் சிந்தனையால் கல்வி வளர்ச்சி மிகுந்து வளர்ந்த விதத்தையும், அதற்கு மேல்நாட்டு அய்ரோப்பியர்கள் செய்த உதவியையும் அனைவரும் அவ சியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


அடிமைகளை உருவாக்கும் கல்வி மெக்காலே கல்வி என்றும், இது இந்தியர்களை படு சூன்யங்களாக ஆக்கிவிட்டது. இந்திய மொழிகளை அழித்துவிட்டது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்,  நாக்கூச்சமின்றிக் கூறுவதற் குக் காரணம் “சமஸ்கிருத மொழிக்கல்வி இந்திய நாட்டின் கல்வி முறையாக அமைவதற்கு மெக்காலே எமனாக வந்து சேர்ந்தானே என்ற வயிற்றெரிச்சலே காரணம் என்ற வரலாற்றை வாசிக்கும்பொழுது இன்றைக்கு திராவிடர் கழகம் - அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - தேசியக் கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.


இதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்க முன்னோடிகளான டாக்டர் சி. நடேசனார், டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர், பானகல் அரசர், கே.வி.ரெட்டி ஆகியோர் திராவிடர்கள் கல்வி பெற ஒல்லும் வகை யெல்லாம் எப்படி உழைத்தனர் என்பத னையும், இவையெல்லாவற்றையும்விட நூலின் முற்பகுதியில் பதிப்பாசிரியர் பாவேந்தனின் “நூற்றாண்டுகள் கடந்த அறிவு வன்முறை; ஆதிக்க மனுவை முன்வைத்து சில குறிப்புகள்’’ என்று கொடுத்துள்ள கட்டுரை - நூலுக்கு முத்தாய்ப்பு!  ஆம், பேரா. தொ.பரமசிவம் அவர்கள் கூறுவதுபோல் “இந்த நூல் கடந்த காலத்தின் வரலாற்றுச் சோகங்களையும் நாம் அவற்றை மெல்ல மெல்ல வென்று வந்த உண்மையினையும் பேசுகிறது.’’


எனவே, காலத்தால் கிடைத்தற்கரிய கருத்துப் பெட்டகமாக இந்நூலை திரா விடர் இன இளைஞர்களும், சமூகநீதிக் களத்தில் நிற்கும் போராளிகளும் அவசியம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய (மன்னிக்க) சுவாசிக்க வேண்டிய பண்பாட்டு ஆவணம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.


-  பூவை புலிகேசி B.Sc., B.L.,


வழக்குரைஞர்


No comments:

Post a Comment